பி சினி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் புதிய படம் ‘மலரும் கனவுகள்’.
இதில் பாலன், சுஷ்மா, ஜெயஸ்ரீ, ப்ரியதர்ஷன், ஸ்ரீமதி, தேவி, ஷண்முகம், புனிதா, ஷபீனா, சுரேஷ்குமார் ஆகிய புதுமுகங்களே நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகர் குள்ளமணியும் நடித்துள்ளார். குள்ளமணி நடித்த கடைசி திரைப்படம் இதுவேயாகும்.
ஒளிப்பதிவு ஜி.மாதவன், இசை – சங்கர் கணேஷ், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், படத்தொகுப்பு, தயாரிப்பு, இயக்கம் – பாலன்.
முக்கோணத்தின் மூன்று புள்ளிகள் சேர்வதுபோல் இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. நாயகன் நவீனும், நாயகி நிஷாவும் ஒரே வீட்டில் இருந்தாலும் வெவ்வேறு அறைகளில் வசித்து வருகிறார்கள். நட்பாகப் பழகி நாளடைவில் காதலர்களாகவும் இணைகின்றனர். இடைப்பட்ட சம்பவங்களாக நாயகனின் சின்னச் சின்ன தவறுகளை பக்குவமாக எடுத்துச் சொல்வதால், அந்த அக்கறையே நாயகி மேல் காதலாக உருவெடுக்கிறது.
இதில் நாட்குறிப்பு எழுதும் சம்பவங்களில் நாயகியின் கடந்த கால மற்றும் நிகழ்காலக் குறிப்புகளை படிப்பதால் ஏற்படும் விளைவுகள் கதையின் திருப்பு முனையாக அமைக்கப்பட்டுள்ளது. கடந்த காலக் குறிப்புகளால் நாயகன் வேறு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கிறாரா என்று நாயகியின் மனதில் குழப்பமாக வந்தாலும், அதை நாயகனே தெளிவுபடுத்தி விளக்குகிறார்.
ஆனால் ரஞ்சன் என்கிற கதாபாத்திரம் நவீன், நிஷாவை பிரிக்க லட்சுமி என்ற வேலைக்காரியோடு திட்டமிடுகின்றனர். நாயகியும் தனது கேரக்டர்களில் நிஜம் மற்றும் கனவு என இரு கதாபாத்திரங்களில் வருகிறார்.
இப்படிப்பட்ட சிக்கலாக முடிச்சுக்கள் தீர்ந்து இதுவரையிலும் நடந்ததெல்லாம் கனவுதான். இனி நடக்கப் போவதுதான் நிஜம் என்கிற சகஜமான சூழ்நிலையில் ஒரு புதுப்பெண்ணின் வரவால் திரும்பவும் சிக்கல் ஏற்பட அதை வென்று இந்த ஜோடி ஒன்று சேர்ந்ததா.. இல்லையா என்பதே இந்தப் படத்தின் திருப்பமான கிளைமாக்ஸ்..!
கடும் போராட்டத்திற்குப் பிறகு சென்சார் சர்டிபிகேட் பெற்றிருக்கும் இந்தப் படம் வரும் தீபாவளி தினத்தன்று ‘வேதாளம்’, ‘தூங்காவனம்’ படங்களுடன் போட்டியிட திரைக்கு வருகிறதாம்..!