கதையைக் கொடுத்தும் பாடல் எழுத வாய்ப்புத் தரவில்லை – பாடலாசிரியர் புகார்..!

கதையைக் கொடுத்தும் பாடல் எழுத வாய்ப்புத் தரவில்லை – பாடலாசிரியர் புகார்..!

ஜெயங்கொண்டத்தில் ஹோட்டல் தொழிலில் பெயர் பெற்ற குடும்பத்தில் பிறந்து திரைப்பட பாடலாசிரியராகும் ஆசையில் குடும்பத்தை பிரிந்து சென்னை வந்து தள்ளுவண்டிக் கடையில் எச்சில் தட்டு கழுவும் வேலை செய்து, பிறகு பல ஹோட்டல்களில் சர்வராக வேலை பார்த்து, ஒரு நிலையில் முயன்று இப்போது சொந்தமாக சென்னையில் ‘கவிஞர் கிச்சன்’ என்ற பெயரில் பாஸ்ட் புட் கடையை சொந்தமாக ஒரு சிறு ஓட்டல்  துவங்கி அதை நிர்வகித்து வருகிறார்.

கூடவே தனது சினிமா பாடலாசிரியாரக வேண்டும் என்ற லட்சியத்தை அடையும் பொருட்டு தேடியலைந்து.. தீவிர முயற்சிகளின் விளைவாக ‘வேடப்பன்’, ‘திருப்புகழ்’, ‘சோக்குசுந்தரம்’, ‘இந்திரசேனா’, ‘காட்டுமல்லி’ ஆகிய படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார் ஜெயங்கொண்டான்.  ஆனால் இப்போது இவரது வாழ்க்கைக் கதையை ‘பப்பாளி’ என்ற படமாக எடுத்திருக்கும் இயக்குநர் கோவிந்தசாமி, அதற்குரிய பெயரையோ, பணத்தையோ தனக்குக் கொடுக்காமல் ஏமாற்றுவதாக குற்றம் சுமத்துகிறார் ஜெயம்கொண்டான்.

நடந்தது என்ன என்பதை ஜெயம்கொண்டானே சொல்கிறார்..

govindamoorthy-1

“கோவிந்தமூர்த்தி தனது முதல் படமான ‘கருப்பசாமி குத்தகைக்காரர்’ எடுத்து முடித்த சமயத்தில் எனது கடைக்கு வந்து எனக்கு அறிமுகமானார். அதன் பிறகு கடைக்கு அடிக்கடி வருவார். சொந்த வீட்டில் சாப்பிடுவது போல சாப்பிட்டு விட்டு போவார். அவர் ஒரு வளரும் இயக்குனர் என்ற நிலையில் என் கடைக்கு அவர் வந்து சாப்பிட்டுவிட்டு செல்வதையே நான் பெருமையாகவே நினைத்தேன்.

அவர் தனது அடுத்த படமான ‘வெடிகுண்டு முருகேசன்’ ஆரம்பித்த சூழ்நிலையில் நான் பாடலாசிரியர் என்பதை அறிந்து ‘என் படத்தில் உங்களுக்கு வாய்ப்புத் தருகிறேன். நீங்க நடிக்க கூட செய்யலாம்’ என்றார். மகிழ்ந்தேன். இரவில் என் கடைக்கு வந்து மணிக்கணக்கில் இருந்து, சாப்பிட்டுவிட்டு ‘உற்சாகமாக’ கிளம்பிப் போகும் அவருக்கு அனைத்து செலவுகளையும் நான்தான் செய்தேன்.

ஆனாலும், ‘வெடிகுண்டு முருகேசன்’ படத்தில் அவர் எனக்கு வாய்ப்பு தராதபோதும் அதற்காக நான் வருத்தப்படவில்லை. அவருக்கு பாடலாசிரியர் விஷயத்தில் ஏதாவது நிர்பந்தம் இருக்கலாம். அடுத்த படத்தில் தருவார் என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன்.

அடுத்து அவர் கொஞ்சநாள் படம் இல்லாமல் இருந்தபோது, அவருக்கு நான் வழக்கம் போலவே பண உதவிகள் செய்தேன். இந்த நிலையில் என் குடும்பம், வாழ்க்கை, தொழில் பற்றி அடிக்கடி என்னிடம் பேசினார். தள்ளுவண்டி கடை அனுபவங்கள், வட்டிக்கு பணம் கொடுத்தவரிடம் நான் பட்ட கஷ்டங்கள், மற்ற பிரச்சினைகளை சமாளிப்பது என்று… நான் என் வாழ்வில் நடந்த எல்லாவற்றையும் சொன்னேன்.

ஒரு நிலையில் அவர் பேசப் பேச, அவர் எனது வாழ்க்கையை அப்படியே கதையாக எழுதிக் கொண்டிருக்கிறார் என்பது எனக்கு புரிந்தது. நானும் அவரும் இதைப் பற்றி பல முறை விவாதிப்போம். நான் பல காட்சிகளையும் சொன்னேன். ‘இன்னிக்கு நம்ம நாலு பேருக்கு வணக்கம் வச்சா, நமக்கு நானூறு பேர் வணக்கம் வைப்பாங்க’ என்பது உட்பட பல வசனங்களையும் சொன்னேன்.

