full screen background image

அடுத்த ஊமைவிழிகள் இந்தப் படம்தானாம்..!

அடுத்த ஊமைவிழிகள் இந்தப் படம்தானாம்..!

ஒரு மனிதருக்கு தன்னம்பிக்கை மிகவும் அவசியம்தான். ஆனால் இந்த அளவுக்கு இருக்க முடியுமா என்ன..? ‘மறுமுகம்’ படத்தின் இயக்குநர் கமல் சுப்ரமணியம் தனது படத்தை அடுத்த ‘ஊமைவிழிகள்’ படம் இதுதான் என்று அடித்துச் சொல்கிறார்..! “ஊமை விழிகள்’ உங்களுக்குக் கொடுத்த திருப்தியை இந்தப் படமும் நிச்சயம் தரும்..” என்கிறார் இயக்குநர் கமல்.

எண்டர்டெய்ன்மெண்ட் அன்லிமிட்டட் சார்பில் சன்ஜய் டாங்கி தயாரிப்பில் வெளிவரும் இப்படம் ஒரு கிரைம் திரில்லர் டைப். திரைப்படக் கல்லூரி மாணவர்களை கொண்ட ஒரு டீம்தான் படத்தை உருவாக்கியிருக்கிறது. திரைப்படக் கல்லூரியின் மாணவரான நடிகர் டேனியல் பாலாஜி இதில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ப்ரித்தி தாஸ், அனு, ஷில்பி, ரிஷி ஆகியோரும் நடித்துள்ளனர். ப்ரீத்தி உள்பட பலருக்கும் இதுதான் முதல் படமாம்.

விஜயகாந்த் அரசியலுக்குச் சென்றது குறித்து வருத்தப்படும் ஒரேயொரு சினிமாக்காரர் இவராகத்தான் இருப்பார் போலிருக்கிறது. “திரைப்படக் கல்லூரி மாணவர்களாகிய நாங்கள் முதலில் கதை சொல்ல செல்வது கேப்டன் விஜயகாந்த்திடம்தான். திரைப்படக் கல்லூரி மாணவர்கள் எல்லாரது முதல் கனவும் அதாத்தான் இருக்கும். கல்லூரி யிலிருந்து வெளியே வந்ததும் செல்லும் முதல் இடம் விஜயகாந்தின் ஆபீஸ் இருந்த ராஜாபாதர் தெருதான். அவர் ஒருத்தர்தான் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் பலரையும் இயக்குநர் ஆக்கியவர். விஜயகாந்த் சினிமால நல்ல ஆக்ட்டிவ்வா இருக்கும்போது நான் தயாரா இல்லை. இப்போ நான் படம் இயக்கத் தயாரா வந்தப்போ.. அவர் அரசியல் என்று வேறு உலகத்தில் இருக்கிறார். அவர் இப்போது இதில் நடிக்க முடியாத்து எங்களுக்கு இழப்புதான்..” என்கிறார் இயக்குநர்.

மறுமுகம்‘ என்பதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டதற்கு.. “எல்லாரிடமும் பல முகங்கள் உண்டு. சூழலுக்கு ஏற்றபடி நல்ல முகமோ கெட்ட முகமோ ஒவ்வொருத்தர்கிட்டேயிருந்தும் வெளிப்படும். அப்படி வெளிப்படும் ஒருத்தனோட இன்னொரு முகம்தான் இந்த மறுமுகம்..” என்றார் இயக்குநர். வரட்டும் பார்த்திருவோம்..!

இந்தப் படத்தில் 2 கதாநாயகிகள்.. இருவரிடமும் பேட்டி என்ற பெயரில் வாயைப் பிடுங்கி செய்திகளை கொட்ட வைக்கும் வித்தையை பத்திரிகைகள் செய்து பார்த்தன. அது முடியாமல் கடைசியாக இயக்குநரிடமே, “எந்த நடிகையை நல்லா வேலை வாங்கியிருக்கீங்க..?” என்று கேட்டு சற்று இடைவெளிவிட்டு “படத்துல” என்று ‘வெண்ணிற ஆடை மூர்த்தி’ டைப்பில் கேள்விகளை கேட்டது ரொம்பவே ஓவராக இருந்தது.. இயக்குநர் மட்டுமல்ல.. மேடையில் இருந்தவர்களே இந்தக் கேள்வியால் ஜெர்க் ஆகிவிட்டார்கள்.. ஆனாலும் கேள்வி கேட்டது மீடியா என்பதால் சற்று சுதாரித்து பதில் ஏதோ பதில் சொல்லிச் சமாளித்தார் இயக்குநர். மேடை நாகரிகமென்பது மேடையில் இருப்பவர்களுக்கு மட்டும்தானா..? கீழே இருப்பவர்களுக்கு இல்லையா..?

Our Score