Aha தமிழ் OTT தளத்திற்காக கோவை பிலிம் மேட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் சிவராஜ்.ஆர் மற்றும் சாய் கார்த்தி இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
படத்தில்
கஜராஜ் வேடத்தில் கஜராஜ்
கதிர் வேடத்தில் அஸ்ரப்
பிலிப்ஸாக தினேஷ் குமரன்
கர்ணனாக சாய் கார்த்தி
யாழினியாக கவுரி நந்தா
கௌதமாக விஜே பப்பு
ஜெய் என ஜெய் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
இசை – பத்மயன் சிவானந்தம், ஒளிப்பதிவு, படத் தொகுப்பு – சிவராஜ்.ஆர்,, தயாரிப்பு – கோவை பிலிம் மேட்ஸ், தயாரிப்பாளர்கள் : சிவராஜ்.ஆர், சாய் கார்த்தி, இயக்கம் – தினேஷ் குமரன், பத்திரிக்கை தொடர்பு – சுரேஷ் சுகு மற்றும் தர்மதுரை.
ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் நடைபெறும் நான்கு வெவ்வேறு சம்பவங்களை இறுதியாக ஒரு புள்ளியில் சந்திக்க வைக்கும் விதியின் விளையாட்டுதான் இந்தத் திரைப்படம்.
தஞ்சாவூரில் இருந்து பழமையான ராஜராஜசோழன் சிலை வெளிநாட்டுக்குக் கடத்தப்படவுள்ளது. அதனை பத்திரமாக தஞ்சாவூரில் இருந்து கடத்தி சென்னைக்கு கொண்டு வர வேண்டியது சேரா என்ற கடத்தல் கும்பல் தலைவனின் பொறுப்புக்கு வருகிறது.
அவன் தன் தளபதியான கர்ணாவிடம் அதை ஒப்படைக்கிறான். கர்ணா இந்த வேலையில் நேரடியாக தலையிடாமல் தன் ஆட்களை அனுப்பி வைக்க.. இப்போது சேராவின் மகன் இடையில் புகுந்து குழப்பம் செய்துவிட சிலை ரிட்டர்ன் ஆகிறது.
இன்னொரு பக்கம் தஞ்சாவூரில் இருந்து வேலைக்காக சென்னைக்கு புறப்படும் தனது காதலியான ஜெய்யை வழியனுப்ப வந்திருக்கும் பத்திரிகையாளனான வி.ஜே.பப்பு தனது காதலைச் சொல்லத் தயங்கிக் கொண்டிருக்கிறான்.
அதே நேரம் விலையுயர்ந்த பைக்கை வாங்குவதற்காக அர்த்த ராத்திரியில் திருடுவதற்காக லோக்கல் திருடர்களான அஸ்ரப், தினேஷ் குமரன் இருவரும் திட்டமிடுகின்றனர்.
இவர்களின் கண் பார்வையால் மீடியாவுலக காதலர்கள் படுகின்றனர். தனது காதலிக்கு தனது கையால் தங்கச் சங்கிலியை கொடுத்துத் தனது காதலை தெரியப்படுத்துகிறார் பப்பு. அடுத்த நிமிடத்தில் அந்தச் சங்கிலியை பறித்துக் கொண்டு போகிறார்கள் அஸ்ரப்பும், தினேஷ் குமரனும்.
இவர்கள் போகும்போது வழியில் லஞ்சப் பேர்வழியான இன்ஸ்பெக்டரான கஜராஜிடம் சிக்கி தங்கச் சங்கிலியை பறி கொடுக்கிறார்கள். அப்போது அருகிலேயே ஒரு விபத்தும் நடக்க இன்ஸ்பெக்டர் கஜராஜூம், ஏட்டுவும் ஓடி வந்து பார்க்கிறார்கள்.
அங்கே கர்ணாவின் கூட்டாளிகள் வந்த கார் விபத்துக்குள்ளாகி அதிலிருந்த 2 பேரும் இறந்து போயுள்ளனர். காரில் இருந்த சிலை மாயம். இப்போது சிலையைக் கேட்டு சேரா, கர்ணாவுக்கு நெருக்கடி கொடுக்கிறார்.
இன்ஸ்பெக்டர் கஜராஜ் மீதிருக்கும் கோபத்தில் அவர் வீட்டிலேயே திருடப் போகும் அஸ்ரப்பும், தினேஷ் குமரனும் அங்கே ஏட்டு துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடப்பதைப் பார்க்கிறார்கள்.
