விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கும் இந்த ‘மார்கன்’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் லியோ ஜான் பால்.
இதில் விஜய் ஆண்டனி – துருவ் கோரக், அஜய் தீஷன் – தமிழறிவு, மகாநதி சங்கர் – காளி, சமுத்திரக்கனி – மூத்த ஏடிஜிபி ராஜா, தமிழ்நாடு சென்னை, ராமச்சந்திரன் – முருகவேல், பிரிகிடா – இன்ஸ்பெக்டர் ஸ்ருதி, தீப்ஷிகா – ரம்யா, அர்ச்சனா – அகிலா, கனிமொழி – வெண்ணிலா, வினோத் சாகர் – உதவி ஆணையர், நடராஜ் – மூத்த நரம்பியல் நிபுணர், அருண் ராகவ் – ஐவு ர்சு, கதிர் – தரகர் முகவர், ராஜாராம் – ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் கார்த்திக், அபிஷேக் – இயக்குனர் ராஜேஷ், நிஹாரிகா – ரம்யா ஆகியோரும் நடித்துள்ளனர்.
இசை: விஜய் ஆண்டனி, தயாரிப்பு நிர்வாகி: தயாரிப்பாளர் நவீன் குமார், ஒளிப்பதிவாளர்: எஸ்.யுவா, படத் தொகுப்பாளர்;: லியோ ஜான் பால், கலை இயக்குநர்: ஏ.ராஜா, திரைக்கதை: விஷ்ணு, லியோ ஜான் பால், நடனம்: பிரபு, இணை இயக்குநர்: பிரபு குப்புசாமி, இணை இயக்குநர்கள்: பிரேம்குமார்.கே.ஏ., ஜெய்சன், ஸ்வேதா செல்வராஜ், சந்துரு, பிரவீன் குமார்.டி., உதவி இயக்குனர்கள்: அருண் பிரசாத்.ஆர், அஸ்விகா குமரவேல், தயாரிப்பு மேலாளர்: கிருஷ்ணபிரபு, வண்ணம்: கௌஷிக் கே.எஸ்,ஆடை ஒப்பனையாளர்: ஷிமோனா ஸ்டாலின், போஸ்ட் புரொடக்ஷன்: திவாகர் டென்னிஸ், ஹரிஷ்.ஒய், ஒலி பொறியாளர்: எஸ் சந்திரசேகர், விஎஃப்எக்ஸ் கலைஞர்கள்: ஆதித் மாறன், காட்வின், சனத், சதீஷ், அருண், சிவா,டிஐ: ப்ரோமோ வொர்க்ஸ், மாஸ்டரிங்: ஆதித்யா, கதை குழு: லியோ ஜான் பால், விஷ்ணு, கே.பழனி, பி.பரத் குமார், விளம்பரங்கள்: பீட்ரூட், பத்திரிக்கை தொடர்பு: ரேகா
கிரைம், சஸ்பென்ஸ், திரில்லர் வகையில் இந்தப் படமும் ஒன்று.
சென்னையில் ஒரு நள்ளிரவில் ஒரு படுகொலை நடக்கிறது. ரம்யா என்ற இளம் பெண் நள்ளிரவில் வீடு திரும்பும் போது அவரது கழுத்தில் ஊசியால் மருந்து செலுத்தப்பட்டு அவருடைய உடல் முழுவதும் கருப்பான நிலையில் மரணம் அடைகிறாள்.
மறுநாள் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டு நகரமே பரபரக்கிறது காவல்துறை விசாரணை முடுக்கப்படுகிறது.
இதேபோன்ற ஒரு கொலை மும்பையில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருப்பதை அறிந்த சென்னை போலீஸ் கமிஷனர் அந்த கொலை வழக்கை விசாரித்த அதிகாரியான துருவை மும்பையில் இருந்து வரவழைக்கிறார்.
அடிஷனல் டிஜிபியானா துருவ்விடம் இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பை அன் அபிஸியலாக ஒப்படைக்கிறார் போலீஸ்க கமிஷனர்.(நிஜத்தில் இப்படி செய்ய முடியுமா என்பது லாஜிக்கான கேள்விதான்.)
சப் இன்ஸ்பெக்டரான பிரிகடாவையும், தன்னுடைய கார் டிரைவரான மகாநதி சங்கரையும் வைத்துக் கொண்டு இந்த வழக்கை துப்புத் துலக்க களம் இறங்குகிறார் துருவ் என்ற விஜய் ஆண்டனி.
