இயக்குநர் பாலாஜி மோகனின் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மாரி’.
இத்திரைப்படம் படம் வெற்றியடைந்ததையடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று அந்தச் சமயத்தில் எதிர்பார்க்கப்பட்டது. இதை உறுதிப்படுத்தும்விதமாக சமீபத்தில் இயக்குநர் பாலாஜி மோகன், ‘மாரி-2’ படத்தின் அறிவிப்பு பற்றி அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதனை தொடர்ந்து அப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்களையும் பாலாஜி மோகன் வெளியிட்டிருந்தார்.
‘இந்த ‘மாரி-2’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ‘பிரேமம்’ புகழ் சாய் பல்லவி நடிக்கிறார். மேலும், மலையாளத்தின் இப்போதைய முன்னணி இளம் நடிகரான டோவினா தாமஸும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மற்றும் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், வினோத், அஜய் கோஷ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.
எழுத்து, இயக்கம் – பாலாஜி மோகன், இசை – யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு – ஓம் பிரகாஷ், படத் தொகுப்பு – ஜி.கே.பிரசன்னா, ஆடை வடிவமைப்பு – வாசுகி பாஸ்கர், சண்டை பயிற்சி – சில்வா, தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.பி. சொக்கலிங்கம், மார்டின், நிர்வாக தயாரிப்பு – எஸ். வினோத் குமார், தயாரிப்பு – வுண்டர்பார் பிலிம்ஸ்.
இப்படத்தின் பூஜை நிகழ்வு டிசம்பர் 14-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பாலாஜி மோகன், நடிகர் தனுஷ், கிருஷ்ணா மற்றும் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் மற்றும் படத் தொகுப்பாளர் ஜி.கே.பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.
‘மாரி-2’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தனுஷ் – யுவன் சங்கர் ராஜா கூட்டணி 10 வருடங்களுக்கு பிறகு அமைவதால் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
‘மாரி-2’ படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம்தொடங்க உள்ளது.