full screen background image

மருது – சினிமா விமர்சனம்

மருது – சினிமா விமர்சனம்

‘குட்டிப் புலி’, ‘கொம்பன்’ படங்களை இயக்கிய இயக்குநர் முத்தையாவின் மூன்றாவது படம் இது.

விஷாலை முழுமையாக ஆக்சன் ஹீரோவாக்க நினைத்து அவருக்காகவே உருவாக்கப்பட்ட கதையில், அரிவாளையும், ரத்தத்தையும் ஒன்றாகக் கலந்து.. சைட் டிஷ்ஷாக செண்டிமெண்ட்டுகளை சேர்த்து, கூடவே ஜாதியப் பின்னணியில் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து தன் அம்மா வழி பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவர் விஷால். தன் பாட்டிக்காக எதையும் செய்யக் கூடியவர். அதேபோல் பாட்டியும். தன் பேரனை பாசமிக்கவராகவும், தைரியமானவராகவும் வளர்த்திருக்கிறார்.

ம.இ.க. கட்சியின் மாவட்டச் செயலாளரான பயில்வானிடம் அடியாளாக இருப்பவர் ரோலக்ஸ் பாண்டியன் என்னும் ஆர்.கே.சுரேஷ். அவர் “தூக்கிட்டு வா..” என்றால் இவர் வெட்டி கொண்டு வருபவர். மெல்ல, மெல்ல அரசியலுக்குள்ளும் வந்து கூட்டுறவு சங்கத்தில் செயலாளர் பதவியையும் பிடித்திருக்கிறார் சுரேஷ்.

அடுத்து ராஜபாளையம் தொகுதிக்கான சட்டமன்றத் தேர்தலில் நிற்கும் வாய்ப்பு சுரேஷுக்கு காத்திருக்கிறது. பயில்வான் அதற்கான உறுதிமொழியையும் தருகிறார். ஆனால் இந்த நேரத்தில் ரேஷன் கடை அரிசியைக் கடத்திய தகராறில் ஹீரோயின் ஸ்ரீதிவ்யாவின் அம்மாவை கொலை செய்த வழக்கு, சுரேஷின் முன்பு விளையாட்டு காட்டுகிறது.

இதற்கு முன்பாகவே விஷாலுக்கும், ஸ்ரீதிவ்யாவுக்கும் இடையே ஒரு அடிதடியோடு பழக்கம் உருவாகி விஷால் பாட்டியின் நச்சரிப்பாலும், விஷாலின் நெருங்கிய நண்பனான சூரியின் உதவியாலும் காதலாகி கசிந்துருகிறது.

“கோர்ட்டில் சாட்சி சொல்ல ஸ்ரீதிவ்யா வந்தால் வெட்டுவேன்..” என்கிறார் சுரேஷ். “வெட்டிப் பாருடா…” என்கிறார் விஷால். இதையும் தாண்டி கோர்ட்டுக்கு போனதால் கோபப்பட்ட வில்லன் சுரேஷ், அடுத்து எடுத்த அதிரடி முடிவு படத்தின் கிளைமாக்ஸுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. அது என்ன என்பதை கண்டிப்பாத திரையில் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

முழுக்க முழுக்க விஷாலுக்காகவே உருவாக்கப்பட்ட படம் என்பதால் ஹீரோயிஸமே மேலோங்கியிருக்கிறது. ஹீரோ தன் பாட்டி மீது வைத்திருக்கும் பாசம் குடும்பத்தினர்களை கவர்வதற்காகவும், காதல் போர்ஷன்கள் காதலர்களைக் கவர்வதற்காகவும் ஒரே சட்டியில் போட்டு கலவை செய்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் முத்தையா.

விஷால் வழக்கம்போலவே நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்காக தன் உடல் எடையைக் கூட்டியிருக்கிறார். மூட்டை தூக்கும் தொழிலாளி என்ற கேரக்டர் ஸ்கெட்ச்சுக்காக மெனக்கெட்டிருக்கிறார். சண்டைக் காட்சிகளில்தான் அகோரம்.. விஷாலின் நடிப்பு இன்னும் சிறப்பாக வெளிப்படும் அளவுக்கு காட்சியமைப்புகள் இல்லையென்பதால் அவரைக் குற்றம் குறை சொல்ல முடியாது.

இதேபோலத்தான் ஹீரோயின் ஸ்ரீதிவ்யா. கோவிலில் எச்சில் துப்பியவனை கன்னத்தில் அறைந்து அவன் வேட்டியை உருவி கையில் கொடுத்துவிட்டு “துடைடா..” என்று சொல்லும் அஞ்சா சிங்கமாக காட்டிவிட்டு கடைசியில் கேஸை வாபஸ் வாங்கிரலாமா என்று கேட்க வைத்து அவரை சராசரியாக்கியது ஏனோ..?

‘அக்கா பெத்த ஜட்கா வண்டி’ பாடல் காட்சியில் கண்களுக்கு குளிர்ச்சியை தந்திருக்கிறார். ஆனால் கவர்ச்சியிலும், ஈர்ப்பிலும் இவர் போக வேண்டிய தூரம் இன்னமும் அதிக தூரமப்பா..!

