full screen background image

மிஸஸ் அண்ட் மிஸ்டர் – சினிமா விமர்சனம்

மிஸஸ் அண்ட் மிஸ்டர் – சினிமா விமர்சனம்

நடிகை வனிதா விஜயகுமார் இந்த படத்தை தானே தயாரித்து அதில் ஹீரோயினாகவும் நடித்து படத்தை இயக்கமும் செய்திருக்கிறார்.

படம் தாய்லாத்தில் தொடங்குகிறது. இந்தியாவில் முடிகிறது.

40 வயதாகும் வனிதா விஜயகுமார் 45 வயதான ராபர்ட் திருமணம் செய்து 10 வருடங்கள் ஆகிறது. இருவருக்கும் குழந்தைகள் இல்லை. இந்த நேரத்தில் வனிதாவுக்கு ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்படுகிறார். இதற்கு ராபர்ட் ஒத்துக் கொள்ள மறுக்கிறார். முடியாது என்று தடுக்கிறார். ஆனாலும் ஏதோ ஒரு நாள் எக்குத்தப்பாக ராபர்ட் விளையாண்டுவிட கரு வனிதாவின் வயிற்றில் உண்டாகிவிடுகிறது.

இந்தச் செய்தியைக் கேட்டவுடன் ராபர்ட் கோபத்தில் வனிதாவை நோக்கி வார்த்தைகளை வீச… அதனால் பெரிதும் மனதளவில் பாதிக்கப்படுகிறார் வனிதா. இதனால் ராபர்ட் இடம் இருந்து விலகி தன்னுடைய பூர்வீக ஊரான ஹைதரபாத்துக்கு வருகிறார்.

இப்போது ராபர்ட் தாய்லாந்தில் இருக்க வனிதா ஹைதராபாத்தில் வந்து தன்னுடைய மாமா வீட்டில் தங்கியிருக்கிறார். அங்கு நடக்கும் குளறுபடிகளால் அவரும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்.

கடைசியில் நிலைமை என்ன ஆகிறது? வனிதாவுக்கு குழந்தை பிறந்ததா? இல்லையா வனிதாவை காப்பாற்றினார்களா? ராபர்ட்டும், வனிதாவும் ஒன்று சேர்ந்தார்களா…? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை

45 வயது ஹீரோ 40 வயது ஹீரோயின் என்ற கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு ஏற்றார்போல் மிகவும் பொருத்தமாக இருக்கிறார்கள் வனிதாவும் ராபர்ட்டும்.

இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். இணைந்தே பேசுகிறார்கள். இணைந்தே கலகம் செய்கிறார்கள். அனைத்தையும் ரசிக்க முடிகிறது. வனிதாவின் நடிப்பில் குழந்தைக்கான ஏக்கத்துடன் அவர் பேசுகின்ற பேச்சுக்களும், அந்தக் காட்சிகளில் அவருடைய நடிப்பும் மிக இயல்பாகவே இருக்கிறது.

அவ்வப்பொழுது தன்னுடைய அம்மா ஷகீலாவை அவர் கடிந்து கொள்ளும்விதமும் மற்றவர்களிடம் அவர் பேசுகின்ற அந்த வேக வேகமான டயலாக் டெலிவரிகளும் கை தேர்ந்த ஒரு நடிகை வனிதா என்பதையே காட்டுகிறது.

அருண் ஆக நடித்திருக்கும் ராபர்ட் வனிதாவுக்கு ஈக்குவலாக தன்னுடைய நடிப்பை காண்பித்து இருக்கிறார். வனிதா உடன் ஜோடியாக நடிக்க வேறு எந்த நடிகரும் முன் வந்திருக்க மாட்டார்கள். அதனால் ராபர்ட் நடித்திருக்கிறார் போலிருக்கிறது என்று நாம் நினைத்துக் கொள்ளலாம்.

கிளைமாக்ஸ் காட்சிக்கு முந்தையவரையிலும் ராபர்ட்டின் இயல்பான குணமாக எப்பொழுதும்போல் இருப்பது போலவே அவருடைய நடிப்பும், டயலாக் டெலிவரியும், உடல் மொழியும் அமைந்திருக்க நமக்குள் எந்த ஒரு பீலிங்கும் வரவில்லை. கிளைமாக்ஸ் சீனில் மட்டுமே வந்து மனைவியை பார்த்து கதறுகிறார். தன்னுடைய குழந்தையை பார்த்து ஆனந்த கண்ணீர் விடுகிறார். அவ்வளவுதான்..

வனிதாவின் அம்மாவாக தெலுங்கு பேசும் பெண்ணாக நடித்திருக்கும் ஷகிலா அவருடைய வயதான தோற்றத்தினால் அம்மாவாக்கப்பட்டிருக்கிறார். ஆனாலும், பெரிதாக நடிப்பில்லை அந்தந்த திரைக்கதைகளுக்கு ஏற்ப தன்னுடைய வசனத்தை பேசியிருக்கிறார். அவ்வளவுதான்.