சிசிடிவி வீடியோக்களை ஆய்வு செய்த பொழுது அந்த சம்பவம் நடக்கும் சில நொடிகளுக்கு முன்பாக அதே சாலையில் தமிழறிவு என்ற இளைஞன் வாக்கிங் போனது கண்டுபிடிக்கப்படுகிறது. முதலில் அந்த தமிழறிவுதான் இந்தக் கொலையை செய்திருப்பானோ என்று முதலில் சந்தேகப்படும் விஜய் ஆண்டனி அவனை துருவி துருவி விசாரிக்கிறார்.
தமிழறிவு மிகுந்த மன அழுத்தத்தில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறான். அவன் காதலித்த பெண் படுகொலை செய்யப்பட்டிருக்கிறாள் என்கின்ற ஒரு வருத்தத்தில் இருப்பவன். மன அழுத்தத்திற்கான மாத்திரை போடவில்லை எனில் துடித்துப் போய் விடுவான். அவனுக்கு அம்மா, அப்பா இல்லை. ஒரே ஒரு தங்கை மட்டுமே இருக்கிறாள்.
ஆனால் தமிழறிவுக்கு மிகப் பெரிய ஆற்றல் ஒன்று உண்டு. அது அசாத்தியமான மெமரி பவர். அந்த மெமரி பவரை வைத்து இந்த வழக்கினை நடத்துகிறார் விஜய் ஆண்டனி.
அவர் நினைத்ததுபோல் இந்த வழக்கிற்கு தமிழறிவு உதவி செய்தானா… உண்மையில் அந்த கொலையை செய்தது யார்… எதற்காக அந்த கொலை நடந்தது… கொலையின் பின்னணி என்ன… என்பதுதான் இந்தப் படத்தின் சஸ்பென்ஸ், திரில்லர் கலந்த கதை.
விஜய் ஆண்டனி படத்தின் துவக்க காட்சிகள் இருந்து கடைசிவரையிலும் ஒரு பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் போலீஸ் அதிகாரியாகவே மாறி இருக்கிறார். அவருடைய நடிப்பு இந்தப் படத்தில் கொஞ்சம் மெருகேறி இருக்கிறது என்று சொல்லலாம். குளோசப் காட்சிகளில் தன்னுடைய அத்தனை அவயங்களையும் பயன்படுத்தி நடிப்பை காண்பித்திருக்கிறார்.
அவருடைய மகளின் மரணத்தின்போதும், தமிழறிவிடம் அந்தக் கதையை சொல்லும்போதும் அவருடைய துயர நடிப்பு நமக்கு மிகவும் பிடித்த போகிறது.
படத்தின் சஸ்பென்ஸ் மற்றும் திரைக்கதையின் வேக ஓட்டத்திற்காக காட்சிகள் அடுத்தடுத்து வேகவேகமாக நகர்ந்து கொண்டே போவதால் அதற்கேற்ப வசனங்களையும் இயக்குநர் எழுதியிருப்பதால் அந்த வசனங்களை சொல்ல சொல்ல அடுத்த காட்சிகள் விரிவடைகிறது என்பதால் சில இடங்களில் படம் மின்னல் வேகத்தில் நகர, அதே வேகத்தில் விஜய் ஆண்டனியும் நடிப்பும் செல்கிறது.
ரம்யா கேரக்டரில் நடித்திருப்பவர் சில காட்சிகள் என்றாலும் மனதில் இருக்கிறார். அதேபோல் இறுதியாக கொலைக்கு தயாராகும் வெண்ணிலா என்ற அந்த பெண்ணின் முகம் அட்டகாசமான கேமராவுக்கு ஏற்ற முகம். மிக அழகாக அவருடைய கதாபாத்திரத்தை செதுக்கியிருக்கிறார்கள். கொஞ்சமும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் வடிவமைக்கப்பட்டதோடு அவருடைய நடிப்பும் சிறப்பு.
விஜய் ஆண்டனி கூடவே வரும் பிரிகடாவும், மகாநதி சங்கரும் தங்களுக்கான வேலையை மட்டுமே செய்திருக்கிறார்கள்.
தமிழறிவாக நடித்திருக்கும் அஜய் தர்ஷனும் மிக சிறப்பான நடிப்பைக் காண்பித்து இருக்கிறார். படத்தின் பெரும் பகுதியில் அவர்தான் கொலையாளி. அவர்தான் ஏதோ தெரியாமல் கொலை செய்திருக்கிறார் போலிருக்கிறது என்கின்ற ஒரு சந்தேகத்தை தன் மீது ஏற்றி கொண்டே படம் நெடுகிலும் கடைசிவரையிலும் வந்திருக்கிறார். உண்மையில் அவருடைய நடிப்புதான் இந்தப் படத்தை கடைசிவரையில் பார்க்க வைத்திருக்கிறது என்ற உறுதியாக சொல்லலாம்.
