full screen background image

‘மனுசனா நீ’ படத்தின் திருட்டு விசிடி தயாரித்த  தியேட்டர் உரிமையாளர் கைது!

‘மனுசனா நீ’ படத்தின் திருட்டு விசிடி தயாரித்த  தியேட்டர் உரிமையாளர் கைது!

தயாரிப்பாளர் கஸாலியின் இயக்கத்தில் உருவான ‘மனுஷனா நீ’ திரைப்படம் கடந்த பிப்ரவரி 16-ம் தேதியன்று தமிழகமெங்கும் வெளியானது.

படம் வெளியான சில நாட்களிலேயே இந்தப் படம் திருட்டுத்தனமாக இணையத்தளங்களில் வெளியானது. இதைக் கண்டு அதிர்ச்சியான தயாரிப்பாளர் கஸாலி படத்தினை டிஜிட்டல் முறையில் திரையரங்குகளில் வெளியிட்ட கியூப் நிறுவனத்திடம், எந்தத் தியேட்டரில் இருந்து இத்திரைப்படம் காப்பி செய்யப்பட்டது என்பதைக் கண்டறிந்து தருமாறு கேட்டிருக்கிறார்.

கியூப் நிறுவனமும் இது பற்றி தீர விசாரித்து இந்த திருட்டுத்தனமான டிவிடி காப்பி, கிருஷ்ணகிரி முருகன் தியேட்டரில் படம் வெளியான பிப்ரவரி 16-ம் தேதியன்று மாலை 07.05.39 மணியிலிருந்து 08.57.01 மணிவரையிலும் படமாக்கப்பட்டிருக்கிறது என்கிற தகவலை சொல்லியிருக்கிறது.

இதனையடுத்து இந்த ஆதாரங்களை வைத்து காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார் கஸாலி. அறிவுசார் சொத்துரிமை பிரிவு போலீஸார் மின்னல் வேகத்தில் செயல்பட்டு திருட்டுத்தனமாக படத்தை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்ட கிருஷ்ணகிரி முருகன் தியேட்டர் உரிமையாளரையும், தியேட்டர் ஆபரேட்டரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது பற்றி தயாரிப்பாளர் கஸாலி பேசுகையில், “படத்தின் வெளிநாட்டு உரிமை கொடுத்தால் அது சுலபமாக இணையத்தில் வந்துவிடுகிறது என்பதால்தான் நான் எனது படத்தை எந்தவொரு வெளிநாட்டிலும் திரையிடவில்லை.

மேலும் தமிழ்நாடு தவிர வேறு எந்த மாநிலத்திலும் வெளியிடவில்லை. வேறு மொழியில் டப்பிங் செய்தும் வெளியிடவில்லை. ஆனாலும் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளிவந்துவிட்டது.

எனது பார்வைக்கு இந்தச் செய்தி வந்தவுடன், அந்த இணையத்திலிருந்து ஒரு பிரதி எடுத்து, தியேட்டருக்குப் படம் வெளியிடும் சேவை கம்பெனியான ‘கியூப் டிஜிட்டல் டெக்னாலஜி’க்குக் கொடுத்து FWM எனப்படும் ஃபாரன்சிக் வாட்டர்மார்க் முறையில் கண்டுபிடிக்கும் வசதியைப் பயன்படுத்தி எந்தத் திரையரங்கத்தில், எத்தனை மணிக்கு கேமரா வைத்து பிரதி எடுக்கப்பட்டது என்று வழங்கக் கேட்டிருந்தேன். அவர்கள் முறைப்படி ஆய்வு செய்து கிருஷ்ணகிரி முருகன் தியேட்டரில்தான் இந்தப் படம் காப்பி செய்யப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறிந்து தெரிவித்தார்கள்.

From Qube page 02 From Qube page 01

நான் கோடிக்கணக்கில் செலவு செய்து படத்தைத் தயாரித்து, மேலும் பல லட்சங்கள் செலவு செய்து சொந்தமாகப் படத்தை விளம்பரப்படுத்தி ரிலீஸ் செய்தேன். நல்லவிதமான எதிர்பார்ப்பு வந்து, படத்துக்குப் பல இடங்களிலிருந்தும் வியாபார வாய்ப்பு வந்த நேரத்தில் இவர்கள் செய்த செயலால் பெரிய அளவில் நஷ்டப்பட்டுவிட்டேன்.

கேபிள் மூலமும், வெளிநாடுகளுக்கு சப்டைட்டில் போட்டு பிரித்து விற்பதன் மூலமும், பல இந்திய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடவும் ஏற்பாடு செய்திருந்த நிலையில் எனது எல்லா முயற்சிகளும் வீணாகி, ஏறக்குறைய 5 கோடிவரை நஷ்டத்தைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன்.

அது மட்டுமல்லாமல், ஏறக்குறைய எல்லா தமிழ் படங்களையும் சில மூன்றாம் தர சமூக விரோதிகள் தொடர்ந்து திரையங்கங்களில் படமெடுத்து இணையத்தில் வெளியிடுவதால் வருடத்துக்கு தமிழ் சினிமா மட்டும் 500 – 600 கோடி ரூபாய் இழப்பைச் சந்திக்கிறது.

இது, தயாரிப்பாளர்களைத் தெருவில் நிறுத்துவது மட்டுமல்லாமல், புதிதாய் திரைப்படம் தயாரிக்க யாரும் முன் வராத நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.

எனது இந்த முயற்சி அனைத்து தவறான திரையரங்கங்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அருகிலிருக்கும் கேரளா, ஆந்திரா மாநிலங்களில் தியேட்டர் பைரஸி அறவே இல்லை. அந்த நிலையை நம் தமிழ் சினிமாவுக்கும் ஏற்படுத்த வேண்டும்..” என்றார் கொதிப்புடன்..!

Our Score