full screen background image

“சினிமா கலை அல்ல; அதுவொரு வியாபாரம்…” – இயக்குநர் எஸ்.பி.எஸ்.குகனின் ஆவேசப் பேச்சு..!

“சினிமா கலை அல்ல; அதுவொரு வியாபாரம்…” – இயக்குநர் எஸ்.பி.எஸ்.குகனின் ஆவேசப் பேச்சு..!

சில ஆண்டுகளுக்கு முன்பாக வெளியான ‘மதுரை டூ தேனி – வழி ஆண்டிப்பட்டி’ படம் டிஜிட்டலில் எடுக்கப்பட்டு பெரிய வெற்றியை பெற்ற படமாகும். தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபோதும் பொதுமக்களிடம் பெரிதும் பேசப்பட்டது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘மதுரை டூ தேனி – 2’ என்கிற பெயரில் இப்போது உருவாகி இருக்கிறது.  போட்டோ அண்ட் வீடியோகிராபர்ஸ் இணைந்து வழங்க எஸ்.பி.எஸ்.மீடியா ஒர்க்ஸ் சார்பில் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

madurai to theni-2 movie stills

இந்த இரண்டாம் பாகத்தில் விஷ்வக், சிவகாசி பாலா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்க, நாயகிகளாக செளமியா, தேஜஸ்வி நடிக்கிறார்கள். இவர்களுடன் முதல் பாகத்தில் காமெடியில் கலக்கிய நெல்லை சிவா, முத்துக்காளை, போண்டா மணி, சந்தானபாரதி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

‘மதுரை டூ தேனி – 2’ படத்தை ஒளிப்பதிவு செய்து கதை, திரைக்கதை, வசனம், எழுதி எஸ்.பி.எஸ்.குகன் இயக்குகிறார். பாடல்களை செல்வராஜா எழுத, சரவண கணேஷ் இசையமைக்கிறார். நடனத்தை தீனா – இருசன் மேற்கொள்ள,  படத் தொகுப்பை ஆர்.ஜி. ஆனந்த் செய்கிறார். டெரிக் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பை கவனிக்கிறார். பாலு – ஜெய்கணேஷ் நிர்வாகத் தயாரிப்பை கவனிக்கின்றனர். 

போட்டோ அண்ட் வீடியோகிராபர்ஸ் இணைந்து வழங்க எஸ்.பி.எஸ்.மீடியா ஒர்க்ஸ் சார்பில் எஸ். ஜானகி சோணைமுத்து தயாரிக்கிறார். இணை தயாரிப்பு ஏ.வெங்கடேஷ்வரி, ஜி. ஜானகி, சத்யவாணி அனந்தகிருஷ்ணன். 

நெக்ஸ்ட் லெவல் சினிமாஸ் நிறுவனம் இந்தப் படத்தை உலகமெங்கும் வெளியிடுகிறது.

விஷூவல் கம்யூனிகேஷன் படித்த இரண்டு இளைஞர்களும், ஒரு பெண்ணும் இணைந்து ஒரு திரைப்படத்தை இயக்குவதற்காக முயற்சிக்கிறார்கள். அவர்களின் படம் இயக்கும் கனவு நிறைவேறியதா? இல்லையா? என்பதையே  கதை. இதை காமெடி, காதல், ஃபேமிலி செண்டிமெண்ட் கலந்து தேனியிலிருந்து மதுரை வருகிற பேருந்து பயணத்தின் சுவாரஸ்யங்களோடு சொல்கிறது இந்தப் படம்.

இப்படத்தின் ஊடக சந்திப்பு  நேற்று காலை வடபழனி ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நடைபெற்றது. 

img_8053

விழாவில் படத்தின் இயக்குநரும், ஒளிப்பதிவு செய்து தயாரித்துள்ளவருமான எஸ்.பி.எஸ். குகன்  பேசும்போது “இன்று ஏராளமான சிறு முதலீட்டுப் படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆனால் அவைகளை வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் என்ன பயன்..? எடுத்து வெளியிட முடியாமல் இருப்பதில் என்ன பெருமை..?

