உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த ‘பட்டாம்பூச்சி’, ‘தாம்பத்யம் ஒரு சங்கீதம்’, ‘இவர்கள் வருங்கால தூண்கள்’ உள்ளிட்ட 18 படங்களை தயாரித்தவர் ஆர்.ஆர்.பிலிம்ஸ் தயாரிப்பாளர் ரகுநாதன்.
இவருடைய 19-வது தயாரிப்பாக, தற்போது உருவாகியிருக்கும் படம் ‘மரகதக் காடு’.
முழுக்க முழுக்க ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ, மலையாள டைரக்டர் இலியாஸ் காத்தவன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, சாபு ஜோசப் படத் தொகுப்பை கவனித்துள்ளார். ஜெய்பிரகாஸ் என்ற புதியவர் இசையமைத்துள்ளார். மங்களேஸ்வரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று இரவு பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குநர் சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், முன்னாள் தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார், தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் ஆகியோர் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினார்கள்.
விழாவில் தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், இயக்குநருமான கேயார் பேசும்போது, “தயாரிப்பாளர் ரகுநாதன் சுயமரியாதை அதிகம் உள்ளவர். அதனாலேயே வீம்பு பிடித்தவர். எதற்காகவும் யாரிடமும் போய் நிற்க மாட்டார். திரையுலகில் 45 வருடங்களை கடந்தும் படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது சினிமாவை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பதை காட்டுகிறது. சினிமா ஒரு பக்கம் அமோகமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் ரொம்பவே மோசமாகவும் இருக்கிறது.. இதை சம்பந்தப்பட்டவர்கள் சரி செய்ய வேண்டும்… என கேட்டுக் கொண்டார்.
கவிஞர் வெண்ணிலா பேசும்போது, “எனது நண்பனான இயக்குநர் மங்களேஸ்வரன், இயக்குநர் கனவுகளோடு சென்னைக்கு கிளம்பி இன்றோடு 20 வருடங்கள் கடந்துவிட்டது.
இயக்குநர் பாரதிராஜாவை சந்திப்பதற்கான பரிந்துரை கடிதத்துடன் புறப்பட்ட அவர், இன்று தனது கனவை நனவாக்கி, தனது படத்தின் விழாவில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுடன் அமர்ந்திருப்பதை பார்க்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது…” என்றார்.
தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி பேசும்போது, “ராஜராஜன் சிலை தஞ்சைக்கு மீண்டும் வந்ததில் இருந்து. காவிரி நீராகட்டும், இப்போது ஏழு பேர் விடுதலை குறித்து பேசியிருப்பதாகட்டும் தமிழகத்தில் தொடர்ந்து நல்ல விஷயங்களாகவே நடக்கின்றன. இதற்காக தமிழக அரசுக்கும் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கமர்ஷியலாக படம் எடுத்து சம்பாதித்துவிட்டு போக நினைக்காமல் சமூக நோக்கிலான படங்களை மட்டுமே எடுக்க நினைக்கும் தயாரிப்பாளர் ரகுநாதனை பாராட்ட வேண்டும்.
தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமலை தனது ‘பட்டாம் பூச்சி’ என்கிற படத்தில் தனி கதாநாயகனாக அறிமுகப்படுத்திய பெரும் பாக்கியம் பெற்றவர் ரகுநாதன். இன்று தமிழ் திரையுலகிற்கு கமல் சார் இவ்வளவு பெருமை சேர்த்துள்ளார் என்றால், அதில் முக்கிய பங்கு தயாரிப்பாளர் ரகுநாதனுக்கும் உண்டு.
எனக்கு கமல் சார் மீது ரொம்ப நாளாகவே ஒரு வருத்தம் உண்டு. இந்த ‘மரகதக் காடு’ குழுவினர் இந்தப் படத்தை தயார் செய்துவிட்டு இதன் பர்ஸ்ட்லுக்கை வெளியிடுவதற்காக கமல் சாரை தொடர்பு கொண்டனர். தயாரிப்பாளர் ரகுநாதன் கமல் சாரை சந்திக்க இரண்டு முறை நேரம் கேட்டும் கமல் தரப்பில் இருந்து கடைசிவரை பதிலே வரவில்லை. பதில் வரவில்லையா இல்லை… இந்த தகவலே அவருக்கு சென்று சேரவில்லையா என தெரியவில்லை.
நான் அவரது ரசிகன் என்கிற முறையில் சொல்கிறேன் உண்மையிலேயே நீங்கள் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்க நினைத்தீர்கள் என்றால் உங்களை அறிமுகப்படுத்திய ஒரு தயாரிப்பாளர் இவ்வளவு நாட்களாக படம் எடுக்காமல் இருந்து இன்று சமூக மாற்றத்திற்காக ஒரு படம் எடுத்திருக்கிறார் என்றால் அவரை பாராட்ட வேண்டிய கடமை உங்களுக்கு நிறைய இருக்கிறது.
