சென்னையைத் தாண்டி புறநகர்ப் பகுதியில் நடக்கும் கதையாக உருவாகி வரும் படம் ‘மானிடன்’. இந்தப் படத்தை ஏ.எஸ்.எஸ். மூவீஸ் சார்பில் அசோக்குமார் தயாரிக்கிறார்.
இதில் ரக்ஷன் நாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே ‘திருட்டு ரயில்’ படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பவர். நாயகி புதுமுகம் அட்சயப் பிரியா. மற்றும் சீதா, விஜயகுமார், பாவா லெட்சுமணன், ‘கதகளி’யில் வில்லனாக நடித்த ஆத்மா, ரங்கம்மாள் பாட்டி ஆகியோரும் நடிக்கிறார்கள் இவர்களுடன் தயாரிப்பாளர் அசோக்குமாரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
ராம்ஜி இசையமைக்கிறார். 3 பாடல்கள் பதிவாகிவிட்டன. ஒரு கானா பாடலும் உண்டு. ஒளிப்பதிவு செந்தில் குமார். இவர் ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் உதவியாளர். நடனம் – சதிஷ் குமார். சண்டை பயிற்சி – ராஜேஷ் கண்ணன். இவர் பெப்ஸி விஜயனின் உதவியாளர்.
இப்படத்தை இயக்குபவர் ஒய். முனிஷ். இவர் உதவி இயக்குநராக தமிழ், தெலுங்கு டிவி தொடர்கள், பட விவாதங்கள் என்று பலவற்றில் ஈடுபட்டு பரவலான பணி அனுபவம் பெற்றவர்.
இந்தப் படத்தின் பூஜை இன்றைக்கு ஏவி.எம். ஸ்டூடியோவில் உள்ள புதிய பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது.
படம் பற்றி பேசிய இயக்குநர் முனிஷ், “இப்போது வெளியாகும் பெரும்பாலான தமிழ்ச் சினிமாக்களில் கதை நாயகர்கள் வீணாக சுற்றித் திரியும் சோம்பேறிகளாகவோ, அல்லது வேலை வெட்டி இல்லாதவர்களாகவோதான் வருகிறார்கள்.
ஆனால் இந்த ‘மானிடனின்’ நாயகன் வேறு மாதிரி இருப்பான். 2020-ல் உலகம் ஒரு பெரிய மாற்றத்தை எதிர்கொள்ளப் போகிறது, ஒரு பெரிய பிரச்சினையை சந்திக்கப் போகிறது. இப்போது நாம் வாழும் வாழ்க்கையின் விளைவுதான் அப்படி வர இருக்கிறது. அது யாருக்கானது என்றால் எல்லாருக்குமானதுதான். அந்தப் பிரச்சினை என்ன என்பது படத்தில் தெரியும்.
பிச்சைக்காரன் முதல் ஒபாமாவரை நிம்மதியாக வாழ எது தேவையோ அதைப் பற்றி சொல்லும் படம். வருங்கால ஆபத்தைப் பற்றிக் கவலையுடன் எச்சரிக்கும் படமாக ‘மானிடன்’ இருக்கும். இது காதல், நகைச்சுவை, எல்லாமும் கலந்த சமூகப் பொறுப்புள்ள கதையாக இருக்கும்.
வருகிற 22-ம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது. 40 நாட்களில் முழுப் படத்தையும் முடிக்கும் முனைப்போடு திட்டமிட்டு வருகிறோம். ஊத்துக் கோட்டை, சுருட்டப்பள்ளி, சாலக்குடி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
தமிழக, ஆந்திர எல்லையில் உள்ள சுருட்டப்பள்ளியில் இதுவரை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, என்.டி,ராமராவ் மூவரும்தான் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். அவர்கள் மூன்று பேருமே முதல்வராகி விட்டனர். நான்காவது படமாக அங்கு படப்பிடிப்பு நடக்கும் படம் இந்த ‘மானிடன்’ படம்தான். இது எங்களது படத்திற்குக் கிடைத்திருக்கும் பெருமை..” என்றார்.










