Golden Peacock Film Productions சார்பில் தயாரிப்பாளர் சந்துரு தயாரித்துள்ள புதிய படம் ‘மறவன்’.
இந்தப் படத்தில், ஹரிதாஸ், குமரேஷ், டேனிஷ், கவிதா தியாகராஜன், சங்கீதா கிருஷ்ணசாமி, புஷ்பா நாராயணன், சீலன், ஆர்.எஸ்.ராஜா தர்மா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
முழுக்க முழுக்க மலேசியத் தமிழில் பேசப்பட்டு உருவான இந்தப் படம், மலேசியாவில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
உள்ளூர் மக்களின் அமோக வரவேற்புடன் வெளிநாடுகளிலும் இந்த ‘மறவனு’க்கு ஏக வரவேற்புதான். நியூயார்க் மற்றும் டாக்காவில் நடந்த International Open Film Festival-ல் Country Best Award விருதினை பெற்றது.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் நடைபெற்ற ஃபீனிக்ஸ் திரைப்பட விழாவில் அரையிறுதிச் சுற்றுவரை தேர்வானது. Barcelona Planet Film Festival, Russian International Film Festival, Singapore World International Film Festival, Scenes International Debut Film Festival, HongKong World International Film Festival போன்ற அனைத்து சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இந்தப் படம் அதிகாரப்பூர்வமாக போட்டிப் பிரிவுக்கு தேர்வானது.
‘மலேசியா தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சு’ என்றழைக்கப்படும் ‘மலேசிய திரைப்பட மேம்பாட்டு சம்மேளனம்’ ஆதரவில் எக்ஸ்ட்ரீம் புரொடெக்சன்ஸ் சார்பில் டத்தோ ஸ்ரீரோஷன்தாஸ் இந்தப் படத்தை மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் வெளியிடுகிறார்.
இயக்குநர் மோகன்ராஜா இயக்கிய ‘தில்லாலங்கடி’, மற்றும் ‘வேலாயுதம்’ ஆகிய படங்களிலும் ஆர்.டி.நேசன் இயக்கிய ‘ஜில்லா’ படத்திலும் உதவி இயக்குநராகப் பணியாற்றிய புவனேந்திரன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
சென்னையில் நடந்த இந்தப் படத்தின் திரையிடலில் தயாரிப்பாளரும், எடிட்டருமான மோகன், இயக்குநர்கள் மோகன்ராஜா, ஆர்.டி.நேசன், கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், கதாசிரியர் பிரபாகர், நடிகர் அசோக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜாக்குவார் தங்கம் பேசும்போது, “நான்கூட மலேசிய தமிழ்ப் படம் என்றதும் அதில் மலேயா மொழியில் பேசியிருப்பார்கள். இல்லையென்றால் ஆங்கிலத்தில் பேசியிருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் படத்தில் முழுக்க தமிழில், அதுவும் அவர்களின் தாய் மொழியான மலேசிய தமிழில் பேசியிருப்பது பாராட்டுக்குரிய விஷயம்..” என்றார்.
இயக்குநர் மோகன்ராஜா பேசும்போது, “என் மாணவன் புவன். அவனை நினைச்சு ரொம்பப் பெருமைப்படுறேன். முதல்ல நான்கூட பயந்துதான் இருந்தேன். என்ன மாதிரி எடுத்திருப்பானோன்னு நினைச்சிட்டே வந்தேன். பரவாயில்லை. என் பெயரைக் காப்பாத்திட்டான். படத்தை நன்றாகவே எடுத்திருக்கிறான். சில குறைகள் இருக்கத்தான் செய்கிறது. அதனை அடுத்த படத்தில சரி பண்ணிக் கொள்வான்… அவன் இன்னும் திறமையாக செயல்பட்டு நல்ல படங்களை எடுத்துக் கொடுப்பான் என்று நான் உறுதியாக நம்புகிறேன்..” என்றார்.









