இந்தப் படத்தை லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாவும், ருக்மணி வசந்த் நாயகியாகவும் நடித்துள்ளனர்.
மேலும் வித்யூத் ஜாம்வெல், பிஜூ மேன்ன், சபீர் கல்லரக்கல், ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய், விக்ராந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – ஏ.ஆர்.முருகதாஸ், ஒளிப்பதிவு – சுதீப் எலமான், படத் தொகுப்பு – கர் பிரசாத், சண்டை இயக்கம் – கெவின் குமார், தயாரிப்பு வடிவமைப்பு – அருண் வெஞ்சாரமூடு, உடை வடிவமைப்பு – தீபாளி நூர், உடைகள் – பெருமாள் செல்வம், ஒப்பனை – அப்துல் ரசாக், பத்திரிக்கை தொடர்பு – சதீஷ் டீம் எய்ம்.
சிவகார்த்திகேயன் ஒரு விபத்தில் தன்னுடைய குடும்பத்தினர் அத்தனை பேரையுமே இழந்துவிட்டார். அதன் காரணமாக அவருக்கு ஒரு விதமான மனநோய் இருக்கிறது. யாராவது விபத்தில் சிக்கி ரத்தம் வழிய இருப்பதை பார்த்துவிட்டால் உடனே அவர்களை தன்னுடைய குடும்பத்தினர் போல நினைத்து அவர்களை தூக்கிக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு ஓடுவது.. அவர்களுக்கு சிகிச்சை அளிக்க சொல்வது என்று ஆண் அன்னை தெரசாவாக மாறிவிடுவார்.
இன்னொரு பக்கம் தேசிய பலனாய்வு முகமையில் அதிகாரியாக இருக்கும் பிஜூ மேனன் தமிழகத்திற்குள் கள்ளத் துப்பாக்கிகளை கொண்டு வந்து இறக்கப்படுவதை தடுப்பதற்காக ஒரு தனி டீம் அமைத்திருக்கிறார்.
எதிரிகள் உடனான முதலில் காயம்பட்டு சிகிச்சை பெறும் பிஜு மேனனும் காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட சிவகார்த்திகேயனும் மருத்துவமனையில் எதிர்பாராதவிதமாக சந்திக்கிறார்கள்.
“நான் சாக வேண்டும்.. சாக வேண்டும்” என்று சொல்லிக் கொண்டே இருக்கும் சிவகார்த்திகேயனை தன்னுடைய ஆபரேஷனில் ஒரு பகுதியாக இணைத்துக் கொள்கிறார் பிஜூ மேனன்.
அந்த ஆபரேஷனில் வில்லன்களான சபீர் கரக்கல்லும், வித்யூத் ஜாம்பாலும் என்ஐஏ படையினருடன் மோதுகிறார்கள். இந்த மோதலில் சிவகார்த்திகேயனும் இறங்கி என்ஐஏ-வுக்கு உதவி செய்ய.. இந்த சண்டையில் வித்யூத் ஜம்பால் பிடிபடுகிறார். அவர் இறந்துவிட்டார் என்று பொய் செய்தியை பரப்பி விட்டு ரகசியமாக அவருக்கு சிகிச்சை கொடுத்து காப்பாற்றி வருகிறார்கள் என்ஐஏ அணியினர்.
தன்னுடைய உயிர் நண்பன் வித்யூத் ஜாம்பெல்லின் இறப்புக்கு காரணம் சிவர்த்திகேயனும் அவர் காதலிக்கும் மாலதி என்கின்ற பெண்ணும் ன் என்பதை தெரிந்து கொண்ட சபீர் கரக்கல் சிவகார்த்திகேயனையும், மாலதியையும் கொலை செய்யப் போவதாக சொல்கிறார்.
அதற்கான ஆயத்த பணிகளில் அவர் இறங்க இன்னொரு பக்கம் சபீர் கரக்கலின் கூட்டத்தினரை ஒட்டு மொத்தமாக பிடிப்பதற்காக என்ஐஏ வேறு ஒரு திட்டம் போடுகிறது.
