full screen background image

நடிகை குஷ்பூவின் அண்ணன் அப்துல்லா ஹீரோவாக நடிக்கும் ‘மாய மோகினி’..!

நடிகை குஷ்பூவின் அண்ணன் அப்துல்லா ஹீரோவாக நடிக்கும் ‘மாய மோகினி’..!

தயாரிப்பாளர் கே.தங்கவேலு தயாரித்து, நடித்துள்ள புதிய படம் ‘மாய மோகினி’.

இந்த ‘மாய மோகினி’ படத்தில் தயாரிப்பாளர் தங்கவேலுவே ஹீரோவாக நடித்திருக்கிறார். இன்னொரு ஹீரோவாக நடிகை குஷ்பூவின் அண்ணன் அப்துல்லா நடித்திருக்கிறார். அப்துல்லா ஏற்கெனவே ‘ஜனனி’ என்ற கன்னட படத்தில் நடித்திருக்கிறார். சாரிகா, ஜோதிஷா இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

பழம்பெரும் நடிகையான கே.ஆர்.விஜயா மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் எஸ்.என்.பார்வதி, ஆஷா, ‘பூவிலங்கு’ மோகன், ‘பாய்ஸ்’ ராஜன், ‘மகாநதி’ சங்கர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – கே.வி.ராஜன், இசை – எம்.ஜெயராஜ், படத் தொகுப்பு – டி.எஸ்.லட்சுமணன், பாடல்கள் – பிறைசூடன், பாவலர் சிவா, மோகன்ராஜன், சண்டை பயிற்சி – தீப்பொறி நித்யா, நடனம், ராம் முருகேஷ், மக்கள் தொடர்பு – நெல்லை சுந்தர்ராஜன், எழுத்து, இயக்கம் – ராசா விக்ரம், தயாரிப்பு கே.தங்கவேலு.

படத்தின் இயக்குநரான ராசா விக்ரம், இயக்குநர் பாபா விக்ரமின் மகனாவார். இவரது தந்தையான பாபா விக்ரம் ‘ஒண்ணும் தெரியாத பாப்பா’, ‘என் இதய ராணி’, கலைஞரின் ‘கண்ணம்மா’ ஆகிய படங்களை தயாரித்து இயக்கியவர். இந்தப் படங்களில் படத் தொகுப்பாளராகவும், இணை இயக்குநராகவும் பணியாற்றியவர்தான் ராசா விக்ரம்.

படம் பற்றி இயக்குநர் ராசா விக்ரம் பேசும்போது, “சித்தர்கள் வாக்கு பொய்க்காது என்பார்கள். அது என் வாழ்க்கையிலும் நடந்தேறிவிட்டது.

நடக்கப் போவதை முன்கூட்டியே அறிந்துணர்ந்து சூசகமாக நல்லது, கெட்டதை சொல்லக் கூடியவர்கள் சித்தர்கள். அப்படி நான் சந்தித்த ஒரு சித்தர்தான் என் வாழ்க்கையை புரட்டிப் போட்டு, புத்துயிர் ஊட்டி புதிய பாதையில் என்னை நடை போட வைத்திருக்கிறார்.

நான் ஒரு நாள் வடபழனி வெங்கீஸ்வரர் கோவிலில் சாமி கும்பிட போனேன். கோவிலுக்குள் நுழைகிற நேரம் அங்கே வாசல் படிக்கட்டு அருகே ஒரு பெரியவர் நின்றிருந்தார். அந்தப் பெரியவரை நான் இதற்கு முன் பார்த்த்தே இல்லை. ஆனால் அவர் கண்களில் அப்படி ஒரு தீட்சண்யம் தெரிந்த்து. அவர் என்னைப் பார்த்து லேசாக புன்னகைத்தார். பதிலுக்கு நானும் புன்னகைத்தபடியே அவரை நெருங்கினேன்.

கோவிலுக்குள் நுழைய முயன்றேன். அப்போது அவர், “ஏம்ப்பா டைரக்டரு.. உனக்கு தங்கமான தயாரிப்பாளர் ரெடியா இருக்காரு. அவர்கிட்ட உன்னோட ‘மாய மோகினி’ கதையைச் சொல்லு.. அவர் படம் எடுப்பாரு.. அது நிச்சயம் வெற்றி பெறும். ஏதோ உனக்கு சொல்லணும்னு தோணுச்சு. சொல்றேன். பலிக்கும் போ. படத்தை முடி. நீ இயக்குநரா வருவ.. ஆனால் உன்னை இயக்குவது நாங்கதான்…” என்று படபடவென சொல்லிவிட்டு அகன்றுவிட்டார்.

என்னால் நம்பவே முடியவில்லை. நான் யார் என்று தெரியாமலேயே என்னைப் பற்றி ஒருவர் சொல்லி.. அதிலும் வாழ்த்துகிறார் என்றால் எனக்கு எப்படியிருந்திருக்கும்..? வெங்கீஸ்வரரை மானசீகமாக வணங்கிவிட்டு வந்தேன்.

அடுத்த இரண்டாவது நாளே என் நண்பர் ஒருவர் மூலமாக இந்தப் படத்தின் தயாரிப்பாளரை சந்தித்தேன். “என் பெயர் தங்கவேலு…” என்றார் தயாரிப்பாளர். எனக்கு தூக்குவாரிப் போட்டது. ‘தங்கமான தயாரிப்பாளர் ஒருவர் உன்னைச் சந்திப்பார்’ என்று கோவிலில் அந்தப் பெரியவர் சொன்னது எனக்கு அப்போது ஞாபகத்திற்கு வந்தது.

சட்டென்று தயாரிப்பாளரிடம் ‘உங்களுக்கு படம் எடுக்கும் ஆசை இருக்கா?’ என்று கேட்டேன். ஆனால் அவரோ ‘அப்படியொரு எண்ணமே எனக்கு இப்போதுவரையிலும் இல்லை‘ என்றார். ‘சரி.. பரவாயில்லை.. கதையை மட்டுமாவது கேளுங்கள்’ என்று விடாப்பிடியாக அவரை பிடித்து வைத்து இந்த ‘மாய மோகினி’ கதையை அவரிடம் சொன்னேன்.

‘துணி வியாபாரம் செய்து வரும் ஒருவனது வாழ்க்கையில் விளையாடும் மோகினியின் லீலைகள்தான் இந்தப் படத்தின் கதை’ என்று சொன்னதுமே தயாரிப்பாளர் மிரண்டு விட்டார். ‘ஸார்.. நானும் துணி வியாபாரம் செய்துதான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன். என் வாழ்க்கையிலும் ஒரு மோகினி வந்து மூன்று வருடங்களாக என்னை பாடாய்ப் படுத்திவிட்டது’ என்று சிலிர்த்தபடியே சொன்னார்.

முழு கதையையும் கேட்டுவிட்டு, ‘இது என் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவம். இந்தப் படத்தை நானே தயாரிக்கிறேன்’ என்று சொன்னார். இப்படித்தான் நாங்கள் இந்த ‘மாய மோகினி’யைப் பிடித்தோம். அந்த சித்தர் சொன்னது அப்படியே என் வாழ்க்கையில் பலித்ததை கண்டு மெய் சிலிர்த்துப் போனேன்…” என்றார் இயக்குநர் ராசா விக்ரம்.

Our Score