full screen background image

‘மழை பிடிக்காத மனிதன்’ – சினிமா விமர்சனம்

‘மழை பிடிக்காத மனிதன்’ – சினிமா விமர்சனம்

2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியானது ‘சலீம்’  என்ற திரைப்படம். விமர்சன ரீதியில் பாராட்டுக்களை குவித்த இந்த திரைப்படம், வசூல் ரீதியிலும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. மிகச் சிறப்பான திரைக்கதைக்காகவும், உணர்வுப்பூர்வமான கதைக்காகவும் பெரும் பாராட்டுக்களை குவித்தது இத்திரைப்படம்.

தற்போது ந்தசலீம்’ படத்தின் அடுத்த பாகமாக இந்த ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் உருவாகியுள்ளது.

ந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் கமல் போஹ்ரா, லலிதா தனஞ்செயன், பிரதீப்.B, பங்கஜ் போஹ்ரா, மற்றும்  S.விக்ரம் குமார் ஆகியோர் இணைந்து INFINITI FILM VENTURES நிறுவனத்தின் சார்பாக தயாரித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் மேகா ஆகாஷ் நாயகியாக நடித்துள்ளார். சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மிக முக்கியமான பாத்திரமொன்றில் நடித்துள்ளார். கன்னட திரையுலகின் மிக திறமை வாய்ந்த இரண்டு நடிகர்களான தனஞ்செயா மற்றும் ப்ருத்வி அம்பர் இப்படத்தின் மூலமாகத் தமிழுக்கு அறிமுகமாகிறார்கள்.

மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலை வாசல்’ விஜய், சுரேந்தர் தாகூர் பிரணிதி ஆகியோரும் இப்படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள். இயக்குநர் ரமணா ஒரு வித்தியாசமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தை எழுதி இயக்கியது மட்டுமின்றி, ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் விஜய் மில்டன். விஜய் ஆண்டனி பாடல்களுக்கு இசையமைக்க, அச்சு ராஜாமணி பின்னணி இசை அமைத்திருக்கிறார். படத் தொகுப்பாளராக லியோ ஜான்பால், கலை இயக்குநராக K.ஆறுசாமி, சண்டை இயக்குநராக சுப்ரீம் சுந்தர், நடன இயக்குநராக ஸ்ரீதர், ஸ்டில்களை மகேஷ் ஜெயச்சந்திரன், விளம்பர வடிவமைப்பாளராக பவன் (சிந்து கிராபிக்ஸ்), ஆடை வடிவமைப்பாளராக ஷிமோனா ஸ்டாலின். பணிபுரிந்துள்ளனர்.

ஆக்சன், கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் டையூ, டாமன் ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப் படமாகும்.

‘சலீம்’ படத்தின் இறுதியில் நாயகன் விஜய் ஆண்டனி உள்துறை அமைச்சரான ஆர்.என்.ஆர்.மனோகரின் மகனை கொலை செய்துவிட்டுத் தப்பியோடிவிடுவார். மனோகர் காலமாகிவிட்டதால் இந்தப் படத்தில் அவருக்குப் பதிலாக ஏ.எல்.அழகப்பன் அமைச்சராக நடித்துள்ளார். தனது ஒரே மகனை இழந்த கோப வெறியில் இருக்கும் அமைச்சர் விஜய் ஆண்டனியை பார்த்த இடத்திலேயே போட்டுத் தள்ள வெறியோடு இருக்கிறார்.

இந்த நேரத்தில் ஒரு நல்ல மழை நாளில் தனது காதலியுடன் அவுட்டிங் வந்த சலீம் மீது அமைச்சர் தரப்பு கொலை வெறி தாக்குதல் நடத்துகிறது. இத்தாக்குதலில் சலீமின் காதலி கொல்லப்படுகிறார். சலீம் உயிர் பிழைத்துவிடுகிறார்.

இதனால் சலீம் மீது அக்கறை கொண்ட மத்திய உளவுத் துறை சலீம் அந்தத் தாக்குதலில் இறந்துவிட்டதாகத் தகவலைப் பரப்புகிறது. ஆனால் இதை அமைச்சர் தரப்பு மட்டும் நம்பாமல் இருக்கிறது.

