இந்தப் படத்தில் ஆதவ் கிருஷ்ணா, சிம்ரன், படவா கோபி, வினோதினி, ஜாவா சுந்தரேசன், ரோகித், தனஞ்செயன், முத்து புவன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இயக்கம் – மகாலட்சுமி முருகன், கதை, வசனம் – அசோக் அமிர்தராஜ், தயாரிப்பு – பி.ரகு, ஒளிப்பதிவு – என்.எஸ்.சதீஷ்குமார், இசை – அஸ்வமித்ரா, படத் தொகுப்பு – காந்த், கலை இயக்கம் – ரஜினி சேகர், சண்டை பயிற்சி இயக்கம் – தளபதி தினேஷ், உடைகள் – முருகன், ஒப்பனை – ஆர்.கே., பாடல்கள் – சினேகன், அருண் பாரதி, மணி அமுதவாணன், இயக்குநர் சரண், நடன இயக்கம் – தினா, கிருஷ்ணா, பத்திரிக்கை தொடர்பு – சதீஷ் (எய்ம்).
இதுவும் ஒரு காதல் திரைப்படம்தான். ஆக்சன் காட்சிகளுக்கு ஏற்ற உடல் அமைப்பு, முகப் பொருத்தமோ இல்லாத ஹீரோக்கள் எனில் அவர்களுக்கு மிக எளிதாக கிடைப்பது காதல் கதைதான். அப்படித்தான் இந்தப் படத்தின் ஹீரோ ஆதவ் கிருஷ்ணாவுக்காக எழுதப்பட்ட காதல் கதை இது.
ஹீரோ ஆதவ் கிருஷ்ணா கல்லூரியில் படிக்கும் பொழுது சக மாணவியான சிம்ரன் அத்வானியை காதலிக்கிறார். சிம்ரனின் அம்மா டைவர்ஸ் வாங்கிக்கொண்டு காசிக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார்.
சிம்ரனின் அப்பாவும், அவருடைய தொழில் நண்பரும் மிக நெருங்கிய கூட்டாளிகள். சிம்ரனுடன் அவரது பாட்டியும் அந்த வீட்டில் இருக்கிறார். சிம்ரன் ஹீரோவிடம் “என்னைவிட்டு ஓடி சென்ற தாயிடம் உன்னை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைக்கிறேன்” என்று சொல்லி ஹீரோவை அழைத்துக் கொண்டு காசிக்கு போகிறார்.
ஆனால், காசியில் திடீரென்று ஹீரோயின் காணாமல் போக ஹீரோ தவியாய் தவிக்கிறார். ஹீரோதான் ஹீரோயினை எங்கேயோ கடத்திச் சென்று வைத்திருப்பதாக ஹீரோயினை அப்பா தன்னுடைய பண பலத்தாலும், அதிகார பலத்தாலும் காசி போலீசாருக்கு உத்தரவிட… அவர்கள் ஹீரோவை தூக்கிக் கொண்டு வந்து மொத்தி எடுக்கிறார்கள்.
ஆனால் உண்மையில் ஹீரோவுக்கு ஹீரோயின் காணாமல் போன சம்பவத்தில் தொடர்பில்லை என்பது தெரிய வர… இப்போது ஹீரோவும் அதே காசியில் இருந்து கொண்டே ஹீரோயினை தேடுகிறார்.
இன்னொரு பக்கம் ஹீரோயினின் அப்பாவும் அங்கே வந்து அவரும் ஹீரோயினை தேடுகிறார். ஆக, கடைசியில் அந்த ஹீரோயின் எங்குதான் போனார்? அவரை கடைசியாக கண்டுபிடித்தார்களா… இல்லையா? ஹீரோ, ஹீரோயின் காதல் என்னவானது? இருவரும் திருமணத்தில் இணைந்தர்களா?.. இல்லையா?.. என்பதுதான் இந்தக் காதல் திரைப்படத்தின் திரைக்கதை.
ஹீரோ ஆதவ் கிருஷ்ணா ஹீரோக்களுக்கு எப்போதும் இருக்கும் டெம்ப்ளெட் நடிப்பையே காண்பித்து இருக்கிறார். இன்னும் கொஞ்சம் சிறப்பாக அவரை நடிக்க வைத்திருக்கலாம். ஹீரோயினும் அதேபோலத்தான்.. பார்ப்பதற்கு கொஞ்சம் அழகாக இருந்தாலும் நடிப்பு என்பது அவரிடமிருந்தும் வரவழைக்கப்படவில்லை. அதிலும் இடைவேளைக்குப் பிறகு அவருக்கு அதிகமான காட்சிகளே இல்லாமல் ஓரங்கட்டப்பட்டிருக்கிறார்.