பயில்வானாக நடித்திருக்கும் ராதாரவி அவர் இருக்கின்ற காட்சிகளிலெல்லாம் ஸ்கோர் செய்திருக்கிறார். விஷாலுக்கும், ராதாரவிக்கும் பொருத்தமான வசனங்களையும் இதில் வைத்திருக்கிறார்கள். “என்னோட 45 வருஷ சர்வீஸ்ல எவனும் என்னை எதிர்த்துப் பேசினதில்லை..” என்கிறார் ராதாரவி. “உங்க 45 வருஷ சர்வீஸ்ல நீங்க பார்க்காத ஒரு எதிரியை இப்போ நீங்க பார்க்கப் போறீங்க..” என்கிறார் விஷால். ஹீரோயிஸ டயலாக் நல்லாத்தான் இருக்கு.

வில்லனாக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷின் நடிப்பு பிரமாதம். அறிமுகக் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் சுரேஷின் நடிப்பில் எப்போதுமே ஒரு பயங்கரம் இருந்து கொண்டேயிருக்கிறது. அது கிளைமாக்ஸ்வரையிலும் தொடர்வதும்.. கிளைமாக்ஸில் அவர் விடும் சவாலும், சண்டையும் சண்டை காட்சி பிரியர்களுக்குப் பிடித்தமானதுதான்.

பாட்டியாக நடித்திருக்கும் கேரளத்து லீலா பாட்டி புது வரவு. டப்பிங் வாய்ஸ் மட்டும் சில இடங்களில் ஒட்டவில்லை என்பதைத் தவிர வேறு குறையில்லை. நிறைவான நடிப்பு. தன்னுடைய முடிவு நெருங்கிவிட்டது என்பது தெரிந்தும் தன் பேரனை விட்டுக் கொடுக்காமல் பேசிவிட்டு, விஷாலிடமும் எதுவும் பேசாமல் மறைக்கும் காட்சியில் இவருடைய நடிப்பும், இயக்கமும் அருமை.

குழந்தைகள் குடும்பத்தோடு வரக் கூடிய இந்தப் படத்தில் பாட்டியின் சோக முடிவை இப்படி பட்டவர்த்தனமாக செய்முறை நேர்த்தியோடு செய்து காட்டணுமா என்ன..? தவிர்த்திருக்கலாம் இயக்குநரே.

வேல்ராஜின் ஒளிப்பதிவும், டி.இமானின் இசையும் வழக்கம்போலவே சிறப்பானது. பரபரப்பான சண்டை காட்சிகளில் காட்டியிருக்கும் கேமிரா வித்தைக்காகவும், ராஜபாளையத்தின் மூலை, முடுக்கையெல்லாம் தனது காமிராவில் பதிவு செய்தமைக்காகவும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜை பாராட்டித்தான் ஆக வேண்டும்.

கதையே கமர்ஷியல் கம்மர்கட் என்னும்போது அதற்கேற்றவாறு பாடல்கள்தானே கிடைக்கும்.. ‘சூறாவளிடா’ பாடலும், ‘அக்கா பெத்த ஜட்கா வண்டி’ பாடலும் கேட்கும் ரகம்தான். ஆனால் ஒரு முறைதான்.

இத்தனை ஸ்டைலிஷான சண்டை காட்சிக்காக அனல் அரசுவை பாராட்டியே ஆக வேண்டும். வெட்டுக் குத்து என்று நிறைய இருந்தும் அதனை நீளமாக வைக்காமல் குறுக்கிக் கொண்டதற்கு இயக்குநருக்கு ஒரு நன்றி.

படத்தின் பிற்பாதியில் வரும் ஸ்ரீதிவ்யாவின் அம்மா சம்பந்தப்பட்ட காட்சிகளை முன் பாதியிலேயே கொண்டு வந்திருந்தால் கதையின் மீது ஈர்ப்பு இருந்திருக்கும். பிற்பாதியில் பிளாஷ்பேக்காக வந்ததாலும், பாட்டி ஸ்ரீதிவ்யாவை காதலிக்க வைத்த கதை ஒரு நிமிடம் வந்து போவதாலும் மனதில் ஒட்டவில்லை இயக்குநரே..!

கமர்ஷியல்ன்னு முடிவு செய்தாகிவிட்டது. பிறகெதற்கு முக்காடு என்று நினைத்துவிட்டார் முத்தையா. பேரரசுவின் படம் எப்படியிருக்குமோ அதை போலவே ரீல் பை ரீல் படமெடுத்து முடித்துக் காட்டிவிட்டார்.

ஆனாலும், தனது முந்தைய படங்களை போலவே இந்தப் படத்திலும் தேவரின ஜாதி பெருமையைச் சொல்லும்விதமாகவே திரைக்கதை அமைத்திருக்கிறார். இந்த ஜாதியை இவர் ஏன் விட மாட்டேங்கிறார் என்று தெரியவில்லை. இப்படி ஜாதி பெருமையை சினிமாவில் பேசிப் பேசியே அந்த இளைஞர்களைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் தவறானது.. படைப்பாளிகள் தங்களது படைப்புகளை நேர்மையாக வைத்துக் கொண்டால் நல்லது.

பாலா, சுசீந்திரன் போன்றோரின் இயக்கம்தான் விஷாலின் தனித்தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டின. விஷால் இனிமேல் இயக்குநர்களின் கதைகளில் நடித்தால் இதைவிடவும் அவருடைய நடிப்பு கேரியர் மென்மேலும் உயரும்..!

செய்வாரா..?

Our Score