full screen background image

“என்ன வெங்காயத்துக்கு பாட்டெழுதணும்..?” – பாடலாசிரியர் சிநேகனின் கோபம்..!

“என்ன வெங்காயத்துக்கு பாட்டெழுதணும்..?” – பாடலாசிரியர் சிநேகனின் கோபம்..!

ஏ.என்.ஸ்டுடியோஸ் தயாரிப்பில் எஸ்.டி.குணசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘களவு செய்யப் போறோம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் கவிஞர் சிநேகன் பேசும்போது “வரிகள் புரியாமல் இருக்கும்படியாகத்தான் தற்போதைய பாடல்கள் வெளி வருகின்றன. இதற்கு எதற்காக பாடல்களை எழுத வேண்டும்..?” என்று கண்டனம் தெரிவித்தார்.

IMG_4503

அவர் மேலும் பேசும்போது, ” இந்த ‘களவு செய்யப் போறோம்’ படக் குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். இந்தபடத்தின் இசையமைப்பாளர் வி.தஷி எனக்கு 20 ஆண்டு கால நண்பர். படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நாயகர்களில் ஒருவரான சலீமும் எனக்கு ஏற்கனவே தெரிந்த நண்பர்தான். அவர்களுக்கும் படக் குழுவினருக்கும் மீண்டும் என் வாழ்த்துக்கள்.

இந்தப் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகும் பாடலாசிரியர் கவிதாவுக்கு எனது வாழ்த்துக்கள். இந்தப் படத்தின் பாடல்கள் வார்த்தைகள் புரியும்படியாக பாடலாசிரியர்கள் எழுதியுள்ளனர். அந்த வார்த்தைகளை கேட்கும்படியாக இசையமைப்பாளர் தஷி இசையமைத்துள்ளார்.

ஆனால் இன்றைய பாடலாசிரியர்களில் சிலர் எழுதும் பாடல் வரிகள் என்ன என்றே புரிவதில்லை. வரிகளும், வார்த்தைகளும் புரிந்தால்தானே பாடலின் அர்த்தமும் புரியும்,  பாடல் வரிகளை கேட்கும்படியாக இசையமைக்க முடியவில்லையெனில் என்ன வெங்காயத்துக்கு படத்தில் பாடல் காட்சிகள் இருக்க வேண்டும்..? அதற்கு பாடலாசிரியர்கள் பாடல்களை எழுத வேண்டும்..? ஆங்கிலம், மற்றும் புரியாத வார்த்தைகளை கலந்து பாடல்களை எழுதுவதை விட்டுவிட்டு நம் தமிழ்மொழியில் எழுதுங்கள். அதையும் புரியும்படி எழுதுங்கள்.

சினிமா விழா மேடைகளில் தயவு செய்து பொன்னாடை போர்த்தாதீர்கள். அதற்கு பதிலாக கலந்து கொள்ளும் பெண்களுக்கு சேலையும் ஆண்களுக்கு வேட்டியும் அன்பளிப்பாக தாருங்கள். வேட்டியும், சேலையும் நம் கலாச்சாரம்.  நாம் அதனை வளர்த்தாக வேண்டும்…” என்றும் குறிப்பிட்டார்.

விழாவில் இயக்குநரும் நடிகருமான சந்தான பாரதி, நடிகர்கள் நிதின் சத்யா, பவர் ஸ்டார், மகாநதி சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Our Score