மணிரத்னம் படத்தில் நடிக்கக் கிடைக்கும் வாய்ப்பு எப்படிப்பட்டது என்பதை இந்தியத் திரை நட்சத்திரங்கள் அறிவார்கள்..!
ஆனாலும் சில தோல்விகளை தொடர்ந்து கொடுத்துவிட்டதாலும், புதிய தலைமுறை நடிகர்ககளுக்கு அவரைப் பற்றி அதிகம் தெரியாததாலும், இப்போது தனது புதிய படத்திற்கு நடிகர்களை ஒப்பந்தம் செய்யவே கஷ்டப்படுகிறாராம் மணிரத்னம்..
சமீபத்தில் தெலுங்கு நடிகர் ராணாவும், சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜாவும் மணிரத்னம் படத்தின் வாய்ப்பை நிராகரித்துவிட்டார்களாம்.. “அது நல்ல கேரக்டர்தான்.. ஆனால் அதுக்காக ரொம்ப நாள் நான் நடிச்சுக்கிட்டேயிருக்க முடியாது..” என்கிறார் நடிகர் ராணா.. “அது எனக்கு ஷூட்டாகாது. அதனால் வேண்டாம்னு சொல்லிட்டேன்..” என்கிறார் ராம்சரண் தேஜா.
இவர்களது வரிசையில் புத்தம் புது மலையாள நடிகையான அனாகாவும் சேர்ந்திருக்கிறார். மலையாள குணச்சித்திர நடிகரான கிருஷ்ணகுமாரின் மகளான இந்த அனாகா நடித்து இதுவரையில் ஒரு படம்தான் வெளிவந்திருக்கிறது.
பாசிலின் இரண்டாவது மகனான பர்கான் பாசில் ஹீரோவாக நடித்த ‘Njan Steve Lopez’ என்ற மலையாளப் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் அனாகா.
சமீபத்தில் மணிரத்னம் தனது புதிய படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க இவரை அழைத்திருக்கிறார். முதலில் ஆர்வத்துடன் வந்தவர், செகண்ட் ஹீரோயின் என்றவுடன் பெவிலியனுக்கு ரிட்டர்னாகிவிட்டாராம்.. “செகண்ட் ஹீரோயின் வேஷம் பண்ண மாட்டேன்.. இப்பத்தான் மொதல் படமே பண்ணியிருக்கேன்.. அதுக்குள்ள செகண்ட் ஹீரோயின்னு போயிட்டா அப்புறம் எனக்கு ஹீரோயின் சான்ஸ் கிடைக்காது..” என்று சொல்கிறாராம்..!
மணிரத்னத்தின் அடுத்த படத்தில் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மானும், நித்யா மேனனும் ஹீரோ ஹீரோயினாக நடிக்கிறார்கள் என்பது இந்த நிமிடம்வரையிலான செய்தி..
நாளை எப்படியோ..?