தொடர்ந்து அங்கே வரும் கஜராஜிடமிருந்து அவர்கள் தப்பித்து ஓட.. அவர்கள்தான் ஏட்டுவை கொலை செய்துவிட்டு சிலையைக் கடத்திச் செல்கிறார்கள் என்று இன்ஸ்பெக்டர் ஜகராஜ் நினைத்து இவர்களைத் துரத்துகிறார்.
உண்மையாக சிலையைக் கடத்திச் சென்றவன் வேறு பக்கம் ஓட.. காதலர்கள் மருத்துவமனையை நோக்கி ஓட.. கர்ணா, இன்ஸ்பெக்டர் கஜராஜ்தான் சிலையை வைத்திருக்கிறார் என்று அவரை விரட்ட.. சேரா, கர்ணாவை விரட்ட.. அஸ்ரப்பும், தினேஷ் குமரனும் ஓடி ஒளிய.. கடைசியாக அனைவருமே ஓரிடத்தில் சந்திக்கிறார்கள்.
இதன் பின் என்ன நடந்தது..? சிலையை உண்மையாகக் கடத்தியது யார்..? சிலையை போலீஸார் மீட்டார்களா இல்லையா..? என்பதுதான் இந்த விறுவிறுப்பான, பரபரப்பான துப்பறியும் திரைப்படத்தின் சுவையான திரைக்கதை.
புதுமுகங்கள் அதிகம் நடித்திருக்கும் சூழலில் ஒருவர்கூட சோடை போகாத வண்ணம் நடிக்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கஜராஜூம், சேராவாக நடித்தவர், கர்ணாவின் மனைவியாக நடித்திருக்கும் கெளரி நந்தாவும் மட்டுமே நமக்குத் தெரிந்த முகங்கள்.
கர்ணாவின் முரட்டுத்தனமும், சேரா மற்றும் அவரது மகனாக நடித்தவர்களின் மிரட்டலும் அந்தந்த கேரக்டர்களை நம் மனதில் பதிய வைத்திருக்கிறது. கெளரி நந்தா சில காட்சிகள் என்றாலும் அந்தப் பதைபதைப்பை நமக்கும் கடத்தியிருக்கிறார்.
டார்க் காமெடியை இயல்பாக தங்களது பேச்சில் கொண்டு வந்திருக்கும் லோக்கல் திருடர்களான அஸ்ரப் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவருமே நம்மை வெகுவாக கவர்ந்திழுக்கிறார்கள். கடைசியில் தினேஷ் குமரனின் மீது நமக்கு ஒரு பரிதாபம் ஏற்படும் அளவுக்கு அந்தக் காட்சியைப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கஜராஜின் வசூல் மன்னான நடிப்பு வெகு இயல்பாக அமைந்துள்ளது. சிலைக்கும் அவருக்குமான தொடர்பு பின்பு தெரிய வரும்போது நிஜமாகன வில்லனாகவே மிரட்டியிருக்கிறார். இவரும் அஸ்ரப்-தினேஷ் கார்த்திக் சம்பந்தப்பட்ட காட்சிகளெல்லாம் சிரிப்பும், சீரியஸூமாக படத்தை நகர வைத்திருக்கிறது.
ஒளிப்பதிவையும், படத் தொகுப்பையும் ஒன்றாய் செய்திருக்கும் ஒளிப்பதிவாளர் சிவராஜின் பணி பாராட்டத்தக்கது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவு நேரத்திலேயே அமைந்திருப்பதால், அந்தக் காட்சிகள் முழுவதையும் விளக்குகளால் முழுமைப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
அனைவரையும் ஓரிடத்தில் குவித்த பிறகு செய்திருக்கும் படத் தொகுப்பு அடுத்தது என்ன என்ற ஆர்வத்தைத் தூண்டிவிட்டிருக்கிறது.
இசையமைப்பாளர் பத்மயன் சிவானந்தத்தின் பின்னணி இசை கதையோட்டத்திற்கு இடையூறு செய்யாமல் உடன் இசைத்திருக்கிறது.
நான்கு சம்பவங்கள்.. நான்கு கதாப்பாத்திர குழுக்கள்.. இவர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பொதுவான விஷயம் என்று ‘மாநகரம்’ பட பாணியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் கதையும், திரைக்கதையும், அழுத்தமான சிறப்பான இயக்கமும் இந்தப் படத்திற்கு ‘சிறந்த திரைப்படம்’ என்ற பெயரைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.
சிறிய நடிகர், நடிகர்களை வைத்து மிகப் பெரிய நட்சத்திர நடிகரின் படத்துக்கான வேல்யூவை கொடுத்திருக்கும் இப்படத்தின் இயக்குநர் தினேஷ் குமரனுக்கும், அவரது குழுவினருக்கும் நமது மனமார்ந்த பாராட்டுக்கள்..!
RATING : 4.5 / 5