full screen background image

ஹாலிவுட் தரத்தில் சைக்கோ த்ரில்லர் டைப்பில் உருவாகியுள்ள ‘லாக்’ திரைப்படம்..!

ஹாலிவுட் தரத்தில் சைக்கோ த்ரில்லர் டைப்பில் உருவாகியுள்ள ‘லாக்’ திரைப்படம்..!

பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ், R.P.G. ராயல் பினோபென் குழு, சக்திவேல் பிக்சர்ஸ்  ஆகிய நிறுவனங்கள் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள படம் லாக்’.

இப் படத்தில் நாயகனாக சுதிர், நாயகியாக மது நடிக்க, இரண்டாவது நாயகியாக ஹரிணி நடிக்கிறார். இவர்கள் தவிர நடன இயக்குநர் பாரதி, சீனிவாச வரதன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்குமே ஏற்கெனவே சில படங்களில் நடித்த அனுபவம் உள்ளவர்கள்.

ஒளிப்பதிவு – நந்தா, இசை – விக்ரம் செல்வா, படத் தொகுப்பு – மகேந்திரன் கணேசன். இப்படத்தை இயக்குநர் ரத்தன் லிங்கா இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கெனவே ‘அட்டு’ என்ற படத்தை இயக்கி, அதன் மூலம் தமிழ்த் திரையுலகில் பரவலான கவனத்தைப் பெற்றவர்.

இந்த ‘லாக்’ படம் பற்றி இயக்குநர் ரத்தன் லிங்கா பேசும்போது, “இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு கனவு உண்டு. அதை நோக்கிய பயணத்தையே அவர்கள் வாழ்க்கையாக வாழ்கிறார்கள். சிலருக்கு அந்தக் கனவுகள் பலிக்கின்றன. சிலருக்குப் பாதிதான் நிறைவேறுகின்றன. சிலருக்குக் கனவுகள் தொடக்கத்திலேயே கருகிப் போய் விடுகின்றன.

இந்த சமுதாயத்தில் நாம் பழகும் மனிதர்கள் நல்லவர்களா..? கெட்டவர்களா..? என்பதை நாம்தான் கண்டறிய வேண்டும். ஏனெனில் இந்த உலகில் நம்மை நாம்தான் காப்பாற்றிக் கொள்ள முடியும். இல்லாவிட்டால்  அதற்குண்டான விளைவுகளை நாம் அனுபவித்தே தீர வேண்டும். இதுதான் இந்த ‘லாக் ‘ படத்தின்  கரு.

சமூக விரோதிகளும், தீய சக்திகளும் சக மனிதர்களின் கனவில் கனலை மூட்டி விடுகிறார்கள். அவர்கள் கண்ட கனவு, பூவாக மலரும் முன்பே மிதித்துச் சிதைத்து விடுகிறார்கள்.

ஒரு நகரத்தில் சைக்கோ குணத்துடன் காமக் கொடூர கொலைகாரர்கள் ஐந்து பேர் ஊடுருவுகிறார்கள். அடுத்து தங்கள் காமப் பசிக்காக நாயகி ஜூலி மீது கண் வைக்கிறார்கள். மிருகங்களின் கொடூர கரங்களிலிருந்து எப்படி ஜூலி தப்பிக்கிறாள்…? சைக்கோ கொலையாளிகள் என்ன ஆனார்கள்..? என்பதுதான் இந்த லாக்’ படத்தின் கதைச் சுருக்கம்.  

அடுத்தடுத்து முடிச்சுகள், திருப்பங்கள் என்று கதை விறுவிறுப்புடன் நகர்கிறது. இப்படி ஹாலிவுட் தரத்தில் வித்தியாசமான சைக்கோ த்ரில்லர் படமாக இந்த லாக்’ படம் உருவாகியுள்ளது

ஒரு முழு நீள விறுவிறுப்பான சைக்கோ த்ரில்லராகவும், படம் பார்க்கும் ரசிகர்களை இருக்கை நுனியில் லாக் செய்து விடும் அளவுக்குத் திகிலும் திருப்பங்களும் கொண்ட படமாகவும் ‘ லாக் ‘ உருவாகியிருக்கிறது…” என்றார்.

இன்று இப்படத்தின் பஸ்ட் லுக் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘லாக்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை பார்த்த திரையுலகப் பிரபலங்கள் பலரும் படக் குழுவினரைப் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

Our Score