தமிழ் திரையுலகின் புகழ் பெற்ற இயக்குநரான இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ். இவர் குடும்பத்துடன் சென்னை சேத்துப்பட்டில் வசித்து வந்தார். சமீபத்தில் மனோஜுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
இந்த நிலையில் நேற்று இரவு மனோஜுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 48.
மனோஜ் மறைவு திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெற்றி பெற்ற சிவப்பு ரோஜாக்கள் படத்தை ரீமேக் செய்து இயக்க மனோஜ் திட்டமிட்டு இருந்தார். இந்த நிலையில் அவரது மரணம் திரையுலகில் பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மரணம் அடைந்த மனோஜ் உடல் நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய், சூர்யா, கார்த்தி, இயக்குநர்கள் கே.பாக்யராஜ், வெற்றிமாறன், ராம், மிஷ்கின் உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர் ஆகியோரும் மனோஜின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர்.
பின்னர் மாலை 4.30 மணியளவில் மனோஜின் உடல், பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
வீட்டில் மனோஜ் உடலுக்கு அவரது தந்தை பாரதிராஜா இறுதிச் சடங்குகள் செய்திருந்த நிலையில், மின் மயானத்தில் மனோஜின் இரு மகள்களும் தங்கள் தந்தைக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்தனர்.இதனைத் தொடர்ந்து அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
மகனின் பிரிவால் மனமுடைந்து வாடிய பாரதிராஜாவை அவரின் உறவினர்கள் கைத்தாங்கலாக அழைத்து வந்தனர்.
இந்த இறுதிச் சடங்கில் கே.பாக்யராஜ், வைரமுத்து, சீமான், இளவரசு, தயாரிப்பாளர் சிவா உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் பங்கேற்றனர்.









