எந்த ஆண்டும் இல்லாமல் இந்தாண்டு டிசம்பர் 12-ம் தேதி ரஜினியின் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான நாள்.. ரஜினியின் 40 வருட கால சினிமா வாழ்க்கையில் அவருடைய பிறந்த நாளில் அவர் நடித்த படமும் வெளிவருவது இதுதான் முதல் முறை.
அந்த வகையில் இந்த லிங்காவுக்கு மிக மிக முக்கியத்துவம் கொடுத்து வரவேற்கக் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
‘லிங்கா’ திரைப்படத்தின் விற்பனை 200 கோடியையும் தாண்டியுள்ளது. இதுவே ஒரு சாதனைதான். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் சுமார் 5000 திரைகளில் திரையிடப்படவுள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவில் இந்தப் படத்தை வேந்தர் மூவிஸ் ரிலீஸ் செய்கிறது. தமிழகத்தில் 600 தியேட்டர்கள் மற்றும் கேரளாவில் 400 தியேட்டர்களில் இந்தப் படம் ரிலீஸாகிறது.
அமெரிக்காவில் 200–க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. அமெரிக்காவில் ஒரு தமிழ்த் திரைப்படம் 200 தியேட்டர்களில் திரையிடப்படுவது இதுதான் முதல்முறையாம். இங்கிலாந்தில் 85 தியேட்டர்களிலும், பிரான்சில் 50 தியேட்டர்களிலும், டென்மார்க்கில் 20 தியேட்டர்களிலும், ஜெர்மனியில் 16 தியேட்டர்களிலும், ஹாலாந்தில் 9 தியேட்டர்களிலும், சுவிட்சர்லாந்தில் 6 தியேட்டர்களிலும், நார்வேயில் 4 தியேட்டர்களிலும், பெல்ஜியத்தில் 3 தியேட்டர்களிலும், சுவீடன் நாட்டில் 2 தியேட்டர்களில் ‘லிங்கா’வை திரையிட ஒதுக்கி உள்ளனர். வெளிநாடுகளில் இதற்கு முன் ரஜினியின் எந்த படமும் இவ்வளவு அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டது இல்லை.
தமிழ்நாட்டில் அனைத்து தியேட்டர்களிலும் டிக்கெட் முன் பதிவுகள் நாளை முதல் துவங்க இருக்கிறது. முதல் நாள் முதல் காட்சியை அனைத்து தியேட்டர்களிலும் ரஜினி ரசிகர்களுக்காக ரசிகர் மன்ற ஷோவாக ஒதுக்கியிருக்கிறார்கள். பல வெளியூர் தியேட்டர்களில் நள்ளிரவு 1 மணி காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சென்னை தியேட்டர்களில் அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி துவங்குகிறது.
தியேட்டர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுவிட்டதால் இப்போதே அந்தத் தியேட்டர்களில் லிங்கா கட்அவுட்டுகள் வைப்பதும், போஸ்டர்கள் ஒட்டுவதும், தோரணங்களை கட்டுவதுமாக ரஜினி ரசிகர்கள் லிங்காவை வரவேற்க ஆயத்தமாகியுள்ளார்கள்.
இன்றைய இள வயது ஹீரோக்களின் ரசிகர்களையும் ஒரு படி தாண்டி ரஜினி ரசிகர்கள் அன்றைக்குக் காட்டவிருக்கும் பாய்ச்சல்தான் ‘லிங்கா’வை வெற்றியாக்கும் என்று நம்பலாம்..!