Aruvar private limited சார்பில் C.வெங்கடேசன் தயாரிப்பில், விதார்த் நடிப்பில், இயக்குநர் V.கஜேந்திரன் இயக்கத்தில், விவசாயியின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம்தான் இந்த “மருதம்”.
இப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் விதார்த் நடித்துள்ளார். ரக்ஷனா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் அருள்தாஸ், மாறன், சரவணன் சுப்பையா, தினந்தோறும் நாகராஜ், மாத்யூ வர்கீஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு N.R.ரகுநந்தன் இசையமைத்துள்ளார். அருள் சோமசுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்துரு.B படத் தொகுப்பு செய்துள்ளார். பாடல்களை நீதி எழுதியுள்ளார். பத்திரிக்கை தொடர்பு பணிகளை A.ராஜா கவனிக்கிறார்.
இயக்குநர்கள் சரவண சுப்பையா, மோகன் ராஜா, பொம்மரிலு பாஸ்கரிடம் பணிபுரிந்தவரும், அடையாறு திரைப்பட கல்லூரியில் பயின்றவரும், தற்பொது SRM கல்லூரியில் உதவி பேராசியராக பணியாற்றுபவருமான கஜேந்திரன், இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.
தற்கால உலகில் ஒரு விவசாயியுடைய வாழ்வினை மையமாக வைத்து, அழுத்தமான திரைக்கதையில் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இப்போது தமிழ்நாட்டில் நடக்கின்ற மிகப் பெரிய ஊழலே அடுத்தவர் நிலத்தை திருடுவதுதான்.
“டபுள் டாக்குமெண்ட்” என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ‘ஆம்’ என்றால் நீங்கள் தினமும் பத்திரிகைகளை வாசிப்பவராக இருக்க வேண்டும். ‘இல்லை’ என்றால் நிச்சயமாக நீங்கள் நாளிதழ்கள், பத்திரிகைகளை வாசிக்கும் பழக்கம் இல்லாதவராக இருத்தல் வேண்டும்.
அதிகம் படிக்காதவர்கள், ஒரே ஒரு துண்டு நிலத்தை மட்டுமே கையில் வைத்திருப்பவர்கள், ஏழைகள்… இவர்கள் அதிகமாக அலையமாட்டார்கள்… இவர்களால் கண்டுபிடிக்க முடியாது என்று பலவித கேட்டகிரிகளில் மனிதர்களின் மனங்களை அவர்களுடைய அப்பாவித்தனத்திலேயே கண்டறியும் திருட்டு கூட்டம் அவர்களின் நிலத்தை சத்தமே இல்லாமல் கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது.
அப்படி ஒரு திருடர்கள் கூட்டம் கன்னியப்பன் என்ற ஒரு ஏழை விவசாயியின் நிலத்தை எப்படி திருடினார்கள் என்பதையும் அந்த நிலத்தை மீட்க கன்னியப்பன் எப்படியெல்லாம் போராடினார் என்பதை காட்டும் படம்தான் இந்த ‘மருதம்’ என்ற திரைப்படம்.
தமிழர்களின் வாழ்வியலில் ‘குறிஞ்சி’, ‘முல்லை’, ‘மருதம்’, ‘நெய்தல்’, ‘பாலை’ என்கின்ற மக்கள் வாழ்ந்த பகுதிகளை பிரித்து காட்டும் வகைகளில் ‘மருதம்’ என்பது வயலும், வயல் சார்ந்த பகுதியும் என்றுதான் தமிழ் சொல்கிறது.
அதன்படி ஒரு விளை நிலத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை எடுத்திருப்பதால் இதற்கு மிகப் பொருத்தமாக ‘மருதம்‘ என்று பெயர் வைத்துள்ளார்கள். இதற்காகவே இயக்குநருக்கு நமது முதல் பாராட்டுக்கள்.
