full screen background image

சின்னத்திரை இயக்குநர் தளபதி மீது பணம் கையாடல் புகார்..! சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம் நடவடிக்கை..!

சின்னத்திரை இயக்குநர் தளபதி மீது பணம் கையாடல் புகார்..! சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம் நடவடிக்கை..!

தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரான எட்வர்ட் ராஜ் என்ற தளபதி, சங்கப் பணத்தில் 60 லட்சம் ரூபாய்க்கும் மேலாக கையாடல் செய்துள்ளதாக அந்த சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகள் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தினர் கொடுத்துள்ள புகாரில். “தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம் கடந்த 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது கடந்த 12.05.2024-ம் தேதியில் சங்கத்தின் புதிய தேர்தல் நடைபெற்று புதிய நிர்வாகிகள் இயக்குநர் மங்கை அரிராஜன் தலைமையில் 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டோம்.

14.05.2024-ம் தேதியில் சங்க விதி மற்றும் சட்ட விதிகளின்படி முன்னாள் நிர்வாகத்தினர் வரவு செலவு கணக்கு உட்பட வங்கிக் கணக்கு விபரம் மற்றும் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கு விபரம், மற்றும் அனைத்து ஆவணங்களையும் புதிய நிர்வாகமாகிய எங்களிடம் ஒப்படைக்காததால் 15.05.2024-ம் தேதி உடனடியாக ஒப்படைக்கும்படி முந்தைய தலைவருக்குக் கடிதம் எழுதினோம்.

அதைத் தொடர்ந்தும் முன்னாள் நிர்வாகத்தினர் கணக்கு, வழக்குகளை ஒப்படைக்கவில்லை. ஆனால் புதிய நிர்வாகம் வெற்றி பெற்று பொறுப்பேற்றுக் கொண்டதும் முன்னாள் தலைவர் தளபதி, முன்னாள் பொதுச் செயலாளர் சி.ரங்கநாதன், முன்னாள் பொருளாளர் அரவிந்த்ராஜ் ஆகியோர் சட்டத்திற்குப் புறம்பாக கையெழுத்திட்டு 15.05.2024 அன்று சங்கத்தின் பேங்க் ஆப் பரோடா வங்கிக் கணக்கில் இருந்த 17,000 ரூபாயை செல்ப் என்று குறிப்பிட்டு எடுத்துக் கொண்டார்கள்.

இது சட்டப்படி தவறு என மேற்கண்ட மூவர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என கடிதம் எழுதி விளக்கம் கேட்டோம். ஆனால் அவர்களிடமிருந்து முறையான பதில் இல்லை.

பிறகு 20.05.2024 அன்று மீண்டும் கணக்கு மற்றும் ஆவணங்களை ஒப்படைக்குமாறு கடிதம் எழுதினோம். அப்போதும் ஆவணங்கள் மற்றும் சங்க வங்கிக் கணக்கு மற்றும் அறக்கட்டளை கணக்குகளை ஒப்படைக்கவில்லை. மீண்டும் பல தடவை நேரிலும், போனிலும் கேட்டபோதும் ஒப்படைக்காமல் தொடர்ந்து ஏமாற்றி வந்தனர்.

முன்னாள் பொருளாளர் பி.அரவிந்த்ராஜிடம் செயற்குழுவில் இது குறித்துக் கேட்டபோது தனக்கு எதுவும் தெரியாது. எந்த வங்கியில் சங்கத்திற்குக் கணக்கு இருக்கிறது என்பதுகூட எனக்குத் தெரியாது என்றார்.

சங்கத்தின் மேலாளர் அமுதா அவர்களிடம் கேட்டபோது, தேர்தலுக்குக் கட்டிய டெபாசிட் தொகை உட்பட அனைத்து வசூலாகும் ரொக்கப் பணத்தையும் முன்னாள் தலைவர் தளபதி தன்னிடமிருந்து உடனடியாக வாங்கிச் சென்றுவிடுவார் என எங்களுக்குக் கடிதம் மூலமாக விளக்கம் அளித்தார்.

இது முழுக்கவும் செயற்குழு கூட்டத்தின் மினிட்ஸ் புத்தகத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பற்றி மீண்டும் விளக்கமாக 31.05.2024 அன்று கடிதம் எழுதி கேட்டோம்.

