பேயிடம் மாட்டிக் கொள்ளும் உதவி இயக்குநரின் கதைதான் ‘மெர்லின்’

பேயிடம் மாட்டிக் கொள்ளும் உதவி இயக்குநரின் கதைதான் ‘மெர்லின்’

ஜே.எஸ்.பி.பிலிம்ஸ் ஸ்டுடியோ சார்பில் ஜே.எஸ்.பி.சதீஷ் பெரும் பொருட் செலவில் தயாரித்திருக்கும் புதிய படம் ‘மெர்லின்’. இதில் விஷ்ணுபிரியன் ஹீரோவாக நடிக்கிறார். அஸ்வினி ஹீரோயினாக அறிமுகமாகிறார். நட்புக்காக தினேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தி்ல நடித்துள்ளார்.

மேலும்,  ‘ஆடுகளம்’ முருகதாஸ், லொல்லு சபா ஜீவா, சிங்கம் புலி, மனோபாலா, தங்கர்பச்சான், மு.களஞ்சியம், ரிசா, ‘நான் மகான் அல்ல’ ராமச்சந்திரன், ஆதவன், ‘கயல்’ தேவராஜ், வினோத், ஆதித்யா, கம்பம் மீனா, வீர சந்தானம், வைசாலி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு- முத்துக்குமரன், படத் தொகுப்பு – சாமுவேல், இசை – கணேஷ் ராகவேந்திரா, கலை –  ந.கருப்பையா, பாடல் – யுகபாரதி, சாவி, கு.கார்த்திக், வ.கீரா, பாடகர்கள் – மரண கானா ‘விஜி’, சைந்தவி, பிரியங்கா, கணேஷ் ராகவேந்திரா, குரு, முருகதாஸ், டிசைன் – இ.எல்.சிகா, ஒப்பனை – பழனி, சண்டை – ‘Fire ‘ கார்த்தி, நடனம்- சங்கர், உடை – வரதன், தயாரிப்பு நிர்வாகம் – சங்கர், மக்கள் தொடர்பு – இரா. குமரேசன், இணை தயாரிப்பு – J.பாலாஜி, தயாரிப்பு – J.சதீஷ்குமார், எழுத்து, இயக்கம் – வ.கீரா.

படம் குறித்து பேசிய இயக்குநர் கீரா, “இதன் கதை மூன்று கால கட்டங்களில் நடக்கிறது. சென்னையின் ஒண்டுக் குடித்தனங்களில் வசிக்கும் கோடம்பாக்க கனவுலகவாசி உதவி இயக்குநர் வெற்றி. அவனது அறையில் எப்போதும் நண்பர்கள் கூட்டம் இருந்து  கொண்டேயிருக்கும்.

படம் இயக்கும் முயற்சியில் இருக்கிற வெற்றிக்கு நடிகர் தினேஷிடம் கதை சொல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. கதையை கேட்ட தினேஷ் முழுக் கதையையும் ஒரு வாரத்திற்குள் சொல்ல வேண்டும் என நாள் குறித்துச் சொல்கிறார்.

ஒரு வாரத்திற்குள் கதை சொல்வதற்காக தன் அறையில் மும்முரமாக கதை எழுத ஆரம்பிக்கிறான் வெற்றி. ஆனால் அவனது அறைக்கு வந்து போகும் நண்பர்களின் தொந்தரவால் அவனால் கதையை எழுத முடியவில்லை. நண்பர்கள் வரவை குறைக்கவும், கதையை எழுதி முடிக்கவும் வெற்றி பல வகைகளிலும் முயன்று தோற்கிறான்.

இதனால் தான் குடியிருக்கும் வீட்டில் ஒரு கன்னிப் பேய் இருப்பதாக பொய்யான கதையை தனது நண்பர்களிடத்தில் சொல்கிறான் இயக்குநர் வெற்றி. அதோடு அந்த பேய்க் கதையை வீட்டின் கீழே இருக்கும் வயதான பாட்டிதான் தன்னிடம் சொன்னதாகவும், பேய் பற்றிய உண்மையை சொல்லிவிட்டதால் எந்த நேரமும் தான் அந்த பேயால் கொல்லப்படலாம் எனவும் சொல்லி அவர்களை பயமுறுத்துகிறான்.

இந்த நிலையில் கீழ் வீட்டில் இருந்த பாட்டி திடீரென இறந்து போக பேய் கதையைக் கேட்ட நண்பர்கள் அதிர்ச்சியடைந்து வெற்றியின் வீட்டுப் பக்கம் வருவதையே நிறுத்தி விடுகிறார்கள்.  ஆனால், இதற்குப் பின்னர் திடீர் திருப்பமாக உண்மையிலேயே வெற்றியை ஒரு பேய் துரத்துகிறது. அவன் பொய்யாக புனைந்த கதையே உண்மையாக நடக்க துவங்குகிறது.

உண்மையிலேயே அந்த வீட்டில் பேய் இருக்கிறதா… அந்த பேய் யார்… எதனால் வெற்றியின் வாழ்க்கை பல திருப்பங்களாக மாறுகிறது என்பதுதான் இந்தப் படத்தின் விரிவான திரைக்கதை… இதற்கெல்லாம் விடை சொல்வதுதான் இந்த மெர்லின் திரைப்படம்..

தற்போது படத்தின் பின்பணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழாவும், அதற்கடுத்து படமும் வெளியாகும்..” என்றார்.

Our Score