SR PRODUCTIONS நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் B.ஜகதீஸ் தயாரிக்கும் திரைப்படம் மெட்ராஸ்காரன்,
இந்தப் படத்தில் மலையாள நடிகரான ஷேன் நிகாமும், கலையரசனும் இணைந்து நடிக்கிறார்கள். தற்போது இப்படத்தில் தெலுங்கு நடிகையான நிஹாரிகாவும் இணைந்துள்ளார்.
தெலுங்கில் நாயகியாக பல படங்களில் நடித்திருக்கும் நிஹாரிகா ஒரு நடிகையாக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் கலக்கி வருகிறார். இவர் தற்போது இந்த ‘மெட்ராஸ்காரன்’ திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில் ஷேன் நிகாமுக்கு ஜோடியாக நிஹாரிகா நடிக்கிறார்.
தெலுங்குலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சிரஞ்சீவியின் சகோதரரும், நடிகருமான நாகபாபுவின் மகளான நிகாரிகா ஏற்கெனவே 2018-ம் ஆண்டு வெளியான ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிந்தி ‘ரங்கோலி’ படம் மூலம், பள்ளிச் சிறுவர்களின் வாழ்வியலை வண்ணங்களாக தீட்டிய, இயக்குநர் வாலி மோகன் தாஸ், இப்படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையை புரட்டி எடுப்பதை, பரபரப்பான திரைக்கதையாக படைத்துள்ளார்.
ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்கு கூட்டிச் செல்லும் என்பதுதான் இப்படத்தின் மையக் கருத்து.
தற்போது படத்தின் முன் தயாரிப்பு பணிகள் துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் பிப்ரவரி மாதம், இப்படத்தின் படப்பிடிப்பை சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க, படக்குழு திட்டமிட்டுள்ளது.
படம் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.









