Lemon Leaf Creation P LTD நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் R.கணேஷ் மூர்த்தி, சௌந்தர்யா இருவரும் இணைந்து தயாரிக்கும் தமிழ்ப் படம் ‘மலை’.
இந்தப் படத்தில் லட்சுமி மேனன் மற்றும் யோகி பாபு இருவரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். காளி வெங்கட், சிங்கம் புலி, ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடிக்கின்றனர்.
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். D.இமான் இசையமைக்கிறார். யுகபாரதி பாடல் எழுதுகிறார். S.ஜெயச்சந்திரன் கலை இயக்கத்தை கவனிக்க, ராஜசேகர் ஒலிப்பதிவு செய்கிறார். காசி விஸ்வநாதன் படத் தொகுப்பு செய்கிறார். வசனத்தை பாஸ்கர் சக்தி எழுதியுள்ளார்.
இயக்குநர் சீனு ராமசாமி மற்றும் இயக்குநர் சுசீந்திரனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட I.P.முருகேஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். இது இவரது முதல் படமாகும்.
இந்த ‘மலை’ படம் பற்றி இயக்குநர் I.P.முருகேஷ் பேசும்போது, “இந்தப் படம் மலைப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை மையமாக கொண்டு உருவாகவுள்ளது. படத்தில் காட்டப்படும் ‘மலையே’ படத்தில் ஒரு கதாப்பாத்திரமாகவே இருக்கும்.
இந்தப் படத்தில் லட்சுமி மேனனும், யோகிபாபுவும் ஜோடியாக நடிக்கவில்லை. லட்சுமி மேனன் நகரத்தில் இருந்து கிராமத்துக்கு வரும் ஒரு மருத்துவராக நடிக்கிறார். அந்தக் கிராமத்தில் அவருக்கு நடக்கும் நிகழ்வுகள் அவரது வாழ்க்கையை மாற்றி விடுகிறது.
யோகி பாபு இந்தப் படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். லட்சுமி மேனன், யோகி பாபு இருவருக்கும் இடையில் நடக்கும் சம்பவங்கள் இப்படத்தில் மிகப் பெரிய பங்கு வகிக்கின்றது. மேலும், காளி வெங்கட்டின் கதாப்பாத்திரமும் அனைவராலும் பெரிதும் பேசப்படும்..” என்றார்.