full screen background image

காதலித்து ஏமாற்றிய நடிகர் கார்த்திக்கை அடித்துத் துவைத்த நடிகை ஸ்ரீப்ரியா..!

காதலித்து ஏமாற்றிய நடிகர் கார்த்திக்கை அடித்துத் துவைத்த நடிகை ஸ்ரீப்ரியா..!

1980-களில் இளைஞராக இருந்தவர்களில் பெரும்பாலோரால் இன்னமும் மறக்க முடியாத ஒரு சம்பவம் நடிகை ஸ்ரீப்ரியாவின் தற்கொலை முயற்சி.

மிகவும் தைரியமாகவும், தன்னம்பிக்கை உள்ளவராகவும், யாரிடமும் எது பற்றியும் முகத்துக்கு நேராகச் சொல்லும் தைரியமும் மிக்கவராக தமிழ்ச் சினிமாவுலகத்தில் அறியப்பட்ட நடிகை ஸ்ரீப்ரியா ‘தற்கொலைக்கு முயற்சி செய்தார்’ என்ற செய்தியைக் கேள்விப்பட்டவுடன் திரையுலகம் மட்டுமில்லை.. ஒட்டு மொத்தத் தமிழகமும் அன்றைய சூழலில் அதிர்ச்சியாகத்தான் பார்த்தது.

காரணம் காதல். ஆனால், அந்தக் காதல் ‘அலைகள் ஓய்வதில்லை’ கார்த்திக்குடனா என்ற ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியையும் மேலும் கூட்டியது. ஏனெனில் ஸ்ரீப்ரியா ஏற்கெனவே எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், சிவக்குமார், விஜயகுமார் என்று மூத்த நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர். அவர் போய் நடிகர் கார்த்திக்கை காதலித்திருக்கிறாரா என்று எதிர்பார்க்காத அதிர்ச்சியில் திகைத்துப் போய்விட்டது தமிழுலகம்.

ஏனெனில், கார்த்திக்கைவிட ஸ்ரீப்ரியா 4 வயது மூத்தவர். இதில் சுவாரஸ்யமான இன்னொரு செய்தி என்னவெனில், ஒரு திரைப்படத்தில் கார்த்திக்கின் அப்பா முத்துராமனுக்கு ஜோடியாகவே ஸ்ரீப்ரியா நடித்திருந்ததுதான்..!

இத்தனைக்கும் கார்த்திக்கும், ஸ்ரீப்ரியாவும் ‘நினைவுகள்(1984)’, ‘நட்பு(1986)’, ‘காளிச்சரண்(1988)’ ஆகிய மூன்று படங்களில் மட்டுமே இணைந்து நடித்திருக்கிறார்கள். இதில் ‘நட்பு’ படத்தில்கூட ஸ்ரீப்ரியாவுக்கு ஜோடியாக ராதாரவி நடித்திருந்தார்.

சரி.. காதல்தான் தோல்வியாகிவிட்டதே..?! போயிட்டு போகுது.. இதற்கெல்லாம் போயி தற்கொலையா..? என்று திரையுலகம் அதிர்ச்சியையும், கோபத்தையும் கொட்டித் தீர்த்தது.

ஸ்ரீப்ரியாவின் அந்தத் தற்கொலை முடிவெடுக்கும் அந்தத் தருணத்தில் அப்போது உடனிருந்த ‘சோலைக்குயில்’ படத்தின் தயாரிப்பாளரான அழகன் தமிழ்மணி, அந்தச் சம்பவங்களை இப்போது நினைவு கூர்ந்துள்ளார்.

பிரபல தயாரிப்பாளர், இயக்குநர், நடிகரான சித்ரா லட்சுமணனின் ‘டூரிங் டாக்கீஸ்’ என்னும் யுடியூப் சேனலுக்கு அழகன் தமிழ்மணி அளித்துள்ள பேட்டியில் இது குறித்து விலாவாரியாக தெரிவித்துள்ளார்.

அது இங்கே :

“சோலைக்குயில்’ படத்தின் படப்பிடிப்பின்போதே நடிகர் கார்த்திக்கும், ராகினியும் திருமணம் செய்து கொண்டார்கள். சென்னையில் 5 நாட்கள் மட்டுமே ஒரு பாடல் காட்சி படமாக்க வேண்டியிருந்ததால் அதற்காக ராகினி சென்னைக்கு வந்து என்னுடைய வீட்டில் தங்கியிருந்தார். கார்த்திக் அவனுடைய வீட்டில் இருந்தான்.

ஒரு நாள் கற்பகம் ஸ்டூடியோவில் பாடல் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தோம். பகல் இடைவேளையில் உணவு சாப்பிடுவதற்காக பிரேக் விட்டிருந்தோம். ராகினி மேக்கப் ரூமில் இருந்தார். கூடவே கார்த்திக்கும் இருந்தான்.

அப்போது திடீரென்று என் தங்கை ஸ்ரீப்ரியா காரில் வந்து இறங்கினார். வேகமாக மேக்கப் அறையை நோக்கி போனார். அவர் போகின்ற வேகத்தைப் பார்த்து ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்று நினைத்து நானும் அப்போது என்னுடன் இருந்த துளசிராமன் என்ற இயக்குநரும், கலைவாணன் கண்ணதாசனும் மாடிக்கு ஓடினோம்.