இதற்கிடையில் தாக்குதலில் காயம்பட்ட சலீமை, அந்தமானுக்கு அழைத்து வந்துவிடுகிறார் அவருடைய கேப்டனான சரத்குமார். அங்கேயே எந்த அடிதடி, வம்பு, தும்புக்கும் போகாமல் புதிய வாழ்க்கையை அமைதியாக வாழும்படி சலீமிடம் சொல்லிவிட்டுப் போகிறார் சரத்குமார்.

வந்த இடத்தில் சலீமுக்கு நட்பாகிறார்கள் ஹோட்டல் நடத்தி வரும் சரண்யா பொன்வண்ணனும், அவரது மகனுமான பிருத்வியும். அந்த ஊரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறார் தாதாவான ‘டாலி’ என்ற டாலி தனஞ்செயா. அதே ஊரில் போலீஸ் உயரதிகாரியாக இருக்கும் முரளி சர்மாவும் டாலிக்கு சளைக்காத அளவுக்கு யூனிபார்ம் அணிந்த ரவுடியாக வலம் வருகிறார்.

‘டாலி’யால் பாதிக்கப்பட்ட ‘தலைவாசல்’ விஜய் திடீரென்று இறந்துவிட அவரது மகளான நாயகி மேகா ஆகாஷூம், அவரது தங்கையும் அனாதையாகிறார்கள். இவர்களுடன் நட்பாகும் சலீமுக்கு இந்த நட்பு மனதுக்கு ஆறுதலாகியிருக்கிறது.

இந்த நேரத்தில் டாலிக்கும், முரளி சர்மாவுக்கான ஈகோ யுத்தத்தில் பிருத்வி மாட்டிக் கொள்ள.. பிருத்வியைக் காப்பாற்ற சலீம் களத்தில் குதிக்க.. பிரச்சினை பெரிதாகி, சரண்யாவின் குடும்பம், மேகா ஆகாஷின் குடும்பம் என்று இரண்டு தரப்புமே டாலி மற்றும் போலீஸிடம் மாட்டிக் கொள்கிறார்கள்.

இதற்கிடையில் சலீம் அந்தமானில் இருப்பதை அறியும் இந்திய உளவுத் துறை சலீமை தீர்த்துக் கட்ட உத்தரவிடுகிறது. அமைச்சர் அழகப்பனும் சலீமை கொலை செய்யத் துடிக்க.. நாலா பக்கமும் எதிரிகள் சூழந்திருக்க.. அதேபோல் நாலு பக்கமும் கடல் சூழ இருக்கும் அந்த அந்தமானில் இவர்களை சலீம் எப்படி சமாளிக்கிறார்..? கடைசியாக நான்கு எதிரிகளிடமிருந்தும் சலீம் தப்பித்தாரா..? இல்லையா..? என்பதுதான் இந்த ‘சலீம்-2’ பாகத்தின் கதை.

‘சலீம்’ படத்தில் பார்த்த அதே விஜய் ஆண்டனிதான் இதிலும்..! புதிதாக எதையும் செய்யவில்லை. திரைக்கதையும் அதற்கு ஒத்துழைக்கவில்லை. அதே சாந்தமான முகம். அமைதியான, அடக்கமான, அலட்டல் இல்லாத நடிப்பு. சரத்குமாரிடம் தான் செய்வது சரியென்று சொல்லி பொங்கும்போது மட்டுமே அவரது வாய்ஸூம், நடிப்பும் தெரிகிறது.

பிருத்வியிடம் மேகா ஆகாஷின் காதல் பற்றிக் குறும்பாகப் பேசும்போதும், டாலியிடம் மாலின் உள்ளே ஸ்பீக்கரில் ஸ்டைலாகப் பேசி பிரச்சினையை டைவர்ட் செய்யும்போதும் சலீமாகவே தெரிகிறார் விஜய் ஆண்டனி.

சலீம் நாய்க்குட்டியிடம் காட்டும் கரிசனத்தை எதிரிகளிடம் காட்டாமல் சண்டை காட்சிகளில் காட்டியிருக்கும் தீவிரம் அகோரம்.. கிடைத்தப் பொருட்களையெல்லாம் வைத்து சண்டையிடும் காட்சியில் படத் தொகுப்பாளரின் கை வண்ணத்தில் விஜய் ஆண்டனியின் வேகம் தெரிகிறது. ஆனால் ஒட்டு மொத்தமாய் ஒரு ஹீரோவுக்குத் தேவையான வசீகரம் விஜய் ஆண்டனியிடம் இன்னும் தேவையாய் இருக்கிறது என்பதைச் சொல்லியாக வேண்டும்..!

