சுரபி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜோதி முருகன் மற்றும் தாய் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கார்த்திக் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘வேட்டை நாய்.’
ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ராம்கி நடித்துள்ளார். கதாநாயகியாக சுபிக்சா நடித்துள்ளார்.
கணேஷ் சந்திர சேகரன் இசையமைக்க, முனீஸ் ஈஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத் தொகுப்பை விஜய் கிருஷ்ணன் கவனிக்க, சண்டைக் காட்சிகளை சூப்பர் சுப்பராயனும், நடனத்தை காதல் கந்தாஸ் மாஸ்டரும் வடிவமைத்துள்ளனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை வடபழனியிலுள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில் படத்தின் நாயகனான ஆர்.கே. சுரேஷ் பேசும்போது, “படங்களில் முத்தக் காட்சியில் நடிக்க வேண்டுமென்றால் முன்கூட்டியே என் மனைவியின் அனுமதியைப் பெற்றுவிடுவேன். இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள லிப் லாக் முத்தக் காட்சியைப் பார்க்கும்போது எதுவும் வித்தியாசமாக, விரசமாகத் தெரியாது. படம் பார்க்கும் கணவன், மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து தங்களை அதற்குள் பொருத்திக் கொள்வார்கள்…” என்றார்.
இவருக்குப் பின்பு பேச வந்த நடிகர் ராம்கி, “நானும் இதுவரை 100 படங்களில் நடித்துள்ளேன். ஆனால் ஒரு படத்தில்கூட, எந்த நாயகிக்கும் லிப்லாக் கிஸ் கொடுத்ததே இல்லை. இந்தப் படத்தில் ஹீரோவுக்கு மட்டும் லிப்லாக் கிஸ் கொடுக்கும் காட்சியை வைத்துவிட்டு, எனக்கு மட்டும் இயக்குநர் ஓரவஞ்சனை செய்து விட்டார்…” என்றார் ஏக்கமாக.