மேக்கப் அறைக்குள் நுழைந்த ப்ரியா அங்கேயிருந்த கார்த்திக்கையும், ராகினியையும் சராமரியாகத் தாக்கினார். அதைத் தடு்க்கப் போன இயக்குநர் துளசிராமனை எட்டி உதைத்துத் தள்ளினார். இயக்குநர் கலைவாணன் கண்ணதாசனை கன்னத்தில் அறைந்தார். அவரை யாராலும் கன்ட்ரோல் செய்ய முடியவில்லை.

கார்த்திக்கும் பலவிதங்களில் சமாதானம் சொன்னார். ஆனால் ஸ்ரீப்ரியா கேட்கவில்லை. நான் இடையில் நுழைந்து தடுத்தபோது, ‘ஏண்ணா… நீங்கதான் ஏற்பாடு பண்றீங்களா..?’ என்றார் கோபத்தோடு. நானும் அப்போது ‘இல்லம்மா.. இது அவனா எடுத்த முடிவு.. எனக்கு உங்க காதல் பற்றி தெரியாது’ என்று சொல்லி சமாதானம் சொல்லிப் பார்த்தேன்.  ஆனால் ஸ்ரீப்ரியா கேட்கவில்லை.

இருவரையும் அடித்து ஓய்ந்த ஸ்ரீப்ரியா சட்டென்று பாத்ரூமுக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டார். 5 நிமிஷமாச்சு.. 10 நிமிஷமாச்சு.. வெளில வரலை.. உடனே கார்த்திக் என்னிடம் ‘என்னண்ணு பாருங்கப்பா’ என்று பதறினான். பின்பு எல்லாருமாக சேர்ந்து கதவைத் தட்டியும் திறக்காததால் கதவை உடைத்தோம். உள்ளே ஸ்ரீப்ரியா கையில் விஷ பாட்டிலோடு விழுந்து கிடந்தார். கையோடு கொண்டு வந்திருந்த விஷத்தையும் குடித்துவிட்டார்.

உடனேயே நான் என்னிடம் இருந்த மை ஊற்றிய பேனாவைத் திறந்து அந்த மையை ஸ்ரீப்ரியாவின் வாயில் ஊற்றினேன். பின்பு மூன்று பேர் அவரைத் தூக்கிக் கொண்டு வெளியில் ஓடினோம். ஆட்டோவே கிடைக்கவில்லை. ‘சூஸைட் அட்டெம்ட்’ என்றவுடன் ஓடிவிட்டார்கள்.

பின்பு அரும்பாடுபட்டு விஜயா மருத்துவமனைக்குக் கொண்டு வந்து அட்மிட் செய்தோம். அங்கே மோகன்தாஸ் என்ற தலைமை மருத்துவர் இருந்தார். அவரும் ஸ்ரீப்ரியாவை பார்த்துவிட்டு ‘இது சூஸைட் கேஸ்.. ஜி.ஹெச்.சுக்கு கொண்டு போங்க’ என்றார்.

நான் அவர் காலில் விழாத குறையாகக் கெஞ்சிக் கூத்தாடி சிகிச்சைக்கு சம்மதிக்க வைத்தேன். அதற்கும் அவர் என்னிடம் எழுதி வாங்கிக் கொண்டார். விஷயம் கேள்விப்பட்டு பல சினிமா பிரபலங்களும் மருத்துவமனைக்கு ஓடோடி வந்தார்கள்.

ஸ்ரீப்ரியா மருத்துவமனையில் இருந்த 7 நாட்களும் நானும், என் மனைவியும் எங்களது கைக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு மருத்துமனையிலேயே காவல் காத்தோம். எங்களுடன் நடிகர் சிவாஜி மனோவும் இருந்தான்.

7 நாட்கள் கழித்து ஸ்ரீப்ரியா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். அதன் பிறகு கார்த்திக்கின் குடும்பத்தினரிடம் இது பற்றிச் சொல்லி சமாதானம் செய்து வைத்தேன். அப்போதிருந்த விஜயா சேஷ மஹாலில் கார்த்திக்கும், ராகினிக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியையும் நான்தான் ஏற்பாடு செய்து நடத்திக் கொடுத்தேன்.

இவர்களின் கல்யாணமும், தங்கை ஸ்ரீப்ரியாவின் தற்கொலை முயற்சியும் ஒரு பக்கம் நடந்து முடிந்திருந்தாலும் இதன் பின்பு எனக்கும், கார்த்திக்கின் குடும்பத்தாருக்கும் இடையே மிகப் பெரிய பிளவு ஏற்பட்டுவிட்டது. ஏதோ என்னால்தான் இந்தக் கல்யாணமே நடந்திருப்பதாக கார்த்திக்கின் குடும்பத்தார் நினைத்துவிட்டார்கள்.

அதோடு கார்த்திக்கும் என்னிடமிருந்து தொலைதூரத்திற்குச் சென்றுவிட்டான். எங்கேயாவது பார்த்தால்கூட என்னைத் தவிர்க்கத் தொடங்கினான். அதனால் நானும் அப்படியே இருந்துவிட்டேன்…” என்று மிகப் பெரிய வருத்தத்துடன் இந்தச் சோகக் கதையைச் சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி.

Our Score