full screen background image

ராமானுஜன் – திரை முன்னோட்டம்

ராமானுஜன் – திரை முன்னோட்டம்

‘மோகமுள்’, ‘பாரதி’, ‘பெரியார்’ போன்ற முற்போக்கான திரைப்டங்களை திரையுலகத்திற்குக் கொண்டு வந்த ஞானராஜசேகரனின் அடுத்தப் படம்தான் இந்த ராமானுஜன்.

ஈரோட்டில் பிறந்து கும்பகோணத்தில் வளர்ந்து தனது கணித அறிவினால் உலகையே வென்ற சீனிவாசன ராமானுஜனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் திரைப்படமான இந்த ராமானுஜன் இப்போது இறுதிக்கட்டத் தயாரிப்புப் பணியில் உள்ளது.

ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கம் இருந்த வேளையில் இந்தியர்களை அறிவில் குறைந்தவர்கள் என்று அகங்காரத்தோடு வெள்ளையர் கருதிய காலத்தில் தனது அதிசயமான கணித ஆற்றலினால் அவர்களைக் கவர்ந்து ஜி.எச்.ஹார்டி என்கிற ஆங்கிலேய கணிதப் பேராசிரியரால் இந்த உலகத்துக்கு அடையாளம் காட்டப்பட்டவர் ராமானுஜன்.

இப்போதும் பள்ளிக் கூடங்களில், கல்லூரிகளில் ராமானுஜன் தியரி என்ற பாடத்தையும், ராமானுஜன் பார்முலாவையும் படிக்காதவர்களே இருக்க முடியாது.. அவருடைய கணித அடிப்படைக் கோட்பாட்டை மையமாக வைத்துத்தான் கணிதத் துறை மென்மேலும் வளர்ந்திருக்கிறது. இப்போதும் பல கணிதம் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகள் ராமானுஜத்தின் கண்டுபிடித்த தியரியின் அடிப்படையில்தான் நடைபெற்று வருகின்றன.

“இப்படிப்பட்ட தமிழ்நாட்டின் கணித மேதையை.. அவரது வாழ்க்கையை இன்றைய பெரும்பாலான தமிழர்கள் அறியவே இல்லை. எனவேதான் ராமானுஜனை தமிழ்நாட்டு மக்களிடம் கொண்டு செல்ல இத்திரைப்படத்தை இயக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாகச்” சொல்கிறார் ஞானராஜசேகரன்.

“ராமானுஜனின் வாழ்க்கை சரிதம் அவசியம் நிறைந்தது. தனது கணித ஆற்றலை வைத்துக் கொண்டு வாழ வழியின்றி அவர் அனுபவித்த இன்னல்கள், ஒரு ஜூனியஸை ஜீனியஸாக வாழ விடாமல் இந்தச் சமூகம் அவருக்குக் கொடுத்த கஷ்டங்கள்.. அவரையும் ஒரு சராசரி மனிதனாக்க துடித்த அவரது உற்றமும், சுற்றமும்.. இதையெல்லாம் எதிர்கொண்டு உலகம் புகழும் மேதையாக ராமானுஜன் வெற்றி கண்டது எப்படி என்பதைத்தான் இத்திரைப்படம் சொல்கிறது…” என்கிறார் இயக்குநர் ஞானராஜசேகரன்.

‘ராமானுஜன்’ தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் உருவாக்கப்படுகிறது. இந்தியாவிலும், இங்கிலாந்திலும் படம் பிடிக்கப்படுகின்ற இப்படத்தில் இந்திய நடிகர்களுக்கு நிகராக ஆங்கில நடிகர்களும் தமிழ் பேசியே நடித்திருக்கின்றனர். இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் படமும் இதுதான்.

ஜெமினி கணேசன்-சாவித்திரி தம்பதியரின் பேரன் அபினய் ராமானுஜராக நடித்துள்ளார். ராமானுஜனின் தாயாராக நடிக்கும் சுஹாசினி மணிரத்னத்திற்கு இப்படம் தமிழில் மிகச் சிறந்த படமாக இருக்கும். மலையாள, கன்னட படங்களில் முன்னணி நடிகையாக விளங்கும் பாமா, ராமானுஜனின் இளம் மனைவியாக நடத்திருக்கிறார். மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நிழல்கள் ரவி, ஒய்.ஜி.மகேந்திரன், சரத்பாபு, அப்பாஸ், டெல்லி கணேஷ், மனோபாலா, கிட்டி கிருஷ்ணமூர்த்தி, மற்றும் பல பிரபல தமிழ் நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

ஜி.எச் ஹார்டியாக பிரபல ஆங்கில நாடக / சினிமா நடிகர் கெவின் மெக்கோவன் நடிக்கிறார். லிட்டில் வுட் என்கிற மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் மைக்கல் லீபர் என்பவரும், மதராஸ் போர்ட் டிரஸ்ட் தலைவராக ரிச்செர்டு வால்ஷ் என்பவரும், மற்ற முக்கிய கேரக்டர்களில் லிசி பார்ன், ளிடியா ஸ்வான், மைக் பாரிஷ் போன்றோரும் நடித்திருக்கின்றனர்.

பிரிடிஷ் இந்தியாவையும், இங்கிலாந்தையும் கண் முன்னே கொண்டு வரும் ஆடை வடிவமைப்பை சகுந்தலா செய்திருக்கிறார். இசையமைப்பாளரான ரமேஷ் விநாயகம் ராமாமானுஜனின் காலத்தில் இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் பயன்படுத்தப்பட்ட இசைக் கருவிகளை மட்டுமே உபயோகிகித்து ப்யூஷன் முறையில் வித்தியாசமான இசையைக் கொடுத்துள்ளார். சன்னி ஜோஸப்பின் கேமிரா பணி பிரமிக்க வைக்கும் வகையில் அந்த கால உலகத்தை பதிவு செய்திருக்கிறது. கேம்பர் சினிமா’ நிறுவனம் மூலம் நான்கு இளைஞர்களாகிய ஸ்ரீவத்சன் நடத்தூர், சுஷாந்த் தேசாய், சரண்யன் நடத்தூர், மற்றும் சிந்து ராஜசேகரன் ஆகி@யார் இப்படத்தை தயாரித்திருக்கின்றனர்.

புகழ் பெற்ற தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகளை பதிவு செய்து வைக்க வேண்டியது இயக்குநர்களின் கடமை. இதில் ஞானராஜசேகரின் பங்களிப்பு மிகப் பெரியது. அதற்கு இந்தப் படமும் ஒரு சான்று..!

Our Score