ஒரு முறை அவர் என்னிடம் ‘நீங்க ஏன் சரவணபவன் முதலாளி மாதிரி ஆவதை லட்சியமாக கொள்ளக்கூடாது…?’ என்று கேட்டார். ‘அதுதான் என் லட்சியம் என்றால் நான் ஊரிலேயே இருந்திருப்பேன். அதை போகிற போக்கில் செய்திருப்பேன். படித்து கலெக்டராகவும் ஆகி இருப்பேன். அது மட்டுமல்ல…. ஒரு தள்ளுவண்டிக் கடைக்காரன் கலெக்டராக முடியாதா…?’ என்றேன். அன்று அவர் முகத்தில் பூரண திருப்தி. அடுத்த சில நாட்கள் அவர் கடைக்கு வரவில்லை. அவர் புதுப்படம் ஒன்றை ஆரம்பித்து விட்டார் என்று தகவல் மட்டும் எனக்குக் கிடைத்த்தது.

அப்பறம் என் கடைக்கு அவர் வரவே இல்லை. நான் போன் செய்தபோதும் எடுக்கவே இல்லை. நான் பாடல் எழுதும் திறமையை பலமுறை பாராட்டி இருக்கும் அவரிடம் ஒரே ஒரு பாடல் எழுத வாய்ப்புக் கேட்டு பல முறை அவர் ஆபீசுக்கு நான் நடையாய் நடந்தேன். ஒருமுறை கூட அவர் என்னை சந்திக்கவே இல்லை. பல மணி நேரம் உக்கார வைத்துவிட்டு பார்க்க நேரமில்லை என்று தகவல் சொல்லி அனுப்பி விடுவார். நான் நொந்து போனேன். நான் அவருக்கு செய்த உதவிகளை உடன் அனுபவித்த அவரது உதவியாளர்கள் சிலரே, அவர் என்னை புறக்கணிப்பதை சொல்லி மனசாட்சியோடு மிகவும் வருந்தினார்கள். சரி மனிதர் மாறி விட்டார் என்று விட்டுவிட்டேன்.

ஆனால் அண்மையில் ‘பப்பாளி’ படத்தின் கதை என்று அவர் கொடுத்த பேட்டிகளில் ஒரு தள்ளுவண்டி கடைக்காரன் ஐ.ஏ.எஸ். ஆவதுதான் படத்தின் கதை என்று சொல்லி இருக்கிறார். விசாரித்தபோது படத்தில் எனது வாழ்க்கைக் கதையில் நான் சொன்ன காட்சிகள். நான் சொன்ன வசனங்கள்… தொழிலில் எனது மேனரிசம் எல்லாம் இருப்பதாக அந்தப் படத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் சொல்கிறார்கள். எனது இந்த 31 வயதுக்குள் எனது வாழ்க்கை படமாவதும், அதில் நான் சொன்ன வசனங்கள் இடம் பெறுவதும் எனக்கும் மகிழ்ச்சிதான்.

ஆனால் என்னை வைத்து கதை செய்து இருக்கும் இயக்குனர் கோவிந்த மூர்த்தி அவரே வாக்களித்தபடி பாடலாசிரியரான எனக்கு இந்தப் படத்தில் ஒரே ஒரு பாடலாவது எழுதும் வாய்ப்பை கொடுத்திருக்கலாம். குறைந்தபட்சம் ஒரு முறை சந்தித்து என்னை ஒரு பாட்டு எழுதச் சொல்லி கேட்டுவிட்டு, அதன் பிறகு பாட்டு நான் எதிர்பார்க்கும்படி இல்லை என்றாவது சொல்லியிருக்கலாம்.

ஒருவேளை கவிஞர் யுகபாரதிக்கு எல்லாப் பாடல்களையும் தர வேண்டும் என்று அவர் முடிவு செய்து இருந்தால், அவரே முன்பு சொல்லியபடி, என் கதையில் உருவாகும் படத்தில் எனக்கு நடிக்க ஒரு சின்ன கேரக்டராவது தந்திருக்கலாம். அதற்கும் விருப்பமில்லையா..? என்னை ஒரு முறை சந்தித்து எப்படி இருக்கீங்க..? என்று ஒரு வார்த்தையாவது நட்போடு கேட்டிருக்கலாம். என்னை இப்படி முற்றிலுமாக புறக்கணித்ததைத்தான் என்னால் தாங்க முடியவில்லை.

சினிமா என்பது டீம் வொர்க். இங்கே நட்புதான் ஜெயிக்கும் என்கிறார்கள். நான் அவருக்கு கை கொடுத்து எவ்வளவோ உதவியிருக்க, அவர் எனக்குக் கை கொடுத்தால் என்ன குறைந்து விடுவார்? ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து இருவருமே முன்னேறுவது தப்பா..?” என்று கலக்கத்தோடு கேட்கிறார் ஜெயங்கொண்டான்.

Our Score