‘மாயா’ படத்தைத் தயாரித்த Potential Films நிறுவனம் அடுத்து தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘மாநகரம்.’
இத்திரைப்படத்தின் பத்ரிக்கையாளர் சந்திப்பு இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது இதில் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பிரபு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கதாநாயகர்கள் சுந்தீப் கிஷன், ஸ்ரீ, மற்றும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சார்லி, முனீஸ்காந்த் ராம்தாஸ், ஒளிப்பதிவாளர் செல்வகுமார், இசையமைப்பாளர் ஜாவீத் ரியாஸ், படத் தொகுப்பாளர் பிலோமின் ராஜ், பாடலாசிரியர்கள் லலித் ஆனந்த், ஆண்டனி பேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பாடலாசிரியர் லலித் ஆனந்த் பேசும்போது, “நான் இப்படத்திற்காக சென்னை மாநகரத்தை பற்றிய ஒரு பாடலை எழுதியுள்ளேன். ‘ஏண்டி என்னை பிடிக்குது’ என்ற அந்தப் பாடல் எல்லோரையும் கவரும் காதல் பாடலாக இருக்கும்.
நானும், இப்படத்தின் இசையமைப்பாளர் ஜாவீத்தும் குறும் படங்களில் இருந்து பெரிய திரைக்கு வந்துள்ளோம். நான் ஜாவீதின் இசைக்கு மிகப் பெரிய ரசிகன். ஜாவீத் இசையில் எந்தளவுக்கு புதுமையான இசை சப்தங்கள் இருக்கிறதோ, அதே அளவுக்கு பழமையான ஒரு இசை கோர்ப்பும் இருக்கும். அது அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயமாகும். இப்படத்தில் ஆண்டனி ஆங்கிலத்தில் பாடல் எழுதியுள்ளார். அவர் எழுதிய பாடலும் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்…” என்றார்.
படத் தொகுப்பாளர் பிலோமின் பேசும்போது, “என்னுடைய முதல் படமே Hyper Link களத்தில் அமைந்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. படத்தின் கதைக் களமே புதுமையான ஒன்றாகும். நானும் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் குறும் படத்தில் இருந்து ஒன்றாக இணைந்து பணியாற்றி வருகிறோம். படபிடிப்புக்கு செல்லும் முன்னரே கதை எவ்வாறு பயணிக்க வேண்டும் என்று நானும் இயக்குநரும் முடிவு செய்துவிட்டோம்..” என்றார்.
நடிகர் முனீஸ்காந்த் ராமதாஸ் பேசும்போது, “இப்படத்தின் இயக்குநர் என்னிடம் கதை சொல்லும்போது எனக்கு கால்ஷீட் பிரச்சனை இருந்தது. இயக்குநர் நான்தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்ததால்நான் இந்த படத்தில் நடித்தேன். இப்படத்தை நான் தவிர்த்து இருந்தால் ஒரு நல்ல கதாபாத்திரத்தை இழந்திருப்பேன். நான் சார்லி சாரின் மிகப் பெரிய ரசிகன் நான். அவருடன் இப்படத்தில் நடிப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி..” என்றார்.
நடிகர் சார்லி பேசும்போது, “இந்த ‘மாநகரம்’ திரைப்படம் தமிழ் சினிமாவை வேறு ஒரு தளத்துக்கு கொண்டு செல்லும் ஒரு படமாக இருக்கும். அதற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கடுமையான உழைப்பும் முக்கிய காரணமாகும். இப்படத்தில் நான் கால் டாக்சி டிரைவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் சொல்லும்போது உங்களுக்கு இப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் இல்லை, நல்லவன் கதாபாத்திரமும் இல்லை. ஆனால் இரண்டுக்கும் நடுவில் உள்ள ‘நோபல்’ கதாபாத்திரமாக அது இருக்கும் என்றார். அதை கேட்டவுடன் எனக்கு பிடித்திருந்தது. நடிக்க ஒத்துக் கொண்டேன்.
படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு அவர்களை பற்றி நான் கூறியே ஆக வேண்டும். அவர் உசேன் போல்ட், க்றிஸ் கெய்ல் போன்றவர். அவர்கள் இருவரும் எவ்வளவு பெரிய சாதனைகளை செய்து இருந்தாலும் ‘ஒ அப்படியா.. பெரிய சாதனைய நிகழ்த்தி இருக்கிறோமா?’ என்று சாந்தமாக கேட்பார்கள். அதே போலத்தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களான ஐந்து பேரும் மிக பெரிய சாதனைகளை நிகழ்த்திவிட்டு சாந்தமாக இருக்கிறார்கள்..” என்றார்.
கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் ஸ்ரீ பேசும்போது, “இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்னிடம் கதை சொல்லும்போது படத்தின் கதையை கேட்டு நான் வியந்துவிட்டேன். அவர் என்னிடம் கதை சொல்லி முடித்தவுடன் இப்படத்தில் நான் உங்களிடம் துணை இயக்குநராக பணிபுரிகிறேன் என்று கூறினேன். அந்த அளவுக்கு எனக்கு கதை பிடித்துவிட்டது.
இதற்கு முன்னர் நான் ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தின் இயக்குநர் குமாராஜா தியாகராஜாவிடம்தான் நான் உதவி இயக்குநராக பணியாற்ற வேண்டும் என்று கேட்டுள்ளேன்..” என்றார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசும்போது, “இப்படம் எங்கள் அனைவருக்கும் முதல் படமாகும். இப்படத்துக்கு தயாரிப்பாளர் நினைத்திருந்தால் மிகப் பெரிய தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து நீங்கள் பணியாற்றுங்கள் என்று சொல்லி இருக்கலாம். ஆனால் நான் கூறிய அந்த குழுவோடு பணியாற்ற என்னை அனுமதித்ததுக்கு நன்றி..” என்றார் இயக்குநர்.
தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது, “இப்படத்தின் கதை ஊரில் இருந்து சென்னையை நோக்கி பிழைப்பதற்காக வந்த எங்களின் சொந்த கதையை போல் இருந்ததால் என்னை இக்கதை மிகவும் கவர்ந்தது. மாயாவின் இயக்குநர் அஷ்வினை போல் இவரும் குறும்படம் இயக்கி வந்தவர். படம் நன்றாக வந்துள்ளது. நிச்சயம் அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டும்..” என்றார்.
கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சந்தீப் கிஷன் பேசும்போது, “இப்படத்தின் கதையை கேட்டதும் நானே தயாரிக்க வேண்டும் என்று நினைத்தேன். எனக்கு இக்கதை அவ்வளவு பிடித்திருந்தது. இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு எங்களை குழந்தை போல் பார்த்து கொண்டார். படபிடிப்பு தளத்தில் நாங்கள் அனைவரும் என்ன உணவு உட்கொள்கிறோமோ அதே உணவைத்தான் படத்தின் லைட்மேனில் இருந்து அனைவரும் சாபிட்டார்கள். அந்த அளவுக்கு அனைவரின் நலத்திலும் கவனம் செலுத்துபவர்..” என்றார்.
















