ஜூன் 13-ல் ரஜினி வீட்டு முன் போராட்டம் – லிங்கா விநியோகஸ்தர்கள் அறிவிப்பு..!

ஜூன் 13-ல் ரஜினி வீட்டு முன் போராட்டம் – லிங்கா விநியோகஸ்தர்கள் அறிவிப்பு..!

இன்னும் ஒர  வார காலத்திற்குள் ‘லிங்கா’ படத்தின் நஷ்டஈட்டுப் பிரச்சினையில் சூப்பர்ஸ்டார் ரஜினியே தலையிட்டு பிரச்சினையை சுமூகமாக முடித்துவைக்கவில்லையெனில் வரும் ஜூன் 13-ம் தேதி சனிக்கிழமையன்று ரஜினியின் போயஸ் தோட்டத்து வீட்டு வாசலில் போராட்டம் நடத்தப்படும் என்று விநியோகஸ்தர் சிங்காரவேலன் தலைமையிலான லிங்கா படத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் அறிவித்துள்ளனர்.

லிங்கா நஷ்டஈட்டு விவகாரத்தில் நேற்றைக்கு திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்த கருத்துகளுக்கு பதில் சொல்லும்விதமாக இன்றைக்கு மதியம் லிங்கா படத்தின் விநியோகஸ்தர்கள் பத்திரிகையாளர் கூட்டத்தை நடத்தினார்கள்.

அந்தக் கூட்டத்தில் இந்த முடிவினை தெரிவித்துள்ளார்கள். மேலும் இந்தப் பிரச்சினையில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு தயாரிக்கும் படங்களுக்கு இனிமேல் எவ்வித தொழில் ஒத்துழைப்பும் தரப் போவதில்லை என்றும் முடிவெடுத்துள்ளனர்.

இந்த முடிவினை தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினருக்கும், விநி்யோகஸ்தர்கள் சங்கத்தினருக்கும் முறைப்படி தெரியப்படுத்தவிருப்பதாகவும் இவர்கள் வெளியிட்டுள்ள ஒரு அறிககையில் தெரிவித்துள்ளனர்.

Our Score