சிறு படங்கள் எடுத்தால் வெளியிட திரையரங்குகள் கிடைப்பது இல்லை. போட்ட முதல் திரும்ப கிடைக்கவும் எந்த உத்திரவாதமும் இல்லை. திரையரங்கு உரிமையாளர்களிடத்தில் கேட்டால், சின்ன பட்ஜெட் படங்களுக்கு கூட்டம் வருவதில்லை என்கிறார்கள். பெரிய படத்துக்கு  மட்டுமே  கூட்டம்  வருகிறது என்கிறார்கள். அதனால்தான் பெரிய படங்கள் மட்டுமே வெளியிடுகிறோம் என்கிறார்கள். அவர்கள் தரப்பில் தவறில்லை.

சினிமா என்பது கலைக்காக அல்ல. கலைக்காகப் படமெடுக்கிறேன் என்பதெல்லாம் பொய். கலைக்காக இலவசமாகப் படம்  இயக்குவார்களா..? இலவசமாக  நடிப்பார்களா..? படம் தயாரிப்பார்களா..? கலைக்காகப் படமெடுக்கிறேன் என்று  பேச்சுக்காக வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் சினிமா முழுக்க முழுக்க வியாபாரம்தான்.

ஒரு உதாரணம் சொல்கிறேன். நீங்கள் 20 லட்சம் ரூபாயில் ஒரு கார் வாங்கப் போகிறீர்கள். அங்கே 10 லட்சம் ரூபாயில் கார் இருக்கிறது. 5 லட்சம் ரூபாயிலும் கார் இருக்கிறது. நீங்கள் கடைசியில் 5 லட்சம் ரூபாய் காரைத்தான் வாங்குகிறீர்கள். உங்கள் கையில் 20 லட்சம் ரூபாய் பணமும் இருக்கிறது. அப்போது ஷோரூம் முதலாளி நீங்கள் கார் வாங்கத்தானே வந்தீர்கள்..? வாங்கியும்விட்டீர்கள்.. ஆனால் கையில் கொண்டு வந்திருக்கும் அந்த 20 லட்சம் ரூபாயையும் கொடுத்து விட்டு போங்கள் என்றால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?

அப்படித்தான் சினிமாவிலும் பெரிய பட்ஜெட் படம் பார்க்க வருபவர்கள் அதே கட்டணத்தில் சின்ன பட்ஜெட் படம் பார்க்க வேண்டும் என்று  நினைப்பது.. இதெப்படிச் சரியாகும்…?

படம் பார்ப்பவன் கேட்கிறான்… ‘ஏன்யா 5 லட்ச ரூபாயில் எடுத்த படத்துக்கும் 80 ரூபாய் 120 ரூபாய் டிக்கெட்டா…? 50 கோடி ரூபாயில் எடுத்த படத்துக்கும் அதே 80 ரூபாய் 120 ரூபாய் டிக்கெட்டா..?’ என்று..! இது நியாயமான கேள்விதானே..? ‘பட்ஜெட்டுக்கு ஏற்ற கட்டணத்தை அமல்படுத்துங்கள். தயாரிப்புச் செலவுக்கு ஏற்ற கட்டணத்தை வையுங்கள்’ என்கிறோம்.

‘புதிய படங்களை திரையிட்டால் பார்க்க ஆளில்லை. அதையும் தாண்டி வெளியிட்டால் 10 பேர்,  20 பேர் என்று வருவதால் பார்க்கிங் வருமானமில்லை. கேண்டீன் வருமானமில்லை..  நாங்கள் என்ன செய்வது..?’ என்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள். அவர்கள் சொல்வதும் சரிதானே…? 

img_7987

அதனால்தான் தயாரிப்புச் செலவுக்கு ஏற்றபடியான  இந்த ‘ஸ்மார்ட் கார்டு’ திட்டத்தின்படி,  டிக்கெட் போடும் திட்டத்தை கொண்டு வருகிறோம். 

