full screen background image

மன்மத லீலை – சினிமா விமர்சனம்

மன்மத லீலை – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை ராக்போர்ட் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் டி.முருகானந்தம் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் அசோக் செல்வன் நாயகனாகவும், சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். மேலும் ஜெயப்பிரகாஷ், பிரேம்ஜி, கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை – பிரேம்ஜி, ஒளிப்பதிவு – தமிழ் ஏ.அழகன், கதை – மணிவண்ணன், திரைக்கதை, வசனம், இயக்கம் – வெங்கட் பிரபு.

ஒரு இளைஞனின் வாழ்க்கையில் வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் இரண்டு முக்கிய சம்பவங்களைப் பற்றிய கதை இது.

படத்தின் டிரெயிலரிலேயே “மாட்டிக் கொள்ளாதவரை எல்லா ஆண்களும் ராமர்களே!” – “இப்படிக்கு மாட்டிக் கொண்டவர்” என்று டைட்டில் கார்டு போட்டிருந்தபோதே இது ‘வேற மாதிரி’ படம் என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. கூடுதலாக இந்தப் படத்திற்கு சென்சாரில் ஏ’ சான்றிதழ் வேறு கிடைத்திருக்கிறது. இது போதாதா..?

படத்தின் நாயகனான அசோக் செல்வனின் வாழ்க்கையில் அவரது திருமணத்திற்கு முன்பு 2010-ம் வரும் நடந்த ஒரு சம்பவும், திருமணத்திற்குப் பின்பு 2020-ம் வருடம் நடக்கும் ஒரு சம்பவமும்தான் இந்த மன்மத லீலை’ படத்தின் திரைக்கதை.

இந்த இரு காலகட்டத்தில் நடக்கும் ஒரே மாதிரியான ‘அடல்ட்’ சம்பவங்களும், அதன் விளைவுகளால் ஏற்படும் ரகளைகளும்தான் இந்த ‘மன்மத லீலை’ படம்.

2010-ம் வருடம் இணையத்தில் சாட்டிங் செய்கையில் சிக்கும் சம்யுக்தாவுடன் உறவு வைத்துக் கொள்ள ஆசையாய் வலை வீசுகிறார் அசோக் செல்வன். சம்யுக்தாவும் ஒரு நல்ல முகூர்த்த நாளில் “தனது அப்பா ஊருக்குப் போகிறார்” என்று சொல்லி அசோக் செல்வனை வீட்டுக்கு அழைக்கிறார்.

இருவரும் இணைந்து மது அருந்துகிறார்கள். சண்டையிடுகிறார்கள். பின்பு சமாதானமாகிறார்கள். கடைசியில் படுக்கையில் இணைகிறார்கள். ஆனால் விடிந்த பொழுதில் சம்யுக்தா “அப்பா” என்று சொன்ன ஜெயப்பிரகாஷ் வீட்டுக்கு வந்துவிட அவரிடமிருந்து தப்பிக்க பெரும்பாடு படுகிறார்கள் சம்யுக்தாவும், அசோக் செல்வனும்.

இந்தத் தப்பித்தல் முடியாமல் போய், கடைசியில் வில்லங்கத்தில் முடிகிறது. இதன் பின் என்ன ஆகிறது என்பது சஸ்பென்ஸ்.

இன்னொரு பக்கம் 2020-ம் ஆண்டில் மனைவியும், மகளும் மாமனார் வீட்டுக்குப் போயிருக்கும் சூழலில் அசோக் செல்வனின் வீட்டு வாசலில் முகவரி மாறி ஒரு பெண் மழையில் நனைந்தபடி வந்து நிற்கிறார்.

அவளைப் பார்த்தவுடனேயே அசோக் செல்வனுக்கு இவளை அடைந்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் வர.. அவரை வீட்டுக்குள் அழைத்து அமர வைத்து கூல் செய்கிறார்.இந்த சிறிது நேர பழக்கமும் கடைசியில் கட்டிலில் போய் முடிகிறது.

மறுநாள் காலையில் அசோக் செல்வனின் மனைவி ஸ்முருதி வெங்கட் வீட்டுக்கு வந்து நிற்க.. பத்து வருஷத்துக்கு முன்பு சம்யுக்தா வீட்டில் நடந்த அதே களேபரம் இப்போது அசோக் செல்வனுக்கு மீண்டும் அவரது வீட்டிலேயே நடக்கிறது. இந்தக் களேபரமும் மீண்டும் ஒரு வில்லங்கத்தில் போய் முடிகிறது.

