full screen background image

லாந்தர் – சினிமா விமர்சனம்

லாந்தர் – சினிமா விமர்சனம்

திருப்பூரை சேர்ந்த தொழிலதிபரான பத்ரி, தனது எம் சினிமா என்ற நிறுவனத்தின் சார்பில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் விதார்த், சுவேதா டோரத்தி, விபின், சஹானா கவுடா, பசுபதிராஜ், கஜராஜ், மீனா புஷ்பராஜ், மதன் அர்ஜுனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

ஒளிப்பதிவு – ஞானசௌந்தர், இசை – பிரவீன், படத் தொகுப்பு – ஜெரோம் ஆலன், சண்டை இயக்கம் – விக்கி, கலை இயக்கம் – தேவா, தயாரிப்பு மேற்பார்வை – ஏ.ஆர்.சந்திரமோகன், பத்திரிக்கை தொடர்பு – நிகில் முருகன்.

இந்தப் படத்தை  இயக்கியிருக்கும் இயக்குநர் சாஜி சலீம் ஏற்கெனவே இயக்குநர் ராம்குமாரிடம் ‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் இயக்குநர் செல்லா அய்யாவு உடன் ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்திலும் உதவி மற்றும் இணை இயக்குநராகப் பணியாற்றிய  அனுபவம் கொண்டவர்.

இவரது இயக்கத்தில் உருவாகும் முதல் படைப்பான ‘விடியும்வரை காத்திரு’ திரைப்படத்தின் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இந்த லாந்தர்’ திரைப்படம் இவர் இயக்கியிருக்கும் இரண்டாவது படமாகும்.

கோவை காவல்துறையில் உதவி கமிஷனராக இருக்கும் விதார்த் கண்டிப்பான அதே சமயம் நேர்மையானவராகவும் இருக்கிறார். இவருக்கு சமீபத்தில்தான் திருமணமாகியிருக்கிறது.

இவரது மனைவி ஸ்வேதா டோரத்திக்கு இருட்டு என்றாலே பயம். மேலும் அதிக சப்தங்களை கேட்டாலும் சட்டென்று மயக்கமாகிவிடுவார். இவருடைய இந்த உடல் நலக் குறைபாட்டை கவனித்தில் கொண்டு ஊரைவிட்டு விலகி புறநகரில் ஒரு வீட்டில் குடியிருக்கிறார் விதார்த்.

ஒரு நாள் டாஸ்மாக் சரக்கில் தண்ணீர் ஊற்றி போலி சரக்கு விற்பனை செய்யும் கும்பலை கைது செய்யும் விதார்த், அவர்களை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்துவிட்டு இரவில் வீடு திரும்புகிறார்.

அதே இரவில் கோவை சாய்பாபா காலனியில் ஒரு மர்ம சைக்கோ மனிதன் எதிர்ப்படும் நபர்களையெல்லாம் சம்மட்டியால் அடித்துக் காயப்படுத்துகிறான். இந்தத் தகவல் அறிந்து பாதி தூக்கத்தில் இருந்து எழுந்து ஓடி வருகிறார் விதார்த்.

அந்த சைக்கோ மனிதன் யார்..? அவனை விதார்த் பிடித்தாரா..? இல்லையா..? என்பது ஒரு கதை.

இன்னொரு பக்கம் அதே கோவையில் ஐ.டி துறையில் பணியாற்றும் விபின் தனது மனைவியான சஹானாவை வீட்டில் தனியாக விட்டுவிட்டு நைட் ஷிப்ட் வேலைக்கு செல்கிறார். விபின் வேலைக்குச் சென்றவுடன் அவரது மனைவியின் கண்ணில் டாக்டரின் மெடிக்கல் ரிப்போர்ட் ஒன்று படுகிறது.

அதை எடுத்துப் படிக்கும் சஹானா அதிர்ச்சியாகிறார். உடனேயே அந்த மருத்துவமனைக்குத் தகவல் சொல்லிவிட்டு ஆட்டோவில் மருத்துவமனைக்கு செல்கிறார். எதையோ மறந்துவைத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிய விபின், இதைப் பார்த்துவிட்டு அவரும் சஹானாவைப் பின் தொடர்கிறார்.

