full screen background image

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மன்சூரலிகான்..!

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மன்சூரலிகான்..!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்திருக்கிறார். தன்னுடைய தலைமையில் ‘புதிய செயல் வீரர்கள்’ என்ற பெயரில் ஒரு அணி போட்டியிடும் என்றும் கூறியுள்ளார்.

இது பற்றி நேற்று அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Mansoor Ali khan press meet-12

“தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ஏற்கெனவே போட்டியிட்டவர்களே, மீண்டும் மீண்டும் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பல வருடங்களாக அதே கொடுமையே நடந்து கொண்டிருக்கிறது.

இவங்க ஜெயிச்சி வந்தால் அவங்க கோர்ட்டுக்குப் போவாங்க, அவங்க ஜெயிச்சி வந்தால் இவங்க கோர்ட்டுக்குப் போவாங்க. தமிழ்நாட்டுல தொடப்பம் விக்கிறவன்கூட சங்கம் வச்சிருக்கான்.. காகிதம் பொறுக்கிறவனும் சங்கம் வச்சிருக்கான்.. அவனெல்லாம் சங்கத்தை நாணயமா, நல்லவிதமா நடத்தறான்.

ஆனால், தமிழ்நாட்டுல இருக்கிற பெரிய சங்கமா இருக்கிற, 28 கிராஃப்ட்டுக்கு வேலை கொடுக்கிற தாய் சங்கமான தயாரிப்பாளர் சங்கம், ரோட்டுல விக்கிற திருட்டு விசிடியை ஒழிக்க முடியாத ஒரு சங்கமா இருக்கு.

இருக்கிற பிரச்சனைய தீருங்கன்னு சொன்னால் அதை யாரும் கேக்கறதில்லை. சாட்டிலைட் உரிமை, எப்.எம்.எஸ். உரிமை ஆகியவை 350, 400 படங்களுக்கு மேல் விற்கப்படாமலே இருக்கிறது. அதை யாரும் கண்டு கொள்வதேயில்லை.. அதற்கு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

சின்னச் சின்ன தயாரிப்பாளர்கள் எல்லாம் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கோம். அதனால், இந்தத் தேர்தலில் இதுவரைக்கும் தேர்தலில் போட்டியிடாதவர்களை வைத்துக் கொண்டு ஒரு தனி அமைத்து நான் போட்டியிட உள்ளேன். எங்களோட அணியின் பெயர் ‘புதிய செயல் வீரர்கள் அணி’. 24 மணி நேரமும் சங்கத்துக்காக உழைக்க நினைக்கிற ஆட்கள் என் பின்னாடி வாங்க. கால் மேல கால் போட்டு தூங்கற ஆள் எனக்கு வேணாம்.

நான் பதவிக்கு வந்தால் அடுத்த நாளே பைரசி ஒழிக்கப்படும். பேருந்துகளில் எல்லாம்கூட படங்களைப் போடுகிறார்கள். அப்படி போடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்.. எப்படி கவனிக்க வேண்டுமோ.. அப்படி அவர்களைக் கவனிப்பேன். ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் போஸ்டர் அடித்து ஒட்டுவேன். ‘புதுப் படம் போட்டால் தெரியப்படுத்துங்கள் தக்க சன்மானம் வழங்கப்படும்’ என்றும் அறிவிப்பேன்.

ஒரு கோழி அதோட குஞ்சுகளைப் பாதுகாக்கறதுக்கு பருந்தை அடிச்சித் துரத்துது.. அப்படின்னா என்னோட படத்தோட திருட்டு விசிடிய விக்கிறான்னா அவனை அடிக்கிறதுலயும், உதைக்கிறதுலயும் என்ன தப்பு இருக்கு.? என் சொத்தை நான் பாதுகாக்கணும்.. எங்க சொத்தைக் காப்பாத்த வேண்டிய சூழ்நிலையில் நான் இருக்கேன்.

நலிந்த தயாரிப்பாளர்களுக்காக பல திட்டங்களை வச்சிருக்கேன். டாப் ஹீரோவ வச்சி படம் எடுத்து அதுல வர்ற லாபத்தை வச்சி நூறு தயாரிப்பாளர்களுக்கு உதவலாம். வெளிநாட்டுல கலை நிகழ்ச்சி நடத்தலாம். இன்னும் பல திட்டங்களை வச்சிருக்கேன். என் உழைப்பை மத்தவன் சுரண்டறதுக்குவிட மாட்டேன். ஆதரிக்கிறவங்க ஓட்டுப் போடுங்க… இதான் என் தாரக மந்திரம்.

என்கூட போராட நினைக்கிறவங்க என் பின்னாடி வாங்க.. அதுக்காக ஜெயிலுக்குப் போகவும் நான் தயங்க மாட்டேன். வர்ற 25-ம் தேதி எல்லாரும் வேட்பு மனு தாக்கல் பண்ணின பிறகு, கடைசியா நாங்க தாக்கல் செய்யப் போகிறோம்…” என்றார்.

Our Score