எங்கே மெளனிகாவை இன்றைக்கும் வரவிடாமல் செய்துவிடுவார்களோ என்ற பதைபதைப்பில் இருந்த மொத்த ஊடகத்தினரையும், திரையுலகப் பிரமுகர்களையும் இன்று காலையில் ஆசுவாசப்படுத்தும்விதமாக ஒரு செய்தியுடன் இயக்குநர் இமயம் பாரதிராஜா வெகு சீக்கிரமாகவே அங்கு வந்து ஆஜரானார்.
நேற்றைய நாள் இரவில் நீண்ட நேரம் மெளனிகா பற்றிய பஞ்சாயத்து, பாரதிராஜா தலைமையில் நடந்திருக்கிறது.இன்று காலையும் திரையுலக முக்கிய பிரமுகர்கள் பெப்ஸி தலைவர் இயக்குநர் அமீரையும், இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமனையும் தொடர்பு கொண்டு இது பற்றி குறைபட்டிருக்கிறார்கள். கடைசியாக பாலுமகேந்திராவின் குடும்பத்தினரும், இயக்குநர் பாலாவும், “வந்து பார்த்துட்டு போகச் சொல்லுங்க.. எங்களுக்கொண்ணும் ஆட்சேபணை இல்லை..” என்று சொல்லியிருக்கிறார்கள்..
இன்று காலை 9.30மணியளவில் சில பெண் தோழிகளுடன், மெளனிகா தனது கணவரின் உடலைப் பார்க்க வந்தார்.. வரும்போதே உடல் குலுங்கிய நிலையில் இருந்த அவர் கண்ணீர்விட்டு கதறினார்.. யாரும் அவரை தடுக்கவில்லை. எதுவும் கேட்கவில்லை.. ஆனால் தூக்கும்வரையில் இருப்பார் என்று நினைக்கையிலேயே 2 நிமிடங்களில் அழுதபடியே திரும்பிச் சென்றுவிட்டார்..
அகிலாம்மா மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கும் மெளனிகா அதற்கு மேல் இருந்து அவர்களை அசெளகரியப்படுத்த விரும்பவில்லை என்று மெளனிகாவின் நலம் விரும்பிகள் கூறினார்கள்..
எது எப்படியிருந்தாலும் குடும்பத்தில் சம உரிமையுள்ள ஒருவருக்கு அது மறுக்கப்பட்ட சூழல் ஊருக்கே நியாயம் கற்பிக்கும் திரைத்துறையைச் சேர்ந்தவர்களாலேயே உருவாக்கப்பட்டது என்பதென்னவோ உண்மை..!
அடுத்தடுத்த வாரங்களில் இது தொடர்பான பத்திரிகை பேட்டிகள்.. மறுப்புகள் என்று நிறைய வலம் வரப் போவது உறுதி..!