மலையாள நடிகரான டொவினோ தாமஸ் இன்று கேரளாவில் நடந்த ஒரு படப்பிடிப்பின்போது பலத்த காயத்திற்குள்ளாகி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
மலையாளத் திரையுலகத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் டொவினோ தாமஸ். இவர் தற்போது களா என்னும் மலையாளப் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இவருடன் இந்தப் படத்தில் நடிகர் லால் மற்றும் நடிகை திவ்யா பிள்ளை ஆகியோரும் நடிக்கின்றனர். இயக்குநர் ரோஹித் இயக்கி வருகிறார்.
கொரோனா வைரஸினால் ஏற்பட்ட ஊரடங்குச் சட்டம் காரணமாக பல மாதங்களாக திரைப்படப் படப்பிடிப்புகள் எதுவும் நடத்தப்படவில்லை. கடந்த மாதம்தான் திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு மத்திய அரசும், மாநில அரசும் அனுமதியளித்தன.
இதனால் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி முதல் இந்தக் ‘களா’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப் படத்திற்காக இன்றைக்கு ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்சி படமாக்கம் செய்யப்பட்டபோது திடீரென்று நாயகன் டொவினோவுக்கு அடிவயிற்றில் காயம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட டொவினோ, அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை நடைபெற்று வருகிறது. அவரது உடலின் உள் பாகங்களில் அடிபட்டிருக்கிறதா என மருத்துவர்கள் பரிசோதித்து வருவதாக மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
மூன்று நாட்களுக்கு முன்தான் எர்ணாகுளம் மாவட்டத்தில் நடந்த இதே படத்தின் படப்பிடிப்பில் டொவினோவுக்குக் காயம் ஏற்பட்டது. மேலும் கடந்த ஆண்டு, ‘எடக்காட் பெட்டாலியன் 06’ என்கிற திரைப்படத்தின் படப்பிடிப்பிலும் டொவினோ தீக்காயங்களுக்கு ஆளானார்.