பிரிக்ஸ் பெஸ்டிவலுக்கு ‘மஞ்சப்பை’ திரைப்படம் தேர்வு..!

பிரிக்ஸ் பெஸ்டிவலுக்கு ‘மஞ்சப்பை’ திரைப்படம் தேர்வு..!

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சைனா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் மட்டுமே அடங்கிய ஒரு புதிய அமைப்பின் பெயர்தான் பிரிக்ஸ்..! கடந்த வாரம்தான் இந்த அமைப்பின் முதல் கூட்டம் பிரேசில் நாட்டில் நடைபெற்றது.. இந்த ஐந்து நாடுகளும் கூட்டணி சேர்ந்து ஒரு லட்சம் கோடி முதலீட்டில் ஒரு வங்கியை உருவாக்கி அதன் மூலம் தங்களுக்குள் நிதியுதவியை செய்து கொள்ளலாம் என்று இப்போதுதான் பேசி முடிவெடுத்தார்கள்.

அதற்குள்ளாக சினிமாவில் அதே அமைப்பை ஏற்படுத்திவிட்டார்கள்.. உலக சினிமாவை சென்னைவாழ் ரசிகர்களுக்குக் காட்டுவதற்கென்றே இருக்கும் ஒரு தனியார் அமைப்பான ‘இந்தோ சினி அப்ரியேஷன்ஸ் போரம்’ என்ற அமைப்பு காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என்பதை கச்சிதமாக செய்யும். அதனால்தான் வருடந்தோறும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவையும் நல்லபடியாக நடத்தி வருகிறது.

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு நேற்றுதான் மோடி இந்தியா திரும்பினார் அதற்குள்ளாக சென்னையில் பிரிக்ஸ் சினிமா பெஸ்டிவல்.. ரஷ்யன் கல்ச்சுலர் சென்டரில் வரும் 21-ம் தேதி முதல் நடைபெறவிருக்கிறதாம்..

இந்த பெஸ்டிவலில் திரையிட தமிழில் இருந்து விமல், ராஜ்கிரணம், லட்சுமிமேனன் நடிப்பில் சற்குணம் இயக்கிய ‘மஞ்சப்பை’ என்ற ஒரேயொரு திரைப்படத்தை மட்டும் தேர்வு செய்திருக்கிறார்களாம்.. உலக சினிமா ரசிகர்கள் இதை எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறார்கள் என்று தெரியவில்லை..

நவீன பாசமலர் என்றழைக்கப்படும் அளவுக்கு சென்டிமெண்ட்டை அள்ளி வீசி வசூலிலும் சக்கை போடுபோட்ட இந்த ‘மஞ்சப்பை’ உலக சினிமாவில் இடம் பெற தகுதியானதா என்பதை இனிமேல் உலக சினிமா ரசிகர்கள் கொதித்தெழுந்து தங்களது கருத்துக்களை பகிர்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்..!

Our Score