ராணிப்பேட்டை அருகே இருக்கும் கல் புதூர் கிராமத்தில் கன்னியப்பன் என்ற விதார்த் தன்னுடைய மனைவி, மகனுடன் வாழ்ந்து வருகிறார். தன்னுடைய அப்பா தனக்கு கொடுத்துவிட்டு போன இரண்டு சென்ட் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார் விதார்த். அதிலும் இயற்கை விவசாயத்தை மட்டுமே செய்து வருவதால், பத்திரிகைகளின் பாராட்டைகூட பெற்றிருக்கிறார் விதார்த். பத்திரிகைகளில் அவருடைய பேட்டியும் வந்திருக்கிறது.
இந்த நேரத்தில் தன்னுடைய மகனை சிபிஎஸ்சி ஸ்கூலில் படிக்க வைத்து அவனை பெரிய ஆளாக்க வேண்டும் என்று நினைக்கும் கன்னியப்பன் தன்னுடைய வீட்டு நிலத்தை அடமானமாக வைத்து மூன்று லட்ச ரூபாய் கடன் வாங்கி தன்னுடைய மகனை அவ்வளவு பெரிய பள்ளியில் படிப்பதற்கு ஏற்பாடு செய்துவிட்டார்.
இந்த நேரத்தில் திடீரென்று அவருடைய நிலத்தில் யாரோ வேலி போட வர… விதார்த் கடும் அதிர்ச்சியாகிறார். வந்தவர்களிடம் சண்டையிட்டு என்ன ஏது என்று கேட்கும்போது அவர்கள் அந்த நிலத்தை வாங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள்.
“இது என்னுடைய அப்பா எனக்காக விட்டு சென்ற நிலம். நாங்கள் யாருக்கும் விற்கவில்லையே… நீங்கள் எப்படி வேலி போடலாம்..?” என்று வாதாடுகிறார் விதார்த். ஆனால் எந்த பலனும் இல்லை.
இதற்கு அடுத்து உடனடியாக எந்த வங்கி இந்த நிலத்தை ஏலம் விட்டதோ அந்த வங்கியில் சென்று முறையிடுகிறார் விதார்த். அவர்களும் “உங்களுடைய அப்பா சில ஆண்டுகளுக்கு முன்பாக இந்த நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கி இருக்கிறார். அதுவும் அரவை எந்திரம் வாங்குவதற்காக கடன் வாங்கி இருக்கிறார். அந்தக் கடனுக்காக ஆறு மாதம் வட்டி கட்டியிருக்கிறார். அதற்குப் பிறகு கட்டவில்லை. நாங்கள் அனுப்பிய தபால்களுக்கு எந்த பதிலும் வரவில்லை. அதனால் நாங்கள் ஏலத்தில் விற்பனை செய்து விட்டோம்” என்று அலட்சியமாக பதில் சொல்கிறார்கள்.
கன்னியப்பன் இதை நம்பவில்லை. இது குறித்து லோக்கல் கவுன்சிலர் மற்றும் தனக்குத் தெரிந்தவர்கள் இடத்தில் எல்லாம் புகார் சொல்கிறார். அதற்குள்ளாக அந்த நிலத்தை சுற்றிலும் வேலி போட்டு விட்டார்கள்.
அதற்குப் பிறகு வழக்கறிஞர் நாகராஜின் அறிமுகம் கிடைக்க அவரிடத்தில் தன்னுடைய நிலப் பிரச்சனையை கொண்டு செல்கிறார். “நீங்களே நீதிமன்றத்தில் வாதாடுங்கள்” என்று நாகராஜ் அவருக்கு ஒரு ஆக்கமும், உற்சாகமும் கொடுத்து அனுப்பி வைக்கிறார்.
அடுத்து கன்னியப்பன் என்ன செய்தார்? நீதிமன்றத்தில் வாதாடினாரா? வழக்கில் ஜெயித்தாரா? அந்த நிலத்தை மீண்டும் பெற்றாரா? என்பதுதான் இந்த ‘மருதம்’ படத்தின் திரைக்கதை.
நம்முடைய வாழ்வியலோடு இணைந்து வருகின்ற ஒரு சிறிய கதை என்றால் அந்தக் கதையின் நாயகனாக விதார்த் கச்சிதமாக பொருந்தி வருகிறார். அவர் இதற்கு முன் நடித்த பல திரைப்படங்களும் அந்தக் கதைகளுக்கு விதார்த் மட்டுமே பொருத்தமாக இருந்தார் என்பது போலவே அமைந்திருந்தன. இந்தப் படமும் அதே போலத்தான்..!
