யானை மேல் குதிரை சவாரி – சினிமா விமர்சனம்

யானை மேல் குதிரை சவாரி – சினிமா விமர்சனம்

"சென்சாரில் எங்கள் படத்திற்கு ‘ஏ’ சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்கள். படத்தில் அப்படி ஆபாசமான எதுவுமே இல்லை.." என்றெல்லாம் இந்தப் படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும் ரிலீஸுக்கு முன்பான பத்திரிகையாளர் சந்திப்பில் புலம்பி தள்ளினார்கள்.

சரி.. கேட்கவே பாவமா இருக்கே என்று சென்சார் போர்டை திட்டிக் கொண்டே படம் பார்க்க உட்கார்ந்தால்..?

கடைசியில் நம்மையே பாவமாக்கிவிட்டார்கள்..!

ஒரு சின்ன கிராமம்.. நெசவு பட்டறை தொழில் அதிகம் இருக்கும் ஊர். தாய், தகப்பன் இல்லாத ஹீரோயின் தனது தம்பியுடன் அந்தப் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார்.

ஹீரோயினின் மாமனும், அத்தையும் வீடு தேடி வந்து ஹீரோயினை தங்களது மகனுக்கு திருமணம் செய்து வைக்க தாங்கள் தயாராக இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் அதில் ஒரு வில்லங்கமாக தங்களுக்கு 4 லட்சம் ரூபாய்வரைக்கும் கடன் இருப்பதாகவும், அந்தக் கடனில் பாதி தொகையை ஹீரோயின் கொடுத்துவிட்டால் இந்தக் கல்யாணம் நடக்கும் என்கிறார்கள்.

ஹீரோயினின் தம்பியின் பள்ளித் தோழர்கள் எல்லாரும் அதே ஊரில் ஐஸ் விற்கும் பிரம்மச்சாரி கிருஷ்ணமூர்த்திக்கு நெருங்கியவர்கள். அவரிடம் ஆலோசனை கேட்கிறார்கள். “அந்த 2 லட்சம் ரூபாயை ஹீரோயின் வேலை செய்யும் பட்டறையின் முதலாளியான முத்துராமனிடம் கேட்கலாமே..?” என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

ஒரு படையோடு சென்று முத்துராமனை சந்திக்கிறார்கள். அவரோ ஹீரோயினை மட்டும் தனியாக பேசி, 2 லட்சத்தை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக தனது பள்ளியறைக்கு வரும்படி அழைக்கிறார். கோபமான ஹீரோயின் அந்தப் பணத்தை அங்கேயே வீசியெறிந்துவிட்டுப் போகிறாள்.

இங்கேயும் பணம் கிடைக்காமல் போனதால் வேறு வேறு வழிகளில் பணம் சம்பாதிக்க முயல்கிறது கிருஷ்ணமூர்த்தி அண்ட் கோ. கடைசியாக ஒரு கொள்ளையில் ஈடுபட்டு 2 லட்சத்தை அபேஸ் செய்து கொண்டு வருகிறார்கள்.

ஆனால் அந்தக் கொள்ளையின்போது நடக்கும் அடிதடியில் சிக்கி கொலையுண்டவர்தான் மாப்பிள்ளை என்பது பின்புதான் இவர்களுக்கே தெரிய வர.. திக்கென்றாகிறது இவர்களுக்கு. போலீஸ் விசாரணை தொடங்குகிறது.

இனி என்னாகும் என்பதை தியேட்டருக்கு போய் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தப் படத்திற்கு ‘யானை மேல் குதிரை சவாரி’ என்று எதற்கு பெயர் வைத்தார்கள் என்று சர்வ சத்தியமாக நமக்குத் தெரியவில்லை..!

இயக்கம் என்றால் கிலோ என்ன விலை..? நடிப்பென்றால் என்ன..? என்பதையெல்லாம் இந்தப் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு ஒரு அப்ரண்டிஸ் பயிற்சிகூட பெறாத இயக்குநர்தான், இந்தப் படத்தை இயக்கியிருக்க வேண்டும்.

இப்படியெல்லாம் படம் எடுக்க வேண்டும் என்று யார் கேட்டது..? வேண்டியது..? இப்படியொரு படத்தை எடுத்து வைத்துவிட்டு தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்று இன்னொரு பக்கம் புலம்புவது எந்த வகையில் நியாயம்..? இது மாதிரியான அரைவேக்காட்டு படங்களுக்கு தியேட்டர் கொடுப்பதற்கு பதிலாக இப்போது நன்கு ஓடிக் கொண்டிருக்கும் படங்களுக்கே வழங்கலாமே..? அவைகளாவது ரசிகர்கள் கண்ணில் படட்டுமே..? தப்பித் தவறி இந்தப் படத்தை பார்க்க வரும் ரசிகன் அடுத்த 3 மாதங்களுக்கு தியேட்டர் பக்கமே வர மாட்டான் என்பது சர்வ நிச்சயம்..!

இதுவரையிலும் எத்தனையோ விதவிதமான இயக்குநர்கள் இயக்கிய பல்வேறு படங்கள் வெளியாகியிருக்கின்றன. இயக்கம் என்றால் என்ன என்பதற்கு வகுப்பெடுக்கும் அளவுக்கு சிறப்பான படங்கள் வந்திருக்கின்றன. இயக்கம் செய்வதற்கு வரும் முன் அதையெல்லாம் ஒரு பார்வை பார்த்துவிட்டு இந்த இயக்குநர் களத்தில் குதித்திருக்கலாம். அல்லது சரியான, திறமையான இணை இயக்குநர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு படத்தை இயக்கியிருக்கலாம்.

இப்போதெல்லாம் குறும்படங்கள்கூட வழக்கமான சினிமாக்களுக்கு சவால்விடும்வகையில் தரமானதாகவும், நேர்த்தியாகவும் எடுக்கப்பட்டு வருகின்றன. அப்படியிருக்கும்போது இப்படியொரு குப்பை படத்தை சினிமா என்று சொல்லிக் கொடுத்தால் எப்படி..?

ஒண்ணுமே இல்லாத கதை.. சுவாரஸ்யமே இல்லாத திரைக்கதை.. நடிக்க வைக்கவே இல்லாத நிலைமை.. நடிக்கத் தெரிந்த நடிகர்களிடம் நடிப்புத் திறனை வெளியேகொண்டு வராத இயக்கம்.. மொக்கையான பின்னணி இசை.. கேட்பாரற்ற பாடல்கள்.. இப்படி அனைத்துவித டேமேஜர்களையும் வைத்துக் கொண்டு என்னதான் சொல்வது..?

இதில் ஒரு காட்சியில் கூட்டு பலாத்கார காட்சி வருகிறது. இருவர் ஹீரோயினின் கைகளைப் பிடித்துக் கொள்ள.. மற்றொருவர் அவரை வல்லுணர்வு செய்கிறார். இப்படியாக மூன்று வில்லன்களும் தங்களது உடல் பசியை அடுத்தடுத்து தீர்த்துக் கொள்கிறார்கள்.

இப்படியொரு காட்சியை வைத்துவிட்டு ‘ஏ’ சர்டிபிகேட் கொடுத்துவிட்டார்களே என்று புலம்புவது எந்த வகையில் நியாயம்..? இதற்கு கொடுக்காமல் இருந்தால்தான் இந்தக் கேள்வியே கேட்க வேண்டும்..! கொடுத்தது நியாயமானதுதான்..!

பணம் எப்படியெல்லாம் வீணானது என்பதற்கு உதாரணமாக இந்தப் படத்தை சொல்லலாம்..!

அவ்வளவுதான்..!