முதல் வில்லங்கத்திற்கும், இரண்டாவது வில்லங்கத்திற்கும் இடையில் ஒரு தொடர்பு இருப்பது கடைசியாகத்தான் தெரிய வருகிறது. அது என்ன.. கடைசியில் ஜொள்ளு மன்னன் அசோக் செல்வனின் கதி என்னவாகிறது என்பதுதான் இந்த மன்மத லீலை’ படத்தின் திரைக்கதை.

படம் முழுக்க அசோக் செல்வன் தன்னுடைய கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கேற்றவாறு நடித்திருக்கிறார். அந்த வயதில் அந்தக் கல்யாண குண’த்தில் இருப்பவர்கள் எப்படியெல்லாம் பேசுவார்களோ.. நடிப்பார்களோ.. அப்படியே நகல் எடுத்ததுபோல நடித்திருக்கிறார்.

சம்யுக்தா-ஜெயப்பிரகாஷின் உண்மையான உறவு முறையைத் தெரிந்து கொண்ட அசோக்செல்வன், “உனக்கு காதலனா இருக்கலாம்னு நினைச்சேன்… இப்படி கள்ளக் காதலன் ஆக்கிட்டீயேடி..?” என்று சொல்லும் காட்சியில் கொஞ்சம் சிரிப்பை வரவழைத்திருக்கிறார்.

ஜெயப்பிரகாஷிடம் சம்யுக்தாவைப் பற்றி அசோக் சொல்லும்போது, “இவளை உஷார் பண்ணலாம்னு நினைச்சா.. கடைசீல இவதான் என்னை உஷார் பண்ணிட்டா” என்று சொல்லும்போதும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

’உன்னைப் பார்க்கும்போது என் ஃபியூச்சர் ஞாபகம் வருது..” என்ற சம்யுக்தாவிடம், “இன்னும் ரெண்டு பெக் போட்டா செத்துப் போன உன் ஆயா எல்லாம் ஞாபகம் வருவாங்க…” என்று ரொமாண்டிக் ப்ளஸ் காமெடியில் கலகலப்பூட்டியிருக்கிறார் அசோக் செல்வன்.

நடிகைகளில் ஸ்மிரதி வெங்கட் அடக்கமான, ஆனால் அழகான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். வெறுத்துப் போன கணவன் கேரக்டரில் ஜெயப்பிரகாஷின் நடிப்பைப் பார்த்தால் பாவமாகத், தோன்றியது.

சம்யுக்தா ஹெக்டேவும், ரியா சுமனும் தங்களது உடல் அழகை அவ்வப்போது காட்டியபடியே நடித்திருக்கிறார்கள். இதில் சம்யுக்தா அப்பாவி என்றால் ரியா சுமன் வில்லியாகியிருக்கிறார். ஆனால், சம்யுக்தாவை குளோஸப் காட்சிகளில்தான் பார்க்க முடியவில்லை. எப்படி இவரை இந்தக் கதாபாத்திரத்திற்குத் தேர்வு செய்தார்கள் என்று தெரியவில்லை.

ஆனால் ரியா சுமன் கச்சிதமான தேர்வு. கட்டிலுக்கு அடியில் படுத்தபடியே டென்ஷனில் இருக்கும் அசோக் செல்வனின் கால்களை வருடி டென்ஷனை ஏற்றும் அந்தக் குறும்புக்கு ஒரு மார்க் போடலாம்.

அடல்ட் ஒன்லி படம் என்பதால் எக்கச்சக்கமாக சீன்ஸ்கள் இருக்கும் என்றெண்ணி தியேட்டருக்கு வரும் விடலைப் பசங்களை ரொம்பவே ஏமாற்றியிருக்கிறார் இயக்குநர்.

சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் இருவருக்கும் அசோக் செல்வன் கொடுக்கும் இரண்டு ‘அழுத்தமான’ ப்ரெஞ்ச் கிஸ்கள்தான் படத்தில் இருக்கும் இரண்டு அடல்ட் டைப் சீன்கள்.. மற்றபடி வேறெதுவுமில்லை.

படத்தின் முதல் பாதியில் அசோக் செல்வன் சம்யுக்தாவையும் ரியா சுமனையும் ‘மேற்படி’ சமாச்சாரத்தில் மடக்குவதற்காக பேசும் பேச்சுக்கள் அனைத்தும் அடல்ட் கேட்டகிரியில் அடங்கியிருக்கிறது.