நீங்கள் கட்சி ஆரம்பிங்க.. மக்களுக்கு நல்லது செய்யுங்க.. வேண்டாம் என்று சொல்லவில்லை.. ஆனால், அதற்கு முன்பாக உங்ககூட இருப்பவர்களுக்கு, உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு நல்லது பண்ணனும். அப்புறமா மத்தவங்களுக்கு நல்லது பண்ணலாம். உண்மையில் ரகுநாதனை நீங்கள் பாராட்டினால் தமிழ் சினிமாவே பாராட்டிய மாதிரி…” என தனது மனக்குமுறலை கொட்டினார்.
இயக்குநர் இமயம் பாரதிராஜா பேசும்போது, “இந்த விழாவில் பேசலாமா வேண்டாமா என ஒரு தயக்கத்தோடுதான் வந்தேன். ஆனால் சமூக நோக்குடன் இப்படி ஒரு அருமையான படத்தை எடுத்துள்ளார்கள் என்பது தெரிந்தும் நான் பேசாமல் போனால் அது கலைக்கு நான் செய்யும் துரோகம். பல ஆண்டுகளுக்குப் பின் மூத்த தயாரிப்பாளர்களை இந்த மேடையில் பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது.
கூரை வீட்டிலும் ஒரு சுகம் இருக்கிறது. ஆனால் அது இன்று காணாமல் போய்விட்டது. கொஞ்சநாள் கழித்து காட்டுக்கு சென்று அங்கேயே வாழ்ந்து செத்து விடலாமா என்கிற யோசனைகூட எனக்கு வருகிறது.
கஷ்டப்பட்டு படம் எடுப்பது வேறு, ஒரு படத்தை ரசித்து எடுப்பது என்பது வேறு.. இந்தப் படத்தின் இயக்குநர் மங்களேஸ்வரன் இயற்கையை ரசிப்பவர்.. இந்தப் படத்தை ரசித்து, ரசித்து எடுத்துள்ளார்.
இந்தப் படத்தின் நட்சத்திரங்களை படத்தில் பார்த்தபோது ஒரு விஷயம் தோன்றியது.
‘16 வயதினிலே’ படத்தை பிளாக் அன்ட் ஒயிட்டில் எடுக்கும் முடிவில் இருந்தபோது நாகேஷைத்தான் ‘சப்பாணி’யாக நடிக்க வைக்க முடிவு செய்திருந்தேன். ஆனால், படத்தை கலரில் எடுத்ததால்தான் கமல்ஹாசனை நடிக்க வைத்தேன். அப்படி சில விஷயங்களில் சமரசம் செய்து கொள்ளவே கூடாது.
கமல் அழகாக இருந்ததால்தான் நான் அவரை சப்பாணி கேரக்டருக்கு தேர்வு செய்தேன்.. அழகாக இருப்பதை சற்று அழுக்காக்கி காண்பிக்கும்போதுதான் மக்களுக்கு அது பிடிக்கிறது. அந்தக் கேரக்டரில் நாகேஷை போட்டிருந்தால் எழுந்து போயிருப்பார்கள்.
இத்திரைப்படத்திற்காக எங்கங்கே செல்வதற்கு கஷ்டமாக இருக்குமோ, அங்கேயெல்லாம் போய் இயற்கை அழகை தோண்டி எடுத்து வந்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் அற்புதமாக இசையமைத்துள்ளார். இந்த திரையுலகின் சாலையை செப்பனிட போகிறவர்கள் இவர்களை போன்ற இளைஞர்கள்தான்.
மூன்று நாட்கள் நம்மை வீட்டுக்குள் அடைத்து வைத்தாலே நம்மால் உட்கார முடியாது. கடந்த 27 வருடங்களாக சிறை என்னும் நான்கு சுவருக்குள் அடைபட்டுக் கிடக்கும் அந்த ஏழு பேரும் மீண்டும் சுதந்திர காற்றை சுவாசிக்கட்டும். அதற்கு தமிழக அரசு பரிந்துரைக்க முடிவெடுப்பதோடு நின்றுவிடாமல் அழுத்தம் கொடுக்க வேண்டும். அவர்கள் இனி உள்ள காலத்திலாவது நிம்மதியாக வாழட்டும்…” என்றார்.
விழாவின் முடிவில் ‘மரகதக் காடு இசைத் தகட்டை இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட படக் குழுவினர் அனைவரும் பெற்றுக் கொண்டார்கள்.
















