full screen background image

இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் ‘மாலை நேரத்து மயக்கம்’

இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் ‘மாலை நேரத்து மயக்கம்’

பீப்டோன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் செல்வராகவனின் எழுத்தில்  அவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கி வரும் படம் ‘மாலை நேரத்து மயக்கம்’.

தமிழ், தெலுங்கு மொழிகளில் 110-க்கும் மேற்பட்ட படங்களுக்கு படத்தொகுப்பு செய்தவர் கோலா பாஸ்கர்.  இயக்குநர் செல்வராகவனின் பதினைந்து வருட கால நண்பரான இவர், ‘7-ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’, ‘இரண்டாம் உலகம்’ உட்பட செல்வராகவன் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுக்கும் படத்தொகுப்பு செய்தவர்.

இப்படங்கள் தவிர ‘போக்கிரி’, ‘வில்லு’, ‘யாரடி நீ மோகினி’, ‘3’ உட்பட பல வெற்றிப் படங்களில் பணியாற்றி உள்ள கோலா பாஸ்கர்தான் இந்த மாலை நேரத்து மயக்கம் திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறார். இது இவரது முதல் தயாரிப்பாகும்.

இப்படத்தில் கதாநாயகனாக கோலா பாஸ்கரின் மகன் பாலகிருஷ்ணன் அறிமுகமாகிறார். மகனை ஹீரோவாக்க விரும்பியே படத் தயாரிப்பில் இறங்கியுள்ளார் கோலா பாஸ்கர். கதாநாயகியாக வாமிகா என்ற புதுமுகம் நடிக்கிறார். இவர்களுடன் இயக்குநர் அழகம் பெருமாள், கல்யாணி நட்ராஜன், பார்வதி நாயர் உட்பட பலர் நடிக்கிறார்கள்.

செல்வராகவன், கோலா பாஸ்கர், ஒளிப்பதிவாளர் ராம்ஜி ஆகியோரின் உதவியாளர்களும் இந்த ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தில் அறிமுகமாகிறார்கள்.

செல்வராகவனிடம் உதவியாளராக பணியாற்றிய அவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் இப்படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவாளர் ராம்ஜியின் உதவியாளரான ஸ்ரீதர் DFT., இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். கோலா பாஸ்கரின் உதவியாளரான ரூபேஷ் படத்தொகுப்பு செய்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருப்பவர் செல்வராகவன். உலகப் புகழ் பெற்ற யுனிவர்சல் கம்பெனிக்கு இசை ஆல்பம் தயாரித்த அம்ரித் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். நடனம் – கல்யாண்.

‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலனி’ வரிசையில் ஒரு ஜனரஞ்சகமான காதல் கதையாக உருவாகி வருகிறது ‘மாலை நேரத்து மயக்கம்’. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ஏற்கனவே வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பலத்த பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தில் அறிமுகமாகும் வாமிகா ஹிந்தியில் சில படங்களில் நடித்து வருவதால், அவரது கால்ஷீட் கிடைப்பதில் தாமதமானதால் படத்தின் தயாரிப்பும் தாமதமாகிவிட்டது. தற்போது ஹீரோயின் வாமிகாவின் கால்ஷீட் கிடைத்து, சென்னையில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் மூணாறில் இப்படத்தின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தது. இம்மாத இறுதியில் இரண்டு பாடல் காட்சிகள் உடன் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைகிறது. ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தின் இசை வெளியீடு விரைவில் நடைபெற உள்ளது.

Our Score