full screen background image

தியேட்டர்கள் மூடப்பட்டதால் முடங்கிய திரைப்படங்கள்..!

தியேட்டர்கள் மூடப்பட்டதால் முடங்கிய திரைப்படங்கள்..!

கொரோனா வைரஸ் தாக்குதலின் 2-வது அலை மிகத் தீவிரமாக தற்போது நாடு முழுவதும் பரவி வருவதால் தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் நேற்றைக்கு மூடப்பட்டன. இதனால் அடுத்து வரக் கூடிய நாட்களில் வெளியாவதாக இருந்த பல தமிழ்த் திரைப்படங்கள் முடங்கிவிட்டன.

பொன்ராம் இயக்கத்தில் சத்யராஜ், சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்த ‘எம்.ஜி.ஆர். மகன்’, விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ள மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான ‘தலைவி’ ஆகிய படங்கள் கடந்த 23-ந் தேதி வெளியாக இருந்த நிலையில் தற்போது தியேட்டர்கள் மூடப்பட்டதால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதுபோல் விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார்’, ‘லாபம்’, சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’, சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’, விக்ரம் பிரபுவின் ‘டாணாக்காரன்’, அதர்வா நடித்துள்ள ‘குருதி ஆட்டம்’, ஆர்யாவின் ‘சர்பட்டா பரம்பரை’, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘கிரேட் இந்தியன் கிச்சன்’ உள்ளிட்ட படங்களும், 50-க்கும் மேற்பட்ட சிறு பட்ஜெட் படங்களும், அடுத்தடுத்து திரைக்கு வர தயாராக இருந்த நிலையில் தியேட்டர்களை மூடியுள்ளதால் முடங்கி உள்ளன.

கார்த்தி நடித்த சுல்தான்’ படமும், தனுஷ் நடித்த ‘கர்ணன்’ படமும் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய நிலையில் அவைகள் நிறுத்தப்பட்டு கிடைத்து வந்த லாபத்தில் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

இப்போது இந்தப் படங்களெல்லாம் அடுத்துத் தியேட்டர்கள் திறக்கப்படும்போது வெளியாகுமா.. அல்லது ஓடிடிக்குப் போகுமா என்பது அடுத்து வரக் கூடிய கொரோனா பரவலின் வீச்சைப் பொறுத்துதான் அமையும்.

கொரோனா பரவல் தடுக்கப்பட்டு மீண்டும் பலி எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் குறையும்பட்சத்தில் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு சட்டத்தை விலக்கிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுவரையிலும் திரைப்படத் துறையின் முடக்கம் என்பது தவிர்க்க இயலாததுதான்..!

Our Score