லோகோஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் புதிய திரைப்படம்..!

லோகோஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் புதிய திரைப்படம்..!

சினிமா ரசிகர்களுக்கான 2021 ஆம் ஆண்டின் மிகப் பெரும் திருவிழாவை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதில் பெருமை கொள்கிறது  ராஜ்கமல் பிலிம்ஸ் (RKFI) நிறுவனம்.

கலைஞானி, உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், வெற்றிகரமான இளம் இயக்குநரான லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில், Rock Star அனிருத்தின் இசையில் திரையரங்குகளை கோலாகல திருவிழாவாக்கிட தயாராகி வருகிறது ஒரு புதிய படைப்பு.

இன்னமும் பெயர் வைக்கப்படாமல் ‘Kamal Haasan 232’ என்று தற்போது அழைக்கப்படும் இந்தப் படம் தனக்கென ஒரு பாதை அமைத்து, அதை ராஜபாட்டையாக மாற்றிக் காட்டிய நம்பிக்கை நாயகன்... ரசிகர்கள் கொண்டாடும் உலக நாயகன் கமல்ஹாசனின் 232-வது திரைப்படமாகும்.

சினிமாவைக் கொண்டாடி, ரசிகர்கள் கொண்டாடும் சினிமாவை தயார் செய்யும் ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த படைப்பு இது. 

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்(RKFI), தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளாக சினிமாவின் கலையையும், திறனையும், தொழில் நுட்பத்தையும், வணிகத்தையும் தொடர்ந்து முன்னோக்கி எடுத்துச் சென்று கொண்டிருக்கும் பாரம்பரியம் கொண்ட நிறுவனம். 

1981-ம் ஆண்டு ‘ராஜபார்வை’யில் தன் பயணத்தை தொடங்கி ‘அபூர்வ சகோதரர்கள்’ மூலம் அதிசயிக்க வைத்து, இன்றைய தலைமுறையும் கொண்டாடும் ‘சத்யா’, ‘தேவர் மகன்’, ‘குருதிப்புனல்’, இந்திய சினிமாவின் சரித்திரத்தில் மைல் கல் முயற்சியான ‘ஹே ராம்’, ‘விருமாண்டி’, ‘விஸ்வரூபம்’, வயிறு குலுங்க சிரிக்க வைத்திடும் ‘சதிலீலாவதி’ என தமிழ் சினிமா வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த திரைப்படங்களுடன் தன் பயணத்தை தொடர்கிறது.

தமிழ் சினிமாவை, இந்திய சினிமா தாண்டி உலக சினிமா தரத்திற்கு கொண்டு சென்றிடும் தன் முயற்சியில் புதிய தொழில் நுட்பங்களான Dolby Stereo sound-ஐ, ‘குருதிப்புனல்’ திரைப்படத்திலும், திரைக்கதை எழுதும் மென்பொருளை ‘மருதநாயகம்’ திரைப்படத்திலும், Auro 3D தொழில் நுட்பத்தை ‘விஸ்வரூபம்’ திரைப்படத்திலும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலக வரலாற்றின் நிகரில்லா கலைஞன், நான்கு தலைமுறையாக இந்திய சினிமாவை தன் தோள்களில் தூக்கிச் செல்லும் கலைஞானி.

தன் நான்காவது வயதில் களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமாகி, முதல் படத்திலேயே நடிப்பிற்கு தேசிய விருது பெற்ற மகா நடிகன். தமிழகம், இந்தியா தாண்டியது இவர் சாதனைகளின் உச்சம். உலக சினிமா கண்டிராத கனவுகளை தன் 61 ஆண்டு கால திரைப்பயணத்தில் சாத்தியப்படுத்தியிருக்கும் பெருங்கலைஞன்.

‘மாநகரம்’, ‘கைதி’ என வெற்றிப் படங்களை துவக்கமாய் வைத்து முன் வந்திருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தன் வண்ணக் கனவை, எழுத்தாக்கினால், அதை படமாக்கி, தியேட்டர்களை திருவிழாவாக்க முடியும் என சாதித்து காண்பித்து இருக்கும் இளம் திறமையாளர்.

தான் இயக்கிய இரண்டு படங்களிலேயே தமிழ் சினிமாவின் நாளைய பக்கத்தில் தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் கலைக்கு சொந்தக்காரர்.

உலக நாயகனின் தீவிர விசிறியான இவர், தன் ஆதர்ச நாயகனைப் போலவே சினிமாவின் மீதான காதலுக்காக சிரமமோ, நேரமோ பாராமல் தன் சினிமாவை செதுக்கிடும் கலைக் காதலர்.

திரையில் தான் கொண்டாடிய உலக நாயகனுடன், தன் நான்காவது திரைப்படத்தில் கை கோர்த்து 2021-ம் ஆண்டின் மிகப் பெரும் திருவிழாவை படைத்திட தயாராகி வருகிறார்.