full screen background image

சிறு படங்களை அலைக்கழிக்கும் சென்சார் போர்டு – தயாரிப்பாளரின் வேதனைக் குரல்..!

சிறு படங்களை அலைக்கழிக்கும் சென்சார் போர்டு – தயாரிப்பாளரின் வேதனைக் குரல்..!

சேலத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் கே.எம்.ஆனந்தன் தயாரித்திருக்கும் படம் ‘மேச்சேரி வனபத்ரகாளி’. 

இந்தப் படம் பார்த்து 80 நாட்கள் ஆகியும் தணிக்கைச் சான்றிதழ் கொடுக்கப்படாததால், இன்று தணிக்கை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் செய்தார் தயாரிப்பாளர் கே.எம்.ஆனந்தன். 

நடிகை சீதா, டெல்லிகணேஷ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்த இந்தப் படம் 2014-ல் ஆரம்பிக்கப்பட்டு  ஒருவழியாகப் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி இணையதள சேவை வழியாக சென்சாருக்கு விண்ணப்பிக்கப்பட்டு, அதே மாதம் 24-ம் தேதி தணிக்கை அதிகாரிகளால் பார்க்கப்பட்டுள்ளது.

அதன் பின் நடந்தவற்றை ஆனந்தனே விளக்குகிறார் :

“ஆகஸ்ட் 24-ம் தேதியன்று என்னுடைய திரைப்படத்தை பார்த்தனர். பின்பு தணிக்கை அதிகாரியான  மதியழகன் என்னை அழைத்து, ‘உங்களின் திரைப்படத்தில் ஒரு கட் கூட கிடையாது, ரெண்டே, ரெண்டு மியூட் மட்டும்தான். U சான்றிதழ்’ என்று ஏழு நபர்கள் முன்னிலையில் தெரிவித்தார்.

Anandan-director-1

அதன் பிறகு பத்து நாட்கள் கழித்து அங்கே சென்ற என்னிடம் ‘உங்கள் திரைப்படத்தில் நிறைய மாறுபட்ட கருத்துகள் வந்திருக்கின்றது.  நீங்க அப்புறம் வாங்க.. அப்புறம் வாங்க..’ என்று இழுத்தடித்தே வந்தார்.  அதற்கு நான் அவரிடம்,  ‘சார் நீங்க U கொடுத்தாலும் சரி  U/A கொடுத்தாலும் சரி, எது உகந்ததோ அதைக் கொடுங்க சார்…’ என்றேன்.

‘சரி அப்படியென்றால் எனக்கு  U/A  சான்றிதழ் கொடுங்கன்னு எழுதிக் கொடுங்க’ன்னு மதியழகன் கேட்டார். ‘நான்தான் அன்றிலிருந்து சொல்கிறேனே சார்… நான் U கேட்கவே இல்லியே… நீங்க U/A கூட கொடுங்க சார்…’ என்றதும், ‘சரி நீங்க எழுதிக் கொடுத்தா இன்னும் ரெண்டு, மூணு நாள்ல தரேன்’னு சொன்னார்.

சரி என்று நானும்  கடந்த செப்டம்பர் 21-ம் தேதியன்று அவர் சொன்னது போலவே எழுதிக் கொடுத்தேன்.  அதன் பிறகும் இன்றுவரை 80 நாட்களுக்கும் மேலாகிறது, தினமும் ‘வரும் போ’, ‘வரும் போ’, ‘வரும் போ’.., என்று மட்டுமே பதிலாக வருகிறதே தவிர எனக்கு சென்சார் சான்றிதழ் வரவேயில்லை.

என்னிடமிருந்து ஏதும் எதிர்பாக்கின்றார்களா,..? அது நம்மளால முடியாது. இப்ப ‘மெர்சல்’ படத்தை மும்பையில் இருந்து சி.இ.ஓ. இங்க வந்து பார்த்திட்டு சான்றிதழ் கொடுத்துட்டு போறாரு.

நான் வீடு , நிலம் எல்லாத்தையும் அடகு வைத்து பணம் புரட்டி தினமும் 1000 ரூபாய் ரூம் வாடகை கொடுத்து சென்னையில் தங்கியிருக்கிறேன் .உடல் நலம் வேற சரியில்லை என்று அழுதுகூட கேட்டேன். ஆனா, சென்சார் அலுவலகத்தில் என்னை மனிதனாகவே மதிக்கவில்லை.

‘U அல்லது U/A எந்த சான்றிதழ் வேண்டுமானாலும் கொடுங்க, என் படத்திற்கு தியேட்டர் கிடைக்கவில்லையென்றாலும் மாவட்டம் தோறும் நானே மக்களுக்குப் போட்டுக் காட்டுகிறேன்’ என்றும் சொல்லிட்டேன். இப்படி சொல்லியே இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் தணிக்கை சான்றிதழ் கொடுக்காமல் அலைக்கழிக்கிறார்கள்..” என்றார் கண்ணீருடன்.

சென்சார் அலுவலக அதிகாரிகள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை..!

Our Score