full screen background image

டீமன் – சினிமா விமர்சனம்

டீமன் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.சோமசுந்தரம் தயாரித்துள்ளார்.

படத்தில் சச்சின், அபர்ணதி, ’கும்கி’ அஸ்வின், ஸ்ருதி பெரியசாமி, ரவீனா தஹா, ஆர்.சோமசுந்தரம், மிப்புசாமி, ’கே.பி.ஒய்.’ பிரபாகரன், நவ்யா சுஜி, தரணி, அபிஷேக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

’மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்திற்கு இசையமைத்த ரோனி ரபெல் இசையமைக்க, ஆர்.எஸ்.அனந்தகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரவிகுமார்.எம் படத் தொகுப்பு செய்ய, விஜய் ராஜன் கலை இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். 

இயக்குநர் வசந்தபாலனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம்  கொண்ட ரமேஷ் பழனிவேல் இந்தப் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.

பேய்க்கு ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் வேறொரு சொல்தான் டீமன்’. படத்தின் டிரைலரில் இது உண்மை சம்பவங்களின் தொகுப்பு என்றும் போட்டுள்ளார்கள்.

டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 நபர்கள் ஒன்றாக இணைந்து மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் ஹாரர் படம்தான் இந்த ‘டீமன்’. மேலும், அது தொடர்பான பல்வேறு மர்ம நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட படமும்கூட.

அவர்களது மரணம் தற்கொலை என்று வழக்கு முடிக்கப்பட்டாலும், அவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது இன்றுவரை தெளிவாகத் தெரியவில்லை.

அவர்களின் தற்கொலைக்கான காரணங்களில் ஒன்று, பேய், அமானுஷ்யம் போன்றவற்றில் அந்தக் குடும்பத்தினருக்கு அதீத நம்பிக்கை இருந்ததால் அவர்கள் அப்படி செய்ததாகச் சொல்லப்பட்டது. அது உண்மையாக இருந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தில்தான் உருவானதுதான் இந்தப் படம்.

இது வெறும் ஹாரர் படமாக இல்லாமல், ஒரு சைக்கலாஜிகல் ஹாரர் என்ற ஜானரில் உருவாகியுள்ளது.

வழக்கமாக இது போன்ற படங்களில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு வீடு இருக்கும். அதில் அமானுஷ்ய சக்தி வாழ்ந்து வந்து, அங்கே குடியேறுபவர்களை ஆட்டுவிக்கும். ஆனால், இந்தப் படத்தில் நகரின் மையப் பகுதியில் இருக்கும் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நடக்கும் வித்தியாசமான சம்பவங்களையும், அதனால் பாதிக்கப்படும் நாயகனின் உளவியல் தொடர்பான பிரச்சனைகளையும் சொல்லியிருக்கிறார்கள்.

படத்தின் நாயகனான சச்சின் சினிமாவில் ஒரு உதவி இயக்குநர். இயக்குநராகும் முயற்சியில் இருப்பவன் ஒரு தயாரிப்பாளரிடம் பேய்க் கதையொன்றை சொல்லி ஓகே வாங்குகிறான்.

படம் செய்யப் போவதாக அதற்காக தனக்கென்று ஒரு வீடு பார்க்கிறான். ஒரு அபார்ட்மெண்ட்டில் 2 பெட்ரூம் கொண்ட வீடு கிடைக்கிறது. உடனேயே அவனுக்குத் திருமணத்திற்குப் பெண் பார்க்கப் போவதாக அவனது பெற்றோர்கள் சொல்கிறார்கள்.

பெற்றோர்கள் அனுப்பிய ஒரு பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்து  இம்ப்ரஸாகும் நாயகன் அந்தப் பெண்ணின் வீடு தேடி சென்று பெண் கேட்கிறான். சினிமா துறை, உதவி இயக்குநர் என்பதால் பெண் தர மறுத்தாலும், விடாப்பிடியாக அந்தப் பெண்ணை பின் தொடர்ந்து சென்று ஒரு வழியாக தன் காதலைச் சொல்லி ஓகே வாங்குகிறான்.

இந்த நேரத்தில்தான் அந்த வீட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3-வது அறையில் வாசம் செய்யும் ஆவிகளின் குடும்பம் தங்களது அட்டகாசங்களைத் தொடங்குகின்றன. அந்த வீட்டில் நாயகன் தூங்கும்போது தினமும் கெட்ட, கெட்ட கனவுகளைத் தூண்டிவிட்டு நாயகனின் நிம்மதியைக் குலைக்கின்றன.

தனக்குள் ஏதோ நடக்கிறது என்பதை நாயகன் உணர்வதற்குள்ளாக அவன் பேய்களின் பிடியில் சிக்கிக் கொள்கிறான். நாயகனின் குடும்பத்தினர் சென்னைக்கு ஓடோடி வந்து அவனைத் தேடுகின்றனர். தனது நண்பர்களிடத்தில்கூட அவன் சொல்லாமல் தலைமறைவாகி பேய்களிடம் மாட்டிக் கொண்டு தவிக்கிறான்.

இறுதியில் என்னவாகிறது.. படம் எடுத்து முடித்தானா.. அந்தப் பேய்கள் யார்.. பேய்களின் பிடியிலிருந்து நாயகன் தப்பித்தானா இல்லையா என்பதுதான் இந்த டீமன் படத்தின் திரைக்கதை.