கிராமப்புறத்தான் என்பதற்கு பொருத்தமாக ஒரு அப்பாவித்தனத்தை தன்னுடைய முகத்தில் எப்போதுமே வைத்திருக்கும் விதார்த்துக்கு இது மாதிரியான திரைப்படங்கள் லட்டு போல! தன்னுடைய அப்பாவியான நடிப்பை இந்தப் படத்தில் பெருமளவு காட்டி இருக்கிறார். நாம் குற்றம் குறை சொல்லாத அளவுக்கு அவருடைய நடிப்பும் அமைந்திருக்கிறது.
வேலி போட வந்தவர்களுடன் மிக, மிக இயல்பாக சண்டை போட்டு தன்னுடைய கோபத்தையும், ஆத்திரத்தையும் காட்டுமிடத்தில் விதார்த்தின் நடிப்பு உண்மைத்தனம். அதேபோல் வங்கிக்கு சென்று தன்னுடைய இயலாமையைக் கத்திக் கூப்பாடு போட்டு நடத்தும் போராட்டத்திலும் ஐயோ பாவம் என்று நம்மையும் சொல்ல வைத்திருக்கிறார்.
நீதிமன்றத்தில் எதிர்த் தரப்பு வழக்கறிஞர் கேட்கும் கேள்விகளுக்கு தெரியாமல் தயங்கி நிற்பதும், அதற்குப் பிறகு அடுத்த விசாரணையின்போது அந்தக் கேள்வியை உடைக்கும்விதமாக அவர் எடுத்து வைக்கும் வாதங்களிலும் அவருடைய நடிப்பு கவனிக்க வைத்துள்ளது.
விதார்த்தின் மனைவியாக நடித்திருக்கும் ரக்சனா விதார்த்தைவிடவும் அப்பாவியாக தெரிகிறார். அவருடைய தோற்றத்திற்கும் அவர் அணிந்திருக்கும் உடைகளுக்கும் அவர் ஒரு சின்னப் பையனின் அம்மா என்பதை நம்ப முடியாத அளவுக்கு இருக்கிறது. ஆனாலும், அவரும் விதார்த்துக்கு அறிவுரை சொல்லி அவரை ஊக்கப்படுத்தும் ஒரு சாதாரண மனைவியாக நியாயமாக நடித்திருக்கிறார்.
அவ்வப்பொழுது காமெடி விட்டுகளை மட்டுமே தெளித்துக் கொண்டிருக்கும் மாறன் தன்னுடைய சொந்த கதை, சோக கதையை விதாத்த்திடம் சொல்லும்போது நம்முடைய பரிதாபத்தையும் பெற்றுக் கொள்கிறார். மற்றும் படத்தில் நடித்திருக்கும் அனைவருமே இயக்குநரால் முடிந்த அளவுக்கு சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ரகுநந்தனின் இசையில் பாடல்கள் அனைத்துமே சுகமானவை. மீண்டும், மீண்டும் கேட்கும் ரகம் இல்லை என்றாலும் கேட்கும்போதே ரசிக்கும்படியாக உள்ளது. பின்னணி இசையிலும் கொஞ்சம் அடக்கி வாசித்து விதார்த்தின் நடிப்பை கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறார்.
சின்ன பட்ஜெட் படம் என்பதால் முடிந்த அளவுக்கான ஒரு சிறந்த ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். மிக, மிக எளிமையான கதை என்பதால் இதற்கு எந்தவிதமான மேல் பூச்சும் இல்லாமல் தங்கு தடையில்லாமல் காட்சிகள் அடுத்தடுத்து நடப்பது போல படத் தொகுப்பு செய்திருக்கிறார் படத் தொகுப்பாளர் சந்துரு. அதேபோல் நீதிமன்ற காட்சிகளை ரசிப்பது போல தொகுத்து கொடுத்திருக்கிறார்.