அதேபோல் அவருடைய தங்கையாக நடித்தவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் சில இடங்களில் திரைக்கதைகள் டென்ஷனை ஏற்றுவதற்காக அவர் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.
யுவராஜின் ஒழிப்பதிவு தரம் என்றே சொல்லலாம். படம் முழுவதும் ஒரு மேக மூட்டமான காலச் சூழலிலேயே படமாக்கப்பட்டுள்ளது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் இந்த ஒரு ஃபீலிங் படம் முழுவதும் இருந்தால் ஒரு சோக மயத்தை பார்வையாளர்களுக்கு கடைசி வரையில் கொடுக்கும் என்று நினைத்திருக்கலாம்.
விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். கேட்கும்படியாக இருந்தாலும் பின்னணி இசையில் மட்டும் கொஞ்சம் கவனித்து இசைத்திருக்கிறார்.
வெண்ணிலா சம்பந்தப்பட்ட காட்சிகளில் யார்தான் அந்த கொலையாளி என்பதை கண்டுபிடிக்க எத்தனைக்கும் வகையில் இசையை இசைத்து நம்மையும் கொஞ்சம் டென்ஷனாகவே கடைசி 20 நிமிடங்கள் அமர வைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி.
தமிழறிவு சம்பந்தப்பட்ட சில காட்சிகளில் வி.எப்.எக்ஸ். வடிவமைப்பு சிம்ப்ளி சூப்பர்ப். நடந்தது என்ன என்பதை கண்டுபிடிப்பதற்காக ஒரு நிழல் உருவத்தை வைத்து காட்டப்பட்டிருக்கும் அந்தக் காட்சிகள் நிச்சயம் ரசிகர்களைக் கவரும்.
சிறந்த எடிட்டரான லியோ ஜான்பால் இந்தப் படத்திற்கு முதல்முறையாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். அவரே எடிட்டராகவும் இருப்பதால் காட்சிகளின் நீளத்தை எந்த அளவுக்கு வைக்க வேண்டுமோ… அதை மட்டும் வைத்து படத்தை கச்சிதமாக நறுக்கியும்… திரைக்கதையின் வேக ஓட்டத்தில் பரபரப்பான இருக்கும்படியாகவும் படத் தொகுப்பினை செய்து இருக்கிறார்.
வழக்கமான கொலை வழக்கை துப்பறியும் கதையில், ‘சித்தர்களின் சக்தி’ என அறிவியலையும் கலந்து கட்டி கொடுத்திருக்கிறார் இயக்குநர் லியோ ஜான் பால். அதோடு சித்தர்களின் வாழ்க்கைக் கதை.. தமிழறிவுக்கு இருக்கும் நீச்சல் திறமை… இவை எல்லாவற்றையும் இணைத்தது சிறப்புதான்.
விஜய் ஆண்டனி தமிழறிவை விசாரிக்கும் விதமும், அவனை வைத்து நடந்த நிகழ்வுகளை மீட்டெடுக்கும் காட்சிகளும், சிசிடிவி காட்சிகள் மூலமாகக் கிடைக்கும் டிவிஸ்ட்டுகள் என்று திரைக்கதையை வேகமாக்கியிருக்கிறார்கள்.
அதே நேரம் வெண்ணிலாவை ‘தாராவி தார்’ என்று கிண்டல் செய்திருக்கும் தொனியும், தூய்மைப் பணியாளர்களைக் காசுக்காக அலைபவர்களாகக் காட்டியிருக்கும் காட்சியும் தேவையில்லாதது.
ஒரு அப்பாவுக்கும் மகளுக்குமான பாசம்… அதேபோல் ஒரு அண்ணனுக்கும் தங்கைக்குமான பாசம்… இந்தப் பாசத்துக்கு இடையில் நிறத்தை மட்டுமே வைத்து ஒரு பெண்ணை இழிவுபடுத்தும் செயல்.. அந்தப் பெண்ணை என்ன மாதிரியான ஒரு நிலைமைக்கு கொண்டு செல்கிறது என்பதையும் மிக அழகாக, முகம் சுளிக்காத வண்ணம், அதிகம் பயமுறுத்தாத வண்ணம் இந்தப் படத்தினை உருவாக்கி தந்திருக்கிறார் லியோ ஜான்பால்.
இந்த ‘மார்கன்’ நிச்சயம் மார்ஜினையும் தாண்டி மேலே செல்லும்.
RATING : 4 / 5