வனிதாவின் தங்கையாக நடித்திருக்கும் ஆர்த்தி, அப்பாவாக நடித்திருக்கும் ரவிகாந்த், கூடயே இருந்து குழி பறிக்கும் கணேஷ், சில காட்சிகளில் மிக அழகாக தன்னுடைய முகத்தை வைத்துக்கொண்டு வசனத்தை தமிழில் தெள்ளத் தெளிவாக உச்சரித்து நடித்திருக்கும் பாத்திமா பாபு, வனிதாவின் மாமாவாக நடித்திருக்கும் ஸ்ரீமன் இவருடைய அப்பாவான அனுமோகன், வேலைக்கார பெண்ணாக இருக்கும் கும்தாஜ் மற்றும் அனைவருமே ஒரு நகைச்சுவை படத்திற்கு எப்படி நடிப்பை காண்பிக்க வேண்டுமோ அப்படி நடித்து காண்பித்திருக்கிறார்கள்.

படத்தின் பெரும்போது தாய்லாத்தில் நடந்திருப்பதால் அதன் வெளிப்புற காட்சிகளை இன்னமும் அழகாக காட்டி இருக்கலாம். தாய்லாந்தில் எத்தனையோ இடங்கள் இருக்கின்றன. ஆனால் அதையெல்லாம் காட்டாமல் வெறுமனே சில இடங்களை மட்டுமே காட்டி படமாக்கி இருப்பதால் நமக்கு சப் என்று இருக்கிறது.

ஹைதராபாத் வந்து இறங்கி இருக்கிறார்கள் என்பதை வசனத்தில் சொல்லிவிட்டு சென்னையிலேயே படத்தை ஷூட் செய்து இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது இப்படி எல்லாம் படம் எடுத்தால் எப்படிங்கோ…?

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் என்றாலும் பின்னணி இசையில் காமெடியை வரவழைப்பதற்காக அதன் டெம்ப்ளேட் இசையை பல இடங்களில் இசைக்க வைத்திருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. போகப் போக நமக்கே அது கடுப்பைக் கிளப்புகிறது.

ராஜாவின் எவர்கிரீன் பாடலான ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தின் ராத்திரி நேர’ அந்த பாடல் காட்சியை கிரனை வைத்து படமாக்கி இருக்கிறார்கள். இளசுகள் நிச்சயம் அதை ரசிப்பார்கள் என்று இவர்களே முடிவு கட்டிவிட்டார்கள் போலும்!

ஒரு பெண் இயக்குநர் இரண்டாவது படமாக இந்த படத்தை கொடுத்திருக்கிறார். இதற்கு இவ்வளவு அதிகமான அடல்ட் கன்டென்ட் வைத்திருக்க வேண்டுமா என்ற கேள்வியும் நமக்குள் இருக்கிறது.

குழந்தை வேண்டுமா? வேண்டாமா என்கிற வாக்குவாதத்தின்போதும், பேச்சுவார்த்தையின்போதும் வனிதாவும் ராபர்ட்டும் பேசுகின்ற பல பேச்சுக்கள் எல்லை மீறிப் போயிருக்கின்றன. டபுள் மீனிங் இல்லை… ட்ரிபிள்  மீனிங் டயலாக் ஆகவே இந்தப் படத்தின் வசனங்கள் இடம் பெற்று இருப்பது முகத்தை சுளிக்க வைத்திருக்கிறது.

40 வயதுக்கு மேல் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வதினால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி திரைப்படம் பேசினாலும், அதில் இருக்கின்ற பிளஸ் மைனஸ்களை இன்னமும் தெளிவாக சொல்லியிருக்க வேண்டும்.

அப்படி சொல்லாமல் ஒன் சைடாக ஹீரோயினுக்கு ஏற்றார் போல திரைக்கதை அமைத்து அதற்கு பொருத்தமாகவே வசனங்களையும் வைத்திருக்கிறார் இயக்குநர் வனிதா.

படத்தின் முற்பகுதியில் தாய்லாந்தில் நடைபெறும் காட்சிகள் அனைத்துமே ஒரு ரசனையாக இருக்கிறது. ஆனால் அப்படியே ஹைதராபாத்துக்கு இடம் பெயர்ந்த இரண்டாம் பாதியில் முழுவதுமே படு மொக்கை. அதுவும் அனு மோகனின் வீட்டில் நள்ளிரவில் கரண்ட் கட் ஆன பின்பு நடக்கின்ற காட்சிகள் அத்தனையும் படு சொதப்பல்.

மேலும் வீட்டில் அனுமோகன், கும்தாஜ் இருவரையும் வைத்து செய்திருக்கும் காமெடி ஒரு கிரகம். 2000-ல் இது போன்ற காமெடிகளை பார்த்து பார்த்து சலித்து போனது நமக்கு. அதே காமெடியை மீண்டும் அப்படியே கொண்டு வந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர். அவ்வளவு கற்பனை வறட்சி போலும்!

ஒரு நல்ல கதையை எந்த அளவுக்கு கெடுக்க முடியுமோ, அந்த அளவுக்கு கெடுத்து வைத்திருக்கிறார் இயக்குநர்.

இந்த மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தை குடும்பத்துடன் பார்க்க முடியாது. நிச்சயம் தனியாகப் போய்தான் பார்க்க வேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் செல்லலாம்.

RATING : 2.5 / 5

Our Score