சஹானா மருத்துவமனையில் மருத்துவரை சந்தித்து அந்த மெடிக்கல் ரிப்போர்ட் பற்றி விசாரித்துவிட்டு அதிர்ச்சியுடன் வீடு திரும்ப.. விபினும் பின்னாலேயே வீட்டுக்கு வருகிறான். அதன் பிறகு அந்த வீட்டுக்குள் என்னதான் நடந்தது?.. சஹானாவிடம் அந்த மருத்துவர் சொன்ன அதிர்ச்சி செய்திதான் என்ன..? என்பது இன்னொரு கதை.

இந்த இரண்டு கதைகளின் முடிவுகளும் அந்த இரவில் கோவையில் நடக்கும் ஒரு சம்பவத்தில் இணைகின்றன. அந்தச் சம்பவம் என்ன என்பதுதான் இந்த சஸ்பென்ஸ். திரில்லர் கலந்த ‘லாந்தர்’ படத்தின் சுவையான திரைக்கதை.

விதார்த் தன் திரையுலக வாழ்க்கையில் முதல்முறையாக போலீஸ் அதிகாரி வேடமேற்றிருக்கிறார். அந்த வேடத்தில் நாம் எப்போதும் எதிர்பார்க்கும் கம்பீரமெல்லாம் இல்லாமல், தற்போதைய காலக்கட்டத்தை சேர்ந்த புதிய ஐ.பி.எஸ். அதிகாரிகளை நினைவு கூறும் வகையில் தனது கேரக்டர் ஸ்கெட்ச்சில் நடித்துள்ளார் விதார்த்.

மனைவியிடம் அனுசரணையாக நடந்து கொள்ளுவிதமான குணமும், நோய்வாய்ப்பட்டிருக்கும் வீட்டுக்குக் காவலில் இருக்கும் போலீஸ்காரரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பாங்கும், யாரையும் மரியாதைக் குறைவாகப் பேசாமல் பெயர் சொல்லி அழைக்கும் மரியாதையும் உள்ளவராக இருக்கிறார்.

ஆனால் நடிப்பென்று பார்க்கப் போனால் பதட்டமாவது ஒன்றுதான் இந்தப் படத்தில் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகப்பட்ச நடிப்புக்கான ஸ்கோப். அதையும் சரியாகவே செய்திருக்கிறார் விதார்த்.

மனைவியாக நடித்திருக்கும் ஸ்வேதா டோரத்திக்கு மிகப் பெரிய கேரக்டர் இல்லை என்பதால் அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார். கோவை தம்பதியாக நடித்திருக்கும் விபின் மற்றும் சஹானா இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதிலும் சஹானா பல காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.

சஹானாவின் அப்பாவாக நடித்திருக்கும் பசுபதிராஜ் ஒரு அப்பவாக என்ன செய்ய முடியுமோ அதையே செய்திருக்கிறார். மேலும் மருத்துவராக நடித்திருக்கும் கஜராஜ், மீனா புஷ்பராஜ், மதன் அர்ஜுனன் என்று மற்றவர்களும் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

முழுக்க, முழுக்க இரவு நேரத்திலேயே முக்கால்வாசிப் படமும் தயாராகியிருப்பதால் ஒளிப்பதிவில் குறையில்லாமல் இரவு நேர குறைந்தப்பட்ச விளக்கொளிலேயே படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். கிளைமாக்ஸ் சேஸிங் காட்சியை படமாக்கியவிதம் அமெச்சூர்த்தனம் என்பதால், இதற்காக இயக்குநரைத்தான் குற்றம் சொல்ல முடியும். ஒளிப்பதிவாளர் இதிலும் தன் வேலையை திறம்பட செய்திருக்கிறார்.

இசையமைப்பாளர் எம்.எஸ்.பிரவீனின் இசையில் பாடல்கள் அப்போதைய நம்முடைய மன நிலைக்கு சற்று ஆறுதல் அளிக்கிறது. சைக்கோவைக் காட்டும்போது ஒலிக்கும் பின்னணி இசை கூடுதல் பயமுறுத்தலைக் கொடுக்கிறது.

