‘லிங்கா’ வழக்கு – கூடுதல் தகவல்களுடன் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார் இயக்குநர் ரவிரத்தினம்..!

‘லிங்கா’ வழக்கு – கூடுதல் தகவல்களுடன் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார் இயக்குநர் ரவிரத்தினம்..!

‘லிங்கா’ படத்துக்கு தடை கோரிய வழக்கில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் தாக்கல் செய்த பதில் மனுவில் முரண்பாடு இருப்பதாகவும், ரஜினிகாந்த்தின் குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் ‘முல்லைவனம் 999’ படத்தின் இயக்குநர் ரவிரத்தினம் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘லிங்கா’ படத்துக்கு தடை விதிக்கக் கோரி, ‘முல்லைவனம் 999’ படத்தின் இயக்குநர் ரவிரத்தினம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

‘முல்லைவனம் 999’ படத்தின் கதையைத் திருடித்தான், லிங்கா படத்தைத் தயாரித்துள்ளனர் என அவர் தனது மனுவில் குற்றம்சாட்டியிருந்தார்.

ரவிரத்தினத்தின் இந்த புகார் மனுவுக்கு, நடிகர் ரஜினிகாந்த், படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், கதாசிரியர் பொன்குமரன் ஆகியோர் தனித் தனியாக பதில் மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் மனுதாரர் ரவிரத்தினம் கூடுதல் பிரமாண பத்திரம் ஒன்றை மதுரை உயர் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் ரவிரத்தினம் கூறியிருப்பது இதுதான் :

“நடிகர் ரஜினிகாந்த் தன் பதில் மனுவில், படத்தின் கதை, திரைக்கதையை பொன்.குமரன் எழுதியதாகக் கூறியுள்ளார். ஆனால், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தனது மனுவில், கதையை பொன்.குமரன் எழுதியதாகவும், திரைக்கதையை தான் எழுதியதாகவும் கூறியுள்ளார். இருவரின் பதில் மனுவில் முரண்பாடு உள்ளது.

ரஜினியின் மகளின் நிறுவனம்தான் ‘லிங்கா’ படத்தின் விநியோகஸ்தர் உரிமையை பெற்றுள்ளது. பொன்குமரன் 2010-ல் ‘கிங் கான்’ என்ற பெயரில் பதிவு செய்திருந்த கதைதான் ‘லிங்கா’ என ரஜினிகாந்த் கூறியுள்ளார். ‘கிங் கான்’ படம் 2011-ல் வெளியாகிவிட்டது. ‘கிங் கான்’ கதை வேறு. ‘லிங்கா’வின் கதை வேறு. எனது இந்த மனுவை ஏற்று எனக்கு நீதி வழங்க வேண்டும்…” என மனுவில் ரவிரத்தினம் கூறியுள்ளார்.

ரவிரத்தினத்தின் இந்த புதிய குற்றச்சாட்டே காமெடியாக உள்ளது. ஒவ்வொரு கதாசிரியரும் தாங்கள் உருவாக்கிய கதைக்கு கற்பனையாக ஒரு பெயரைச் சூட்டுவார்கள். அந்த வகையில்தான் கதாசிரியர் பொன்.குமரன் தனது கதைக்கு ‘கிங் கான்’ என்று பெயர் சூட்டி எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

ஆனால் ‘கிங் கான்’ படம் வெளியாகிவிட்டது என்று சம்பந்தமே இல்லாமல் சொல்கிறார் ரவிரத்தினம். டப்பிங் படங்களுக்கு ஏதாவது சம்பந்தமில்லாமத டைட்டில்களை வைப்பது வழக்கம். அது போல ஏதோ ஒரு ஆங்கில படத்திற்கு ‘கிங் கான்’ என்று டைட்டில் வைத்திருப்பார்கள். அதைப் பார்த்துவிட்டு அதுதான் ‘கிங் கான்’ என்று நினைத்திருக்கிறார் போலும்..!

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதையில் கூடுதலாக சில விஷயங்களை தான் சேர்த்திருப்பதாக கூறுகிறார். இதனால் திரைக்கதை அவரது பெயரில் வெளி வரும். இது சினிமாவுலகத்தில் சகஜம். நீதிமன்றத்தில் இதெல்லாம் எப்படி கேள்வியாகும்..?

இரண்டும் ஒரே கதையாக இருக்கலாம். முல்லை பெரியாறு அணையை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கலாம். ஆனால் முந்திக் கொண்டது ‘லிங்கா’தான். 2010-லேயே கதையை எழுதி சினிமா சங்கத்தில் பதிவு செய்திருக்கிறார். ரவிரத்தினம் இதற்கு முன்பே அதை பதிவு செய்து வைத்திருந்தார் சினிமாவுலகம் கேள்வி கேட்கும். இல்லையேல் யார் முந்திக் கொண்டார்களோ.. அவர்களுக்குத்தான்..!

இல்லையெனில் ரவிரத்தினம் தன்னுடைய படத்தையும் முடித்துவிட்டு பின்பு ரிலீஸ் செய்யலாம். யாரும் தடை செய்யப் போவதில்லை..!

Our Score