உண்மையில் இடைவேளைக்குப் பிறகுதான் ரகளையே ஆரம்பமாகிறது. இரண்டு சம்பவங்களிலும் கூடல்’ முடிந்த காலையில் நடக்கும் சம்பவங்கள்தான் பரபரவென்று இருக்கிறது. இதில் அதிகமான நடிப்பைக் காட்டி டென்ஷனைக் கூட்டியிருக்கிறார் சம்யுக்தா.

சம்யுக்தா – அசோக் செல்வன், ரியா சுமன் – அசோக் செல்வன் என்று இந்த இரண்டு ஜோடிகளின் கள்ளக் காதல் விஷயத்தை அடுத்தடுத்து ஒரு சீக்வல் ஆர்டரில் குழப்பமில்லாமல் காட்டியிருக்கிறார்கள். இதற்காக படத் தொகுப்பாளர் வெங்கட் ராஜனுக்கு நமது பாராட்டுக்கள்..!

ஆனால், இடைவேளைக்கு பின்புகூட ஒரே மாதிரியான சம்பவங்கள் இரண்டு முறை நடப்பதாகக் காட்டுவதால் கொஞ்ச நேரத்தில் சலிப்புத் தட்டுகிறது.

ஒளிப்பதிவாளர் தமிழ் அழகனின் ஒளிப்பதிவில் சம்யுக்தா, ரியா சுமன் இருவரின் உடல்களையும் எக்ஸ்ரே எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது. பிரேம்ஜியின் பின்னணி இசையும் இந்தக் காமக் கலைக்கும், காமக் கதைக்கும் பெரிதாகக் கை கொடுத்திருக்கிறது.

ஆனால் முடிவுதான் முற்றுப் பெறாத வகையில் முடிக்கப்பட்டிருக்கிறது. “கெட்டவன் வாழ்வான்…” என்று காட்டியிருப்பது இயக்குநரின் தேர்வாக இருக்கலாம். ஆனால் இந்தக் கதைக்கு இது தவறானது.

ஏற்கெனவே நாளுக்கு நாள் போக்சோ சட்டத்தின் கீழ் கைதாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெண்களுக்கெதிரான வன்முறைகளும், அடக்குமுறைகளும் அதிகரித்தே வருகின்றன.

இந்த நேரத்தில் இது போன்ற கள்ளத் தொடர்பு கதைகளை நியாயப்படுத்துவதுபோலவும், அவைகளை செய்பவர்கள் அதிலிருந்து தப்பித்து ஹீரோ போல இருப்பதாகக் காட்டுவதும் அயோக்கியத்தனம்.

அதோடு பெண்களும் விரும்பி மது அருந்துவது போல காட்சிகளை வைத்திருப்பது பச்சை முட்டாள்தனம். இயக்குநர் வெங்கட் பிரபு திரைப்படத்தில் என்ன சொல்கிறோம் என்பதைத் தெரிந்து செய்திருக்க வேண்டும். நாட்டுக்கு நல்லது செய்யலைன்னாலும் பரவாயில்லை.. கெடுதல் செய்யாதீங்க இயக்குநர்களே..!!!

இப்போதுதான் மாநாடு’ படத்தில் ஒரு சிறந்த புதுமையான கதை, திரைக்கதையில் வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குநர் வெங்கட் பிரபு இப்படியொரு கேவலமான படத்தைக் கொடுத்திருக்க தேவையில்லை. முதலில் இப்படியொரு படமே எடுத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் உருவாக்கிய மன்மத லீலை’ திரைப்படம் உளவியல் ரீதியாக அந்த மனிதனுக்குள் ஏற்படும் காம எண்ணங்களை அனைவரும் புரிந்து கொள்வதுபோல காட்சிப்படுத்தியிருப்பார். அதனால்தான் அந்தப் படம் இப்போதும் பேசப்படுகிறது.

அதே தலைப்பை சட்டத்தின் துணையோடு வைத்துக் கொண்டு, இப்படியொரு கேவலமான கதையில் இதை உருவாக்கியிருக்க வேண்டாம்.

வெங்கட் பிரபுவுக்கு நிறைய இயக்கத் திறமைகள் உண்டு. இனி வரும் காலங்களில் அந்தத் திறமையை நல்ல வழியில் காட்டினால் திரையுலகத்துக்கும் நல்லது. அவருக்கும் நல்லது..!

Our Score