இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்த ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.
இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடிக்க, ஷியாம் செல்வன், ரக்ஷனா, நக்ஷா சரண், அப்புக்குட்டி, ஜார்ஜ் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்காக 31 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜாவும், இசைஞானி இளையராஜாவும் இணைந்துள்ளனர்.
பழனி அருகேயிருக்கும் ஒரு சிறிய கிராமத்தில் தனது தாத்தாவின் அரவணைப்பில் வாழ்ந்து வருபவர் நாயகி ரக்ஷனா. அவருடைய பெற்றோர்கள் இறந்துவிட்டதால் அப்பா வழி தாத்தாவான பாரதிராஜாதான், இவரை சிறிய வயதிலிருந்தே வளர்த்து வருகிறார். இவரது தாய் மாமா சுசீந்திரன்.
நாயகி ரக்சனா பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய நெருங்கிய தோழி நக்சா சரண். இவர்களுடைய வகுப்பிற்குப் புதிதாக வந்து சேர்பவர்தான் நாயகன் ஷ்யாம் செல்வன்.
வகுப்பில் எப்போதும் முதல் மார்க் வாங்கி வரும் நாயகி ரக்சனா ஷ்யாம் வந்தவுடன் 2-ம் இடத்திற்குத் தள்ளப்படுகிறார். நாயகன் ஷ்யாம் மிகச் சிறப்பாக படித்து அனைத்துத் தேர்வுகளிலும், அனைத்துப் பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெற்று முதல் ரேன்க்கையும் எட்டிப் பிடித்துவிடுகிறார்.
இதனால் நாயகன் மீது கோபம் கொள்கிறாள் நாயகி. பின்னர் அவர்களுக்குள் நட்பாகி அதுவே காதலாகவும் மாற… இருவரும் 11-ம் வகுப்பிலும் ஒரே பாடத்தைத் தேர்வு செய்து ஒரே வகுப்பிலேயே படித்து 12-வதையும் முடிக்கிறார்கள்.
இப்போது நாயகன் சென்னைக்குச் சென்று மெரைன் என்ஜீனியரிங் படிக்க விரும்புகிறான். நாயகியும் சென்னையில் படிக்க விரும்ப தாத்தா அனுமதி தர மறுக்கிறார். இந்த நேரத்தில் நாயகி தான் நாயகனைக் காதலிக்கும் விஷயத்தை தாத்தாவிடம் சொல்லிவிடுகிறார்.
ஏற்கெனவே தாய் மாமன் சுசீந்திரன், நாயகியை தங்களது உறவு முறையில்தான் திருமணம் செய்து தர வேண்டும் என்று பாரதிராஜாவிடம் சண்டையிட்டுச் சென்றிருக்கிறார்.
இந்த நிலையில் இவர்களது காதலைத் தெரிந்து கொள்ளும் பாரதிராஜா, நாயகனின் வீட்டுக்கு வந்து நாயகனின் பெற்றோரிடமும் பேசுகிறார். பின்பு நாயகன், நாயகி இருவரும் தங்களது படிப்பை வெற்றிகரமாக முடித்த பின்பு திருமணம் செய்து வைப்பதாக வாக்குறுதி அளிக்கிறார். “அதுவரையிலும் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்வதோ, பேசிக் கொள்வதோ கூடாது” என்று நிபந்தனை விதிக்கிறார். இதற்கு காதலர்கள் இருவரும் ஒத்துக் கொள்கிறார்கள்.
3 ஆண்டுகள் கடந்த நிலையில் நாயகி ஊருக்குத் திரும்பி நாயகனைப் பார்க்க வர, அவர்களது வீடு பூட்டியிருக்கிறது. நாயகனின் அப்பாவுக்கு உடல் நலம் சரியில்லை என்பதால் சிகிச்சைக்காக வெளியூர் சென்றிருப்பதை அறிந்து கொள்கிறாள்.
இடையில் நாயகன் அப்பாவின் மருத்துவச் செலவுக்காகத் தன் படிப்பை முடிக்காமல் விட்டுவிட்டு துபாய்க்கு வேலைக்குப் போனதாகத் தெரிந்து கொள்கிறாள். அவனைத் தொடர்பு கொள்ள முயல்கிறாள்.. முடியவில்லை..!
இதற்கு என்ன காரணம்..? காதலன் உண்மையில் துபாய் சென்றானா..? இவர்களது காதல் என்னவானது..? என்பதுதான் இந்த ‘மார்கழி திங்கள்’ படத்தின் சுவையான திரைக்கதை.
