full screen background image

‘லிங்கா’வினால் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களின் போராட்டம் நிறுத்தம்..! – புதன்கிழமைவரையிலும் அமைதியாம்..!

‘லிங்கா’வினால் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களின் போராட்டம் நிறுத்தம்..! – புதன்கிழமைவரையிலும் அமைதியாம்..!

‘லிங்கா’ படம் பற்றி வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேந்தர் மூவிஸ் அறிவித்திருந்தும் ‘லிங்கா’ படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்கள் தங்களது நஷ்ட புலம்பலை நிறுத்தியபாடில்லை.

இன்று காலை ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் ரஜனியை சந்திக்கப் போவதாக சில விநியோகஸ்தர்கள் அறிவித்திருந்தார்கள்.

இதற்காக நேற்றைக்கே சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் சென்று இன்றைய நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கேட்டு மனுவையும் கொடுத்திருந்தனர்.

அந்த மனுவில், “நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘லிங்கா’ திரைப்படத்தை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி வெளியிட்டுள்ளோம். ஆனால் சரியாக வசூலாகவில்லை.

குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி ஏரியாவில் இத்திரைப்படத்தை ரூ.4.20 கோடி கொடுத்து வாங்கினோம். ஆனால் இதுவரை ரூ.1.50 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது. இதே நிலைமைதான் பல ஏரியாக்களில் நிலவுகிறது.

இதனால் திரையரங்க உரிமையாளர்கள் எங்களை நெருக்குகின்றனர். இது தொடர்பாக 22-ம் தேதி (நாளை) ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினிகாந்தை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கவுள்ளோம்.

அன்றைய தினம் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் பலர் வருகின்றனர். அதனால் உரிய பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம்..” என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

சொன்னபடி இன்று காலையில் அவர்கள் ராகவேந்திரா மண்டபத்திற்கு வந்தபோது “அவர்களது  குறைகள் ரஜினி ஸாரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர் பிரச்சினையைத் தீர்க்கிறேன் என்று சொல்லியிருப்பதாக..” விநியோகஸ்தர்களிடம் ரஜினி தரப்பில் தெரிவிக்கப்பட்டதாம்.

லிங்கா படத்தின் நஷ்டம் பற்றி கூறிய திருச்சி தஞ்சை விநியோகஸ்தரான சிங்காரவேலன், “எங்களுக்குத் தாங்க முடியாத அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. எங்களால இதை சமாளிக்கவே முடியாது. மேலும் தொடர்ந்து நாங்கள் இந்த சினிமா துறையில் இருக்கவே முடியாத சூழலும் ஏற்பட்டிருக்கிறது.

தியேட்டர்காரர்களிடத்தில் நாங்கள் டெபாஸிட் வாங்கித்தான் படத்தைக் கொடுத்திருக்கிறோம். இப்போ அவங்க நஷ்டத் தொகையைத் திரும்ப கேக்குறாங்க. நாங்க கொடுக்கலைன்னா அவங்க சங்கம் மூலமா எங்களுக்கு தடை உத்தரவு போட்டிருவாங்க. அப்புறம் நாங்க விநியோகம் செய்ய விரும்புற அடுத்தடுத்த படங்களுக்கு தியேட்டரே கிடைக்காது. எங்களோட சினிமா தொழிலே காலியாயிரும்.. நாங்க இந்த நஷ்டத்தை எங்களுக்கு வித்தவங்ககிட்டதான் கேக்க முடியும்.

அதுக்கு முன்னாடி இந்த விஷயத்தை ரஜினி ஸாரின் கவனத்துக்குக் கொண்டு போகணும்னு நினைச்சோம். அதுக்காகத்தான் பப்ளிக்கா பேட்டி கொடுத்தோம்.. அது மாதிரியே ரஜினி ஸாரின் கவனத்துக்கு எங்க போராட்டம் போயிருச்சு. இன்னிக்கு ரஜினி ஸார் “2 நாள்ல எங்களை சந்திக்கிறதா” சொல்லியிருக்கிறார்.. அதுனால நாங்களும் புதன்கிழமைவரையிலும் காத்திருக்கிறதா முடிவு செஞ்சிருக்கோம்..” என்றார்.

Our Score