2-வது ஹீரோவன பிருத்வி, துள்ளிக் குதித்து தன் இருப்பை பதிவு செய்திருக்கிறார். படம் நெடுகிலும் படபடவென வசனம் பேசியே தள்ளியிருக்கும் இவரது பாஸ்ட் புட் நடிப்பினால் காமெடி வரவில்லையென்றாலும், திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார். மாலில் முரளி சர்மாவை அடிப்பதற்காகக் தயங்கித் தயங்கி செல்லும் காட்சியில்  கவனிக்க வைத்திருக்கிறார்.

நாயகியான மேகா ஆகாஷைவிடவும் அவரது தங்கையின் நடிப்பு சிறப்பு. மேகா ஆகாஷூக்கு நடிப்புக்கான ஸ்கோப் இல்லாத்தால் அவரும் வந்தவரைக்கும் ஸ்கிரீனில் கவன ஈர்ப்பு செய்திருக்கிறார். வழக்கமான அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் சில காட்சிகள் என்றாலும் சிறப்பாய் நடித்துள்ளார்.

கேப்டனாக நடித்திருக்கும் சரத்குமாருக்கும், மேஜராக நடித்திருக்கும் சத்யராஜூவுக்கும் கஷ்டப்படாமல் வசனம் பேசும் வேலைதான். கச்சிதமாகச் செய்துள்ளனர்.

வில்லனாக அறிமுகமாகியிருக்கும் டாலி தனஞ்செயா தன் நடிப்பால் கவனிக்க வைத்திருக்கிறார். இவரது உதவியாளரான இயக்குநர் ரமணாவின் தந்திர புத்தி செயல்பாடுகள் ஓகே. அவரது அடியாட்கள் படையினரின் எண்ணிக்கை படத்தின் நீளத்தைவிடவும் அதிகம் என்பதால் யாரையும் நியாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை.

இயக்குநரான விஜய் மில்டனே ஒளிப்பதிவும் செய்திருப்பதால் அத்தனை அழகாய் அந்தமானை பதிவு செய்திருக்கிறார். பாடல் காட்சிகளையும், சண்டை காட்சிகளையும் பதிவு செய்திருக்கும்விதமே தனி அழகு. சண்டை இயக்குநருக்கு ஒரு மிகப் பெரிய பாராட்டு. சண்டை காட்சிகளை அழகாக தொகுத்தளித்திருக்கும் படத் தொகுப்பாளருக்கும் நமது பாராட்டுக்கள். பாடல்களில் ‘தீரா மழை’, ‘தேடியே போறேன்’, ‘இவன் யாரோ’ பாடல்கள் கேட்கவும், ரசிக்கவும் வைத்திருக்கின்றன.

பொதுவாக அனைத்து ஹீரோயிஸ படங்களிலுமே வில்லனை கொத்துக் கறி போட்டுத்தான் படத்தை முடிப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் மிக, மிக வித்தியாசமாக “தீயவனை அழிக்காதே.. தீயதை அழி” என்பதை சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். நிச்சயமாக இது பாராட்டக் கூடியதுதான்.

வில்லனை கொலை செய்வதற்குப் பதிலாக அவன் நல்லது செய்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதைச் சுட்டிக் காட்டி அவனை நல்வழிப்படுத்தியிருக்கும் திரைக்கதை தமிழ் சினிமாவுக்குப் புதியதுதான். டாலியின் அந்த மனமாற்றம் ஏற்கக் கூடியதுதான். இந்த ஒரு வித்தியாசமான திரைக்கதைக்காகவே இந்தப் படத்தை நாம் பாராட்டலாம்.

ஒட்டு மொத்தமாய் போரடிக்காமல் கடைசிவரைக்கும் பார்க்க வைக்கும் வகையில் கதை, திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் இயக்குநர் விஜய் மில்டன். இதற்காகவே இயக்குநரை பெரிதும் பாராட்டுகிறோம்..!

அடுத்த பாகம் வரும் என்று தெரிகிறது. வரட்டும்..!

RATING : 3.5 / 5

 

Our Score