தாத்தா பாரதிராஜாவும், பேத்தி ரக்சனாவும் போட்டி போட்டு நடித்துள்ளனர். பாடல் காட்சிகளில் தனது பேத்தி மீதான பாசத்தைக் காட்டுவதிலும், சுசீந்திரனிடம் விட்டுக் கொடுக்காமல் பேசுவதிலும், பேத்தியின் காதலுக்கு அப்போதைக்கு ஓகே சொல்லி பேத்தியிடம் “படிப்பு முக்கியம்” என்று சொல்லுமிடத்திலும் பாரதிராஜா தாத்தாவாகவே மாறியிருக்கிறார்.
தனது வில்லத்தனத்தை அவர் காட்டுகின்ற இடத்திலும், கிளைமாக்ஸிலும் அவர் துடிக்கும், அனுபவிக்கும் அந்த வலியும் நிச்சயமாக கண்களில் கண்ணீரை சிந்த வைக்கிறது.
நாயகியான ரக்சனா கேமிராவுக்கு ஏற்ற முகமாக அழகாக இருக்கிறார். சிறப்பாகவும் நடித்திருக்கிறார். வசனங்களை ஏற்ற, இறக்கத்துடன் பேசியிருக்கும்விதமே இவரை இயக்கிய இயக்குநரின் திறமையைக் காட்டுகிறது. கிளைமாக்ஸில் தான் எடுக்கும் ஒரு கொடுமையான முடிவினால், கனமான மனத்துடன் ரசிகர்களை வீட்டுக்கு அனுப்புகிறார் ரக்சனா. ஹாட்ஸ் அப்..!
இன்னொரு நாயகியான நக்சா சரணும் தனது தோழி கதாப்பாத்திரத்தையும் தாண்டி இரண்டாவது நாயகியாகவும் தனது நடிப்பை செவ்வனே செய்திருக்கிறார்.
தாய் மாமன் சுசீந்திரன் நடிப்புக்கு புதிய வரவு. சாதி திமிரையும், ஆணாதிக்கத் திமிரையும் ஒருங்கே காண்பித்திருக்கிறார். அப்புக்குட்டி, ஜார்ஜ் விஜய், சர்மிளா என்று துணையாக நடித்தவர்களும் அவரவர் கதாப்பாத்திரத்திற்கேற்ற நடிப்பைக் காண்பித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் வாஞ்சிநாதன் முருகேசனின் ஒளிப்பதிவு கிராமத்து அழகை கண் முன்னே காட்டியிருக்கிறது. பாடல் காட்சிகளில் காட்டும் பிரம்மாண்டமான வயற்காட்டின் அழகு, நாயகியின் அழகைவிடவும் அற்புதமாக இருக்கிறது. சில காட்சிகளின் கேமிரா கோணங்கள் சபாஷ் என்று சொல்ல வைத்திருக்கிறது.
ஒரே டிரம்ஸ் சப்தங்களுக்கு இடையில் பாடல் வரிகள்கூட நம் காதில் விழாமல் இரைச்சலைக் கூட்டிக் கொண்டிருக்கும் இப்போதைய இசையுலக நடப்பினால், நமது காதுகள் பஞ்சராகி போயிருந்த நிலையில்… இந்தப் படத்தில் ‘இசைஞானி’ இளையராஜாவின் இசை கேட்பதற்கு இதமாக இருக்கிறது.
அனைத்து பாடல்களுமே சிறப்பாக வந்திருக்கிறது. அதிலும் ‘பிடிச்சிருக்கு’ பாடலில் பழைய ‘இசைஞானி’யை பார்க்க முடிகிறது.. பின்னணி இசையை, கதையோடு நகரும் வகையில் இசைத்து தனது பணியைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார் ‘இசைஞானி’.
ஒரு இயக்குநராக மனோஜ் பாரதிராஜா நல்ல கதையைத்தான் தேர்வு செய்துள்ளார். சிறந்த திரைக்கதையில்.. கவனம் ஈர்க்கும் வசனங்களினால்.. துடிப்பான இயக்கத்தினால் மிக அழகான சிறுகதை போல எடுக்கப்பட்டிருக்கிறது இந்தப் படம்.
ஆனால், கிளைமாக்ஸில் நாயகி எடுக்கும் முடிவுதான் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பெண்கள், ஆண்களுக்குப் பாடம் உணர்த்துவதற்காகத் தங்களை தியாகம் செய்து கொண்டிருப்பார்கள்..?
இறுதியில் மரணித்திருக்க வேண்டியவர் நயவஞ்சரான தாத்தாதானே ஒழிய, அப்பாவி பேத்தியல்ல..! இந்தக் கோபம், படம் பார்த்துவிட்டு வெளியே வரும் அனைத்து ரசிகர்களிடத்திலும் இருக்கிறது..!
மார்கழித் திங்கள் – சாதிய கதையிலும் அழகுணர்ச்சி கொண்ட படம்!!!
RATING : 4 / 5