இந்தப் படம் ஒரு சிறந்த விழிப்புணர்வு படமாக வந்திருக்கிறது. இதற்காகவே இயக்குநர் பி.கஜேந்திரனுக்கு நம்முடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
தற்போது இந்தியா முழுவதும் மக்களின் உணவு முறைகள் முற்றிலும் மாறுபட்டு போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் விவசாயத் தொழிலும் கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வரும் சூழலில் அப்பாவி விவசாயிகளை பணத்திற்காக இப்படி ‘டபுள் டாக்குமெண்ட்’ என்ற போர்ஜரி திட்டத்தின் மூலமாக அவர்களின் நிலங்களை பறிக்கும் படித்தவர்களின் இந்தச் செயல் கேடுகெட்டத்தனமானது.
அரசியல் கட்சிகள், அரசியல்வியாதிகள், அதிகார வர்க்கம் அதற்கும் மேல் காவல்துறை என்று அத்தனை பேருமே பணத்துக்காகவே வேலை பார்ப்பதால் கன்னியப்பன் போன்ற ஏழை, எளிய விவசாயிகளின் கதி கண்ணீரில் கரைகிறது.
அவ்வப்பொழுது நீதிமன்றங்கள் கன்னியப்பன் போன்றவர்களுக்கு சரியான நீதியை வழங்கினாலும் அது காலம் தாழ்த்து கிடைப்பதினால் அதற்கிடையில் அந்தக் குடும்பத்தினர் படும் கஷ்டங்களை யாரும் அறிவதில்லை.
வங்கி எப்படி ஒருவரின் நிலத்தை வேறொருவரின் நிலமாக எடுத்துக் கொண்டு கடன் கொடுத்தது என்ற மிகப் பெரிய கேள்விக்கு படத்தில் பதிலே இல்லை. உண்மையில் இதைத்தான் விளக்கமாக சொல்லியிருக்க வேண்டும்.
வசனங்களும் திரைக்கதையை தெளிவுபடுத்தும்விதமாகவும், பிரச்சனைகளை வெளிப்படையாக சொல்லும்விதமாகவும் அமைந்திருக்க வேண்டும். குறிப்பாக “டபுள் டாக்குமெண்ட்” என்ற வார்த்தையை இந்தப் படத்தில் ஒரு இடத்தில்கூட பயன்படுத்தாதது ஏன் என்றுதான் தெரியவில்லை.
படம் மொத்தமாக 2 மணி நேரத்துக்குள்ளாகவே இருப்பதால் கூடுதலான இந்த சந்தேகங்களுக்கான விளக்கவுரைகளுக்காக சில காட்சிகளை அமைத்திருக்கலாம். இப்போது பாதி வெந்தும், பாதி வேகாத அரிசியாகத்தான் படம் வந்துள்ளது.
நீதிமன்றத்தில் மனு கொடுத்தவர் வழக்கறிஞர் இல்லாமல் தானாகவே வாதாடலாம் என்கின்ற ஒரு உண்மையை இந்தத் திரைப்படத்தில் அழுத்தமாக பதிவு செய்து விதார்த்தை வாதாட வைத்திருப்பது ஒரு புதிய கதைதான்.
ஆனால் விதார்த் நீதிமன்றத்தில் திடீர், திடீரென்று பலவித ஆதாரங்களை கொடுக்கிறார். எந்த முன் காட்சிகளும் இல்லாமல் அதை எப்படி அவர் கைப்பற்றினார், எடுத்தார்… என்பதற்கான விளக்கமெல்லாம் இல்லாமல் பட்டென்று நீதிமன்றத்தில் குட்டை உடைப்பதுபோல திரைக்கதையை நகர்த்தி இருப்பதும் கொஞ்சம் டூ மச்சுதான். அதற்கான முன் காட்சிகளை எடுத்திருந்தால்கூட நன்றாகத்தான் இருந்திருக்கும்.
ஆனாலும் ஏழை விவசாயிகள் எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறார்கள் என்பதற்கான ஒரு விழிப்புணர்வை இத்திரைப்படம் கொடுத்திருக்கிறது.
தமிழ் சினிமா ரசிகர்கள் அதிலும் குறிப்பாக விவசாயப் பெருங்குடி மக்கள் இந்தப் படத்தை அவசியம் பார்க்க வேண்டும். ஏனெனில், இது அவர்களுக்கான திரைப்படம்.
RATING : 3.5 / 5