இவர்களுக்கிடையில் இடியாப்ப சிக்கலாக மாட்டிக் கொண்ட சிவகார்த்திகேயன் தன்னுடைய காதலி மாலதிக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறார்.
இந்த மூன்று பேரின் முனைப்பில், போராட்டத்தில் இறுதியில் ஜெயித்தது யார் என்பதுதான் இந்த ‘மதராசி’ என்ற படத்தின் திரைக்கதை.
சிவகார்த்திகேயன் ஒரு குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேருக்கும் பிடித்தமான ஒரு நபர். நடிகர் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் எப்பொழுதும் நடித்து வரும் சிவகார்த்திகேயன், இந்தப் படத்தில் மட்டும் இன்றைய கால யூத்துக்களுக்காக அவர்களுக்கு பிடிக்கும்படியான ஒரு கதையில் நடித்திருக்கிறார்.
அவர் ஒரு மெண்டல் டிஸ்ஆர்டர் உள்ளவர் என்பதை வெளியில் தெரியாத வகையில் அவருடைய நடிப்பு முதல் அரை மணி நேரத்தில் மிக அழகாக போகிறது. அதற்குப் பிறகும் தன்னிலை மறந்து அப்பாவியாக அவர் பேசுகின்ற பல வசனங்கள், சிரிப்பை தராமல் நமக்குள் ஒரு பரிதாபத்தை தருகிறது. அந்த அளவுக்கு தனுடைய அப்பாவித்தனமான நடிப்பை காண்பித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
மாலதியின் நட்பு கிடைத்தவுடன் அவர் கொஞ்சம், கொஞ்சமாக மாறுவதும், தான் நல்ல ஒரு நிலைமைக்கு வந்து விட்டேன் என்பதை மறைமுகமாக சொல்லும்போதும் அவரை மிக சிறப்பாக நடிக்க வைத்திருக்கிறார்கள்.
மாலதியின் அன்புக்கு கட்டுப்பட்டு அவருக்கு பிடித்தது போல வாழத் துணியும் சிவகார்த்திகேயன் மாலதி தன்னை விட்டுவிட்டு போனவுடன் அதைக் கூட சோகமாக இல்லாமல் இயல்பான வகையில் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அவர் சொல்லிக் கொண்டே இருப்பதெல்லாம் ரசிக்கக் கூடிய காட்சிகள்.
கடைசியில் அதே மாலதிக்காக சிவா எதிரிகளை சம்ஹாரம் செய்யும்படியான திரைக்கதையை மிக அழகாக வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் முருகதாஸ்.
மற்றைய படங்களைப் போல ஒரு சாதாரண சண்டை காட்சிகளை எல்லாம் இல்லாமல் இதில் சண்டை காட்சிகள்தான் படமே என்பது போல மிகத் திட்டமிட்டு மிக அழகாக, அதே சமயம் வெறித்தனமாக சண்டைக் காட்சிகளை வடிவமைத்து இருப்பதால் ஒரு கட்டத்தில் நம்ம சிவாவோட படமா இது என்று நம்மை நாமே கேட்க வேண்டி இருக்கிறது.
மாலதியாக நடித்திருக்கும் ருக்மணி வசந்த் மிக அழகான வரவு. சிவகார்த்திகேயனின் தோற்றத்திற்கும், உடல் அமைப்புக்கும் மிக கச்சிதமான, பொருத்தமான நாயகியாக நடித்திருக்கிறார். துவக்கத்தில் சிவகார்த்திகேயனை தவறாக புரிந்து கொண்டு அதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவர் மீது ஒரு ஈர்ப்பு வந்து.. அது காதலாக மாறுகின்ற தருணத்தில் மிக அழகாக காட்சி அளிக்கிறார் மாலதி என்ற ருக்மணி.