ஹீரோவின் அம்மாவாக நடித்திருக்கும் வினோதினியின் சீரியல் பைத்திய கதாப்பாத்திரம் கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கிறது. ஹீரோவின் தம்பியும் சில இடங்களில் புன்னகைக்க வைத்திருக்கிறான்.
ஹீரோயினின் அப்பா தன்னுடைய முரட்டுத்தனமான வில்லன் கதாபாத்திரத்தை செய்து இருந்தாலும் கடைசியாக உண்மை தெரிந்து தன்னுடைய ஈகோவை விட்டுவிட்டு ஹீரோவைக் கட்டி அணைத்துவிட்டு செல்வது, பாராட்டுத்தக்க நடிப்பு.
ஹீரோயினின் பாட்டியும், ஹீரோயின் அப்பாவின் தொழில் முறை நண்பராக நடித்தவரும் திரைக்கதை நகர்வதற்கு உதவியிருக்கிறார்கள்.
ஹீரோயினின் அம்மா கதாபாத்திரம் ஏதோ பெரிய அளவுக்கு பில்டப் செய்யப்பட்டிருப்பதால் நிச்சயம் ஹீரோயின் காணாமல் போன கதைக்குள் வருவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் வரவில்லை. சொதப்பிவிட்டார் இயக்குநர்.
அதேபோல் ஹீரோயின் காணாமல் போனதில் அவருடைய அப்பாவுக்கும் ஏதாவது பங்கு இருக்குமோ என்று நம்முடைய சினிமாத்தனமான மூளை நமக்கு உணர்த்தியது. ஆனால் அதுவும் புஸ்ஸாகி போய்விட்டது.
கடைசியாக இந்தக் காதல் கதை, இந்திய சினிமாவில் பரபரப்பைக் கூட்டிக் கொண்டிருக்கும் இப்போதைய டிரெண்ட்டான உடல் உறுப்பு திருட்டு என்கின்ற கதைக்குள் திசை திருப்பிவிட… அங்கே காதல் சுத்தமாக காணாமல் போய்விட… நமக்கும் படம் எப்படியோ முடிந்தால் போதும் என்கின்ற உணர்வையே தந்து விட்டது.
படத்தில் அவ்வப்பொழுது போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து முகத்தை காட்டும் சாம்ஸின் நடிப்புதான் நமக்குக் கிடைத்திருக்கும் ஒரேயொரு ஆறுதல்.
ஒளிப்பதிவு பரவாயில்லை என்ற ரகம். ஆனாலும் காசியைகூட கட்டுவதில் கஞ்சத்தனம் காட்டி இருக்கக் கூடாது. இன்னமும் அழகாக காசி நகரை படமாக்கி இருக்கலாம். ஏனென்றால், இதைவிடவும் சிறப்பாக இதே காசியை முன்பே பல படங்களில் பார்த்து அனுபவம் நமக்கு உண்டு. ஹீரோயினைகூட அவ்வளவு அழகாக காட்டாத ஒளிப்பதிவாளருக்கு நமது வன்மையான கண்டனங்கள்.
பாடல்கள், இசை பரவாயில்லை என்ற ரகம். பின்னணி இசை அதைவிட பரவாயில்லை என்ற ரகம். இயக்குநர் இந்தப் படத்தில் இதற்காக அதிக மெனக்கடவில்லை என்று தெரிகிறது.
டைவர்ஸ் பெற்ற பெற்றோரின் இடையில் நாயகியின் காதல் அல்லாடப் போகிறது என்று நாம் நினைத்த தருணத்தில் திடீரென்று கதையை மாற்றி, ஹீரோயினையும் படுத்த படுக்கையாக்கி அவரிடம் இருந்து உறுப்பு திருட்டு என்கின்ற ஒரு விஷயத்தை சொல்லி கடைசியாக கதையை இடம் மாற்றிவிட்டார் இயக்குநர்.
இதனாலையே படத்தின் முடிவு நமக்கு ரசிக்கும்படியாகவும் இல்லை. மனதைத் தொடும்படியாகவும் இல்லை.
இன்னமும் சிறப்பாக இந்தப் படத்தை உருவாக்கி இருக்கலாம்.
RATING : 3 / 5









