எத்தனை தேர்தல்கள் வந்தாலும் தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் பூசல்கள் ஓயாது போலிருக்கிறது..
பெரும்பாடுபட்டு சென்ற வருடம்தான் தேர்தலை நடத்தினார்கள் தயாரிப்பாளர் சங்கத்தினர். இதில் கேயார் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இதனை எதிர்த்து தோல்வியடைந்த தயாரிப்பாளர் தாணு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அது விசாரணைக்கு பின்பு தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் அப்பீல் மனு தாக்கல் செய்தார் தாணு. இதுவும் மிகச் சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
கோர்ட் மூலமாக இனி தாக்குதல் நடத்த முடியாது என்று நினைத்த தயாரிப்பாளர் தாணு, தனிப்பட்ட முறையிலேயே தனது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம். அதற்காக இன்று கோயம்பேட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் தயாரிப்பாளர் சங்கத்தின் அவசரப் பொதுக்குழு என்ற பெயரில் தனது ஆதரவாளர்களை அழைத்திருக்கிறாராம்..
இதில் எதையாவது செய்து மறுபடியும் தங்களுக்குக் குடைச்சல் கொடுப்பாரோ என்று பயந்து போன தற்போதைய தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் நேற்றைக்கே உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். “சங்க விதிமுறைகளை மீறி ஒரு தனி நபர் பொதுக்குழுவைக் கூட்டியுள்ளார். இது முறையற்றது. இந்தக் கூட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும்..” என்று கோரியுள்ளனர். இவர்களது கோரிக்கையை ஏற்று இன்று நடைபெறவிருந்த தாணுவின் பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தடை விதித்துள்ளது உயர்நீதி்மன்றம்.
இவர்களது பிரச்சினைதான் என்ன என்று தெரியவில்லை..!