முன்னாள் நிர்வாகத்தினர் கணக்குகளை ஒப்படைக்காமல் தொடர்ந்து ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்ததால் மேற்கண்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க 09.06.2024 அன்று நடந்த செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையும் குறிப்பிட்டு அவர்களுக்கு 21.06.2024 அன்றைய தேதியில் இரண்டு நாட்களுக்குள் கணக்கு, வழக்குகளை ஒப்படைக்கத் தவறினால் காவல்துறை ஆணையர் அவர்களிடம் புகார் செய்வோம் என்று நினைவூட்டல் கடிதம் எழுதினோம்.

பிறகு 2 நாட்கள் கழித்து வரவு செலவு என நான்கே வரிகளில் சங்கக் கணக்கை தந்தனர். அதில் முன்னாள் தலைவர், முன்னாள் பொருளாளர் மட்டுமே கையெழுத்திட்டிருந்தனர். அவர்கள் இருவரும் கொடுத்தக் கணக்கில் தனக்கு உண்மை தன்மை தெரியவில்லை என்பதால் தான் கையெழுத்திடவில்லை என்று முன்னாள் பொதுச் செயலாளர் சி.ரங்கநாதன் கூறினார்.

அப்போதும் அறக்கட்டளையின் கணக்கைத் தராமல் இழுத்தடித்தனர். பிறகு நாங்கள் வங்கியில் ஸ்டேட்மெண்ட்டை பெற்று வரவு, செலவு கணக்குகளை ஆராய்ந்தபோது பல லட்சங்கள் கையாடல் செய்யப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்தோம்.

உடனே இவர்கள் பெற்ற ரசீதுகளை வைத்து ஆராய்ந்தபோது, ரொக்கமாகப் பெற்ற பல லட்சம் ரூபாய்கள் வங்கிக் கணக்கிற்கே செல்லவில்லை என்பதை அறிந்தோம்.

முன்னாள் தலைவரான தளபதி 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களிடம் பல லட்சங்களைப் பெற்று அதை தன்னுடைய வாட்ஸ்அப், ஜிபேயில் வாங்கியுள்ளார் என்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தோம்.

அதைப் பற்றி அவரிடம் கேட்டபோது,  முன்னாள் தலைவர் தளபதி, “ஆமாம். வாங்கினேன்” என்று ஒப்புக் கொண்டார். “அந்தப் பணம் எங்கே?” என்று கேட்டபோது அதற்கு முறையான பதில் தரவில்லை.

பிறகு சங்கத்தில் உறுப்பினராக சேர்ப்பதாக ரசீதுகூட தராமல் சில பேரிடம் தன்னுடைய ஜிபே மூலமாக முன்னாள் தலைவர் பணம் பெற்றுள்ளார். இதில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் தக்க ஆவணங்களோடு எங்களிடம் புகார் தந்துள்ளனர். 

இந்த வகையில் முன்னாள் தலைவர் தளபதி, உறுப்பினர்களிடம் ரொக்கமாகவும், மற்றும் தன்னுடைய வாட்ஸ்அப், ஜிபே மூலமாகவும் பெற்ற 47,98,130 ரூபாய், சங்கத்தின் வங்கிக் கணக்கில் டெபாசிட் ஆகவில்லை என்று சங்கத்தின் ஆடிட்டர் சான்றிதழ் கொடுத்துள்ளார்.

மேலும் சங்கத்தின் பெயரைப் பயன்படுத்தி தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்களின் அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து கலை நிகழ்ச்சி நடத்துவதாக Joy Film Box Entertainment என்ற அமைப்பிடம் ஒப்பந்தம் கையெழுத்திட்டு பல லட்சங்களைப் பெற்றுள்ளனர்.

மேலும் இதே அறக்கட்டளை மூலம் பல தனி நபர்களிடம் பல இலட்சங்களைப் பெற்றுள்ளார்கள். அந்தக் கணக்குகளையும் இதுவரையிலும் ஒப்படைக்காமல் ஏமாற்றி வருகின்றனர். மொத்தமாக சுமார் 60 லட்சம் ரூபாய் அளவுக்கு இவர்கள் மோசடி செய்து ஏமாற்றியுள்ளனர்.

இத்தனை மோசடிகள் பற்றித் தெரிந்தும் அதைப் பற்றிக் கண்டு கொள்ளாமல் இந்த மோசடிக்கும், ஏமாற்று வேலைக்கும் முன்னாள் பொருளாளர் அரவிந்த்ராஜ், முன்னாள் தலைவருக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டுள்ளார்.

சங்கத்திற்கும், சங்க உறுப்பினர்களுக்கும் மோசடி செய்த இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்துப் பணத்தை மீட்டுத் தருமாறு மிகவும் தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறோம்..” என்று குறிப்பிட்டுள்ளனர்.

 

Our Score