நாயகனான நடித்திருக்கும் சச்சின் முழுப் படத்தையும் தானே தாங்கியிருக்கிறார். முதல் அரை மணி நேரத்தில் நாயகியின் பின்னாலேயே அலைந்து திரிந்து அவரை தன்வசப்படுத்தும் காதலன் வேடத்தைக் கச்சிதமாகச் செய்துவிட்டு இயக்குநர் நடிப்பைக் காண்பிப்பாரென்று எதிர்பார்த்த தருணத்தில் பேய்களிடம் சிக்கித் தவிக்கும் அப்பாவி இளைஞராக மாறிப் போகிறார்.

கனவு கண்டு பயம் கொண்ட இளைஞராகத் தவிக்கும் நாயகனை அவனது டீம் மேட்ஸ்களே கலாய்க்கும் ஒரு காட்சி சுவையானது. அந்த 3-வது பெட்ரூமுக்குள் மாட்டிக் கொண்டுத் தவிக்கும் காட்சியில் நம்மையும் சேர்த்தே பதற வைத்திருக்கிறார் நாயகன்.

வீட்டுக்குள் பயத்தால் தவிப்பது, தெருவில் ஓடுவது, நண்பர்களைப் பார்த்து பயப்படுவது.. மன நலம் பாதிக்கப்பட்டவரைப் போலாகி குழப்பத்தில் ஆழ்த்துவது என்று நம்மையும் பல காட்சிகளில் பதற வைத்துவிட்டார் நாயகன் சச்சின். சிறந்த நடிப்பைக் காண்பித்திருக்கிறார். பாராட்டுக்கள்.

நாயகி அபர்ணதியின் இத்தனை அழகை இதுவரையிலான எந்தப் படத்திலும் யாரும் காட்டியதில்லை. இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளரின் கை வண்ணத்தில் வேறொரு கோணத்தில் மிக அழகாகத் தெரிகிறார் அபர்ணதி. அதோடு அழகாக நடிக்கவும் செய்திருக்கிறார்.

நண்பர்களில் கும்கி அஸ்வினுக்கு மட்டுமே அதிகமான காட்சிகள் அமைந்துள்ளது. பேய்களின் குடும்பக் கதையில் பாட்டி பேயின் நடிப்பு ரசனையானது. அந்தக் குடும்பம் மொத்தமுமே சிறந்த பேய்களாக நடித்துள்ளனர்.

நாயகன் சொல்லும் பேய்க் கதையில் ஒன் வுமன் ஷோ காட்டியிருக்கும் ஸ்ருதி பெரியசாமியின் நடிப்பைவிடவும் அவரது தொடையழகு இந்தப் படத்தில் நிச்சயமாகப் பேசப்படும்.

ஹாரர் படங்கள் என்றாலே விஷுவலும், பின்னணி இசையும்தான் படத்திற்கு ஆணி வேர். அதை எந்த அளவிற்கு சிறப்பாகக் கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு சிறப்பாக இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனந்தகுமாரின் ஒளிப்பதிவு அட்டகாசம் என்றே சொல்லலாம். வீட்டுக்குள்ளேயே நடக்கும் அத்தனை திகில் காட்சிகளிலும் திகிலைக் கூட்டியிருக்கிறது ஒளிப்பதிவு.

சமீபத்தில் வெளியாகி பலரது பாராட்டுகளைப் பெற்ற ‘அஸ்வின்ஸ்’ திரைப்படத்தில் இசைக் கலவை செய்த ரோனி ரபேல்தான் இந்தப் படத்தின் இசை மற்றும் பின்னணி இசையை அற்புதமாக உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் பின்னணி இசை மற்றும் ஒலிக் கலவை இரண்டுமே விருதுக்குரியவை.

விஜய் ராஜனின் கலை இயக்கத்தையும் பெரிதும் பாராட்ட வேண்டும். வெற்றிடமாக இருக்கும் அந்த வீட்டை சில காட்சிகளுக்குப் பிறகு ஒரு கலை ஓவியமாக மாற்றியமைத்து கண் பார்வைக்கு அழகு சேர்த்திருக்கும் அந்தக் கலை நயத்திற்கு நமது பாராட்டுக்கள்.

இது போன்ற திகில் படங்களில் இந்த உணர்வைப் பெற வைப்பதே படத் தொகுப்புதான். படத் தொகுப்பாளர் எம்.ரவிக்குமாரின் கத்தரி வெட்டு படத்திற்கு மிகப் பெரிய பலம். பேய்களின் அட்டகாசத்தையும், சச்சினின் நடிப்பையும் மாறி, மாறி காட்டியிருப்பதால் அந்தப் பதட்டம் கொஞ்ச நேரத்திலேயே நம்மையும் தொற்றிக் கொண்டு பதட்டமாக்கியிருக்கிறது.

பேயால் ஒரு மனிதன் உளவியல் ரீதியாக எப்படி பாதிக்கப்படுகிறான்.. பேய், மனிதனை உளவியல் ரீதியாக எப்படி ஆட்கொள்கிறது என்பதை இந்த படத்தில் அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

ஒரு உணர்ச்சிகரமான பாணியிலான ஒரு பேய் படமாகத்தான் இந்த ‘டீமன்’ படம் அமைந்துள்ளது. நிச்சயமாக, ஒரு வித்தியாசமான படம் பார்த்த அனுபவத்தை இந்த டீமன் திரைப்படம் நமக்குக் கொடுக்கிறது.

இறுதியில் படம் முடியும்போது காட்டப்படும் டிவிஸ்ட்டு எதிர்பாராதது என்பதுடன் நாயகன் ஜெயிக்க வேண்டும் என்ற நமது பிரார்த்தனையும் பலித்துவிட்டதால் நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கிறது.

டீமன் – நெகிழ வைக்கும் பேய்களின் கதை..!

RATING : 3.5 / 5

 

Our Score