தமிழ்ச் சினிமாவில் முதல்முயற்சியாக தியேட்டர்களில் வெறும் 19 ரூபாயில் படம் பார்க்கும் அனுபவத்தை ரசிகர்களுக்கு தரும்விதமாக ஒரு மிகப் பெரிய முயற்சியை நெக்ஸ்ட் லெவல் சினிமாஸ் நிறுவனம்  எங்களது ‘மதுரை டூ தேனி – 2’ படத்தின் மூலமாக செய்யவிருக்கிறது.

வருகிற மே மாதம் வெளியாகவிருக்கும் ‘மதுரை டூ தேனி – 2’ படத்தை ரசிகர்கள் தியேட்டரில் 19 ரூபாய் என்கிற குறைந்த கட்டணத்தில் பார்த்து ரசிக்கலாம்.

தொடர்ந்து தமிழில் குறைந்த செலவில் தயாராகும் தரமான படங்களை இதே கட்டணத்தில் தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து ரசிக்கும் வண்ணம் இந்த பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. எங்களை மாதிரி சிறு முதலீட்டுப் படங்கள் வெளிவரவும் அவைகள் காப்பாற்றப்படவும்  இது பெரிதும் உதவும்.

அதன்படி திரையரங்குகளை வாடகைக்கு எடுத்து வெளியிட இருக்கிறோம். இந்த ஸ்மார்ட் கார்டு திட்டத்தின்படி ஒரு படத்துக்கு 19 ரூபாய்தான் கட்டணம். ஊருக்குப் போகும்போது காத்திருக்கும் சமயத்தில்கூட ஒரு படம் பார்த்து விட்டு வந்து விடுவார்கள். 19 ரூபாய்தானே கட்டணம்…? திருட்டு விசிடியைவிட குறைந்த கட்டணம் என்றால் மக்கள் படம் பார்க்க தியேட்டருக்கு வருவார்கள்தானே..? திரையரங்குகள் உருவானதே படம் பார்க்கத்தான்… டிவியில் படம் பார்த்தால், அது திரையரங்குகளில் கிடைக்கும் அனுபவத்தைத் தந்து விடாது.

மக்களைத் தியேட்டரை நோக்கி வரவழைக்கும் திட்டம்தான் இது. நல்ல படங்கள் ஓடாத நிலை மாறும். நல்ல டீ குடிக்கவே 15 ரூபாய் ஆகும் இந்தக் காலத்தில் 19 ரூபாயில் ஒரு சினிமா என்றால் மக்கள் நிச்சயம் விரும்பிப் பார்ப்பார்கள்.

சூப்பர் ஹிட்டான படத்தைக்கூட உருப்படாத படம் என்று ஒருவன் சொல்வான். ஆளாளுக்கு ரசனை வேறுபடும்தானே..? முடிந்த அளவுக்கு தரமான படங்களை இப்படி வெளியிடுவோம். படம் பார்ப்பவர் விகிதம் அதிகரிக்க வேண்டும் 5 ஆயிரம் பேர்  பார்ப்பது 50 ஆயிரமாக வேண்டும். அது மேலும் வளர்ந்து 5 லட்சமாக உயர வேண்டும்.  

நான் சினிமாவில் பல துறைகளில் பணியாற்றியவன். என் படத்தை வைத்துதான் இந்த சோதனை முயற்சியில் இறங்கியிருக்கிறேன். லாபம், நஷ்டம் என்றால் எங்களுக்கு, வெற்றி பெற்றால் மற்றவர்களுக்கு உதவும்…” என்றார். 

இந்த நிகழ்ச்சியில் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். 

Our Score