இரண்டு சம்பவங்கள் ஒரு புள்ளியில் இணையும் வகையிலான திரைக்கதையில் சஸ்பென்ஸ், திரில்லரை ஒரு அளவுக்குக் கொடுத்து, அதையும் தனது மிதமான இயக்கத்தினால் கடைசிவரையிலும் நம்மை திரையைப் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

இந்தத் திரைக்கதையில் பல இடங்களில் லாஜிக் என்றால் கிலோ என்ன விலை என்பதைப் போலவும், சில இடங்களில் திரைக்கதையை நகர்த்துவதற்காக உடனுக்குடனான பதில்களைப் பெற்று காட்சியமைப்பு வைத்திருப்பதும் நகைப்புக்குரியது.

முதல்முறையாக சைக்கோவை பார்த்த போலீஸ்காரர், அங்கேயிருந்தபடியே மற்றைய போலீஸ்காரர்களுக்குத் தகவல் கொடுக்காமல் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து அமர்ந்து சாவகாசமாக அதைச் சொல்லி, “வாங்க போய் பிடிப்போம்” என்று சொல்வதெல்லாம் காமெடி திரைக்கதைதான்.

இதேபோல் சைக்கோவின் ஊர் பட்டுக்கோட்டை என்று தெரிந்தவுடன் கன்ட்ரோல் ரூமில் இருக்கும் போலீஸ்காரரே பட்டுக்கோட்டை ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் யார் என்பதையும், அவரது போன் நம்பரையும் உடனுக்குடன் தருவதெல்லாம் ஸ்பீடு போஸ்ட் திரைக்கதையாக்கம்..!

எந்த ஊரில் மாவட்ட கலெக்டர், போலீஸாரின் ஷூட்டிங்கிற்கு பெர்மிஷன் தருகிறார்..? இப்போதுவரையிலும் போலீஸாரால் செய்யப்படும் அத்தனை என்கவுண்ட்டர்களும், கலெக்டரிடமிருந்து பெர்மிஷன் வாங்கிய பின்பா நடத்தப்படுகிறது..?

என்கவுண்ட்டர் நடந்த பின்பு அதைப் பற்றி விசாரிக்கத்தான் சப்-கலெக்டர் வருவார். இதுதான் நடைமுறை. இதுவுமில்லாமல் எழுத்துப்பூர்வமாக எந்த அனுமதியும் கேட்காமல் ரோட்டோரமாக வந்து நிற்கும் கலெக்டர், சைக்கோவை ஷூட் செய்ய ஆர்டர் கொடுக்கிறார் என்பதெல்லாம் உச்சக்கட்ட காமெடியான திரைக்கதையாக்கம்.

விபின்-சஹானா சம்பந்தப்பட்ட கதை சற்று சுவாரஸ்யத்தைக் கொடுத்தாலும் அதனை படத்தின் பின்பாதியில் கொண்டு வந்து காட்டும்போது பரபரப்புத் தொற்றினாலும் கிளைமாக்ஸ் சேஸிங்கில் இருக்கும் தடுமாற்றத்தினால் நமக்கே சிரிப்பு வந்துவிடுகிறது.

கிளைமாக்ஸ் சேஸிங்கில் விட்டுப் பிடிப்போம் என்பது சரிதான் என்றாலும் அதையே முன்பேயே செய்திருக்கலாம். அதைவிட்டுவிட்டு ரோடு அந்தரத்தில் நிற்கிறது என்று தெரிந்தவுடன் காரை வைத்து மோதி நிறுத்துவதெல்லாம் பழைய காலத்து டெக்னிக். இதுவும் தியேட்டரில் கை தட்டல் வாங்கிய காட்சிகளில் ஒன்று..!

ஆனால் என்ன..? முதல் பாதியை விடவும் இரண்டாம் பாதியில் படத்தை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். இதனாலேயே படம் போரடிக்காமல் செல்கிறது என்ற பீலிங், வீட்டுக்குக் கிளம்பிய ரசிகர்களிடம் தொற்றிக் கொள்கிறது..!

மொத்தத்தில், இந்த ‘லாந்தரில்’ போதிய வெளிச்சம் இல்லை.

RATING : 2.5 / 5

Our Score