இடைவேளைக்குப் பின்பு ருக்மணியும் திரைக்கதையில் கூடைவே வருவது போல அமைத்திருப்பதால் அதற்குப் பிறகு அழகை காட்டாமல் சிறந்த நடிப்பை மட்டும் காண்பித்து இருக்கிறார் ருக்மணி. வாழ்த்துக்கள்.
மலையாள நடிகர் பிஜூ மேனன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் என்.ஐ.ஏ. அதிகாரியாக நடித்திருக்கிறார். ஒரு காவல்துறை அதிகாரி எந்த அளவுக்கு கம்பீரத்தையும், துடிப்பையும் காட்டுவாரோ அது மாதிரியான ஒரு கெத்தான வேடத்தை கச்சிதமாக செய்திருக்கிறார் பிஜூ மேனன்.
இவருடைய மகன் விக்ராந்தும் இதை என்.ஐ.ஏவில் அவருக்கு கீழ் பணியாற்றுவது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றாலும் அவர் ஒரு பரிதாபகரமான மரணத்தை பெறுவதுபோல் நடித்திருக்கிறார்.
மேலும் வில்லன்களாக நடித்த இரண்டு பேருமே செம வில்லன்களாக நமக்கு காட்டப்பட்டு இருக்கிறார்கள். கடைசி சண்டை காட்சியில் வெறித்தனமாக சண்டையிடுவதை பார்க்கும் பொழுது நமக்கே ஒரு மாதிரி பகீர் என்கிறது. ஆனால் வித்யூத் ஜாம்பால் சிறப்பாகவே தனது வில்லத்தனத்தை காட்டியிருக்கிறார். இன்னொரு பக்கம் சபீர் கரக்கல்லும் தன் பங்குக்கு வித்யூத்துக்கு கொஞ்சமும் சளைக்காமல் வில்லத்தனத்தை காட்டியிருக்கிறார்.
மேலும் மருத்துவராக நடித்திருக்கும் தலைவாசல் விஜய், வில்லன் கோஷ்டியில் இருக்கும் கருப்பு ஆடாக நடித்தவரும் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு நடித்திருக்கிறார்கள்.
சுதீப் எலவனின் ஒளிப்பதிவு பிரமாதம் என்று சொல்லலாம். அதிலும் தீவிரமான சண்டை காட்சிகளை படமாக்கியவிதம் சூப்பர் என்றே சொல்லலாம். இந்த சண்டை காட்சிகளை தொகுத்து வழங்கிய படத் தொகுப்பாளர் ஸ்ரீதர் பிரசாத்துக்கும் நமது பாராட்டுக்கள்.
அனிருத்தின் இசையும் இந்தப் படத்திற்கு ஒரு பெரிய பக்க பலம்தான். பரபர என்ற பறந்து போகும் திரைக்கதைகள் அடுத்தடுத்த காட்சிகளை கொஞ்சமும் கவனம் சிதறாமல் பார்க்க வைத்திருக்கிறது அனிருத்தின் பின்னணி இசை. பாடல்கள் கேட்கும் ரகமாக இருந்தாலும் தியேட்டரைவிட்டு வெளியில் வந்தவுடன் மறந்து போனது நம்முடைய தவறல்ல.
என்டர்டைன்மென்ட் படங்களில் லாஜிக்கே பாக்காதீங்க. அவார்டு படங்களில் மட்டும் லாஜிக் பாருங்க என்று பெரும்பாலும் அனைத்து தயாரிப்பாளர்களும், நடிகர், நடிகைகளும், இயக்குநர்களும் சொல்வார்கள். அதே போல் இந்தப் படத்தையும் முழு என்டர்டைன்மென்ட்டாக நினைத்து பார்க்க முடியாது.
“இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் அமைதியாக இருக்கிறது..” என்று பல முறை வசனங்களில் சொல்கிறார் பிஜூமேனன். இந்த வசனமே இந்தப் படத்தை நிஜ உலகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வைக்கிறது. என்ஐஏவின் நடவடிக்கைகள், சத்தமே இல்லாமல் ஆபரேஷன் செய்யும் விதம்… இதை இன்னும் கொஞ்சம் உண்மைத்தனமாக படமாக்கியிருக்கலாம்.
இவ்வளவு துப்பாக்கி சண்டைகள், என்ஐஏ அதிகாரிகர் 13 பேர் மரணம்.. பல இடங்களில் குண்டு வெடிக்கிறது.. என்.ஐ.ஏ அலுவலகத்தை தீக்கிறையாக்கிவிட்டார்கள். இவ்வளவு நடந்த பின்பும் காவல்துறை என்ற பிரிவு என்ன செய்கிறது..? அதனுடைய உயர் அதிகாரியாக கட்டப்படும் ஆடுகளம் நரேன் என்ன செய்கிறார்? லோக்கல் மக்கள் என்ன சொல்கிறார்கள்? நாட்டில் என்ன விளைவு ஏற்பட்டது? தொலைக்காட்சிகள் எப்படி செய்திகளை வெளியிட்டன…? இது போன்ற உண்மை தகவல்களை எல்லாம் இந்தப் படத்துக்கு தேவையில்லாதது என்று சொல்லிவிட்டு முருகதாஸ் வெறுமனே தன்னுடைய கதை, திரைக்கதையை மட்டுமே முனைந்து எழுதி இருக்கிறார்.
லாஜிக்கே பார்க்க வேண்டாம் என்றாலும் செண்டிமெண்ட் காட்சிகளையும், நாட்டுக்காக போராட வேண்டும் என்று என்.ஐ.ஏ. வீரர்களும் அடிக்கடி சொல்லிக் கட்டுவதால் நாமும் இதை சொல்ல வேண்டி இருக்கிறது.
ஒரு காதல் தோல்வி.. இதனால் ஏற்படும் தற்கொலை முயற்சி.. இன்னொரு பக்கம் என்.ஐ.ஏ. அதிகாரிகளின் அவசர ஆபரேஷன்… அந்த ஆபரேஷனில் இருந்து தப்பித்து தமிழ்நாட்டை துப்பாக்கி கலாச்சாரத்தை திணிக்க நினைக்கும் ஒரு மாபெரும் வில்லன்கள் கூட்டம்… இந்த மூன்று பேருக்கும் இடையிலான கதையில் கொஞ்சம் நிறையவே காதலையும், நிறைய சென்டிமென்ட் காட்சிகளையும் வைத்து மிக அழகாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.
தமிழ் சினிமாவிலும் துப்பாக்கி கலாச்சாரத்தை ‘துப்பாக்கி’ என்ற தன்னுடைய படத்தில் மிக அதிகமாக காண்பித்து ‘அதிரடி மசாலா மன்னன்’ என்ற பெயரைப் பெற்ற இயக்குநர் முருகதாஸ் தன்னால் முடிந்த அளவுக்கு இந்தப் படத்திலும் துப்பாக்கி கலாச்சாரத்தை கொண்டு வந்திருக்கிறார்.
ஆனால் சிவகார்த்திகேயன் என்ற நம்ம வீட்டு பையன் நடித்திருப்பதால், அவர் முகத்துக்காகவே நாம் கடைசிவரை அமர்ந்து பார்க்க முடிந்திருக்கிறது.
வில்லன்களை தீர்த்து கட்டிவிட்டு தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் வரவிடாமல் தடுத்த என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு நமது பாராட்டுக்கள். நன்றிகள்.
அதேபோல் சினிமா துறையிலும் இந்தத் துப்பாக்கி கலாச்சாரத்தை கொஞ்சம் ஒழித்து கட்டிவிட்டு நல்லதொரு குடும்ப படங்களை தரும்படி அனைத்து மசாலா பட இயக்குநர்களிடமும், அனைத்து என்டர்டைன்மென்ட் இயக்குநர்களிடமும் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.
ஓம் சிவாய நமஹ..!
RATING : 3.5 / 5









