‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் தேஜ். முதல் படத்திலேயே பலரது பாராட்டைப் பெற்ற இவர் அடுத்ததாக நடித்தப் படம் ‘காந்தம்’. மேலும் கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ‘காதலுக்கு மரணமில்லை’ படத்திலும் தேஜ் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம்தான் தேஜ் நடித்த முதல் படம். இப்படம் வெளியாகும் முன்பே, தேஜின் நடிப்பு திறமையைப் பார்த்து பல படங்களின் வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. அந்த வகையில், தற்போது தேஜ் நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘விண்ணைத் தொடு’. இப்படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று முடிந்துவிட்டது. மீதமுள்ள 10 சதவீத படப்பிடிப்பு சிங்கப்பூரில் அடுத்த மாதம் தொடங்க உள்ளது.
இதற்கிடையில், தேஜ், புதிய படம் ஒன்றில் முழுக்க முழுக்க மாறுபட்ட, இதுவரை எந்த ஹீரோவும் ஏற்காத ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘மொழிவது யாதெனில்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் தேஜ் ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்டாக நடிக்கிறார். இதற்காக அவர், பலரது குரலில் பேசுவதற்காக பல நாட்கள் பயிற்சி மேற்கொண்டு நடிக்கத் தொடங்கியுள்ளார். ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் குரலில் மட்டும் இன்றி, அவர்கள் பேசும் போது அவர்களது பாடி லேங்வேஜ் எப்படி இருக்கும்.. போன்ற விஷயங்களையும் உண்மையான மிமிக்ரி ஆர்டிஸ்டுகளுடன் பழகி, நுணுக்கமாக அறிந்து வருகிறார் தேஜ், இப்படத்தில் மிமிக்ரி என்ற விஷயத்துடன், அதிரடியான சண்டை காட்சிகளிலும் நடித்துள்ளார்.
இப்படத்தை தயாரிக்கும் மாணிக்கவாசன், ஒரு கராத்தே வீரர் என்பதால், ஆக்சன் படத்தை தயாரிக்க ஆர்வமாக இருந்துள்ளார். அதற்கு ஏற்ப கதையும், ஹீரோவும் கிடைத்துவிட படத்தை படு ஜோராக தொடங்கிவிட்டார். மிமிக்ரி செய்ய பல நாட்கள் பயிற்சிகளை மேற்கொண்ட தேஜ், சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடிக்கவும், பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு, ஒவ்வொரு சண்டை காட்சிகளிலும் பல ரிஸ்க்கான காட்சிகளை ரியலாக செய்து, ஸ்டண்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வம் உள்ளிட்ட பட குழுவினரை அசத்தி வருகிறார். இப்படத்தை கோபால் என்பவர் இயக்குகிறார்.
நடனம், சண்டை காட்சிகள், காதல் காட்சிகள், நடிப்பு என அனைத்திலும் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி வரும் தேஜுக்கு பல வாய்ப்புகள் குவிகின்றன. இருப்பினும், நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் தேஜ், நிதானமாக கதை தேர்வில் ஈடுபடுகிறார். அந்த வகையில் ‘மொழிவது யாதெனில்’ படத்திற்குப் பிறகு தேஜ், மாஸ்டர் மகேந்திரனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘விரைவில் இசை’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் கதையும், தேஜின் கதாபாத்திரமும் வித்தியாசமானதாக அமைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க உள்ளது.