மறுமுகம் படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் தடை..!

மறுமுகம் படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் தடை..!

படம் எடுப்பது சுலபமல்ல.. அதை ரிலீஸ் செய்வதுதான் கடினம் என்று பலரும் சொல்வார்கள். அதற்கான பல காரணங்களில் கடன் பிரச்சினையும் ஒன்று..

படத் தயாரிப்புக்காக வாங்கிய பணத்திற்கு வட்டி கட்ட முடியாமலேயே பல திரைப்படங்கள் இன்னமும் திரைக்கு வராமல் முடங்கிக் கிடக்கின்றன.. படம் ரிலீஸான பிறகு படம் தோல்வியடைந்து வசூல் வரவில்லையெனில் தயாரிப்பாளர் கையில் காசில்லை என்று சொல்லித் தப்பிக்க வழியுண்டு என்பதால் பணத்தை எண்ணி வைச்சிட்டு படத்தை ரிலீஸ் செஞ்சுக்க என்று சொல்லும் முதலாளிகள்தான் இங்கே அதிகம்..

மறுமுகம் என்ற படத்தை எண்ட்டெர்டெயிண்மெண்ட் அன் லிமிடெட் நிறுவனத்தின் சார்பாக சன்ஜய் டாங்கி என்பவர் தயாரித்திருக்கிறார். டேனியல் பாலாஜி, பானுசந்தர், உமா பத்மநாபன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஆபாவாணனின் அஸிஸ்டெண்ட் கமல் இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தின் தயாரிப்புச் செலவுக்காக செளகார்பேட்டையை சேர்ந்த சுகன்போத்ரா என்ற பைனான்சியரிடம் பல லட்சம் கடன் வாங்கியிருக்கிறார். இந்த கடன் தொகையை சன்ஜய் கட்டாததால் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார் சுகன் போத்ரா.

நீதிமன்றம் மூலமாக இந்த வழக்கு சமரசத் தீர்வு மையத்திற்கு அனுப்பப்பட்டு அங்கே ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் 40 லட்சம் ரூபாயை தயாரிப்பாளர் சன்ஜய், பைனான்ஸியர் சுகன்போத்ராவுக்குத் திருப்பித் தருவது மற்றும் சில ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளது..

இந்த மாதம் ‘மறுமுகம்’ படம் திரைக்கு வர தயாராகியுள்ள நிலையில் சமரசத் தீர்வு மையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி தயாரிப்பாளர் சன்ஜய், பைனான்ஸியர் சுகன்போத்ராவிற்கு பணம் தரவில்லையாம். இதனால் இந்த ‘மறுமுகம்’ படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது. இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நேற்றைக்கு தடை உத்தரவு வாங்கிவிட்டார் போத்ரா..

சினிமாவில் சொல்லப்படும் கதைகளைவிட.. அதன் தயாரிப்புப் பணிகளின் பின்னணியில் இருக்கும் இது போன்ற கதைகளே அதிகம் கண்ணீரை வரவழைககும்.. தயாரிப்பாளர